September 25, 2021

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த நவீன சிகிச்சை!

ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்லுவதைவிட, நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். இது தொற்றுநோய் இல்லை; ஆனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் 2 கோடிப் பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது. இதில் 15 சதவீதம் பேர் குழந்தைகள்.இன்றைய நவீன மருத்துவ முன்னேற்றத்தில் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் நிறைய உள்ளன. மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வாமையைத் தடுப்பது, நோய்த்தொற்றைக் குணப்படுத்துவது என பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. முக்கியமாக ‘இன்ஹேலர்’ மற்றும் ‘நெபுலைசர்’ சிகிச்சைகள் இப்போது பிரபலம்.
astma maxresdefault
என்றாலும் சுமார் 20 சதவீதம் பேருக்கு இந்தச் சிகிச்சைகள் பலன் தருவதில்லை என்பதும் உண்மை. இவர்கள் ஆஸ்துமாவால் மிக மோசமாக அவதிப்படுவதுண்டு. இவர்களுக்காகவே ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது ‘ஆஸ்துமா தெர்மோபிளாள்டி’(Asthma Thermoplasty) சிகிச்சை.‘பிராங்கோஸ்கோப்பி’ எனும் கருவியைப் பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. கணினியுடன் இணைக்கப்பட்ட நீண்ட குழாயின் ஒரு முனையில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

பிவிசி ரப்பர் குழாயில் பல அடுக்கு மின்சார வயர்களைச் செலுத்தி இருப்பதைப் போல, இதனுள் வெளிச்சம் செலுத்த, காட்சிகளைப் பிரதிபலிக்க என்று அடுக்கடுக்கான வேலைகளைச் செய்ய பல வயர் அமைப்புகள் உள்ளன. நுரையீரலின் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும் குழாய்களுக்கும் ஏற்ப வளைந்து நெளிந்து செல்லும் நெகிழ்வுத்தன்மை உடையது. இதை நுரையீரலுக்குள் நுழைத்து, உள் உறுப்புகளைக் கணினித் திரையில் பார்த்தும் துல்லியமாக சிகிச்சை தர முடியும்.

தெர்மோபிளாஸ்டி சிகிச்சையின்போது இதை வாய் அல்லது மூக்கு வழியாக தொண்டையைத் தாண்டி நுரையீரலுக்குள் அனுப்புகிறார்கள். மூச்சுக்குழலை அடைந்ததும், கருவியின் முனையில் சுருங்கிய வடிவில் இருக்கும் பலூன் அமைப்பை வெளியேற்றி, பாராசூட்டை விரிப்பது போல் விரிக்கிறார்கள்.

அங்கு சுருங்கி இருக்கிற மூச்சுக்குழாய் இதனால் விரியும். இதைத் தொடர்ந்து ரேடியோ ஃபிரீகுவன்ஸி அலைகளை சுமார் 10 நொடிகளுக்குச் செலுத்துகிறார்கள். இவை 65 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உண்டாக்கி அங்கு அடைத்துக்கொண்டிருக்கும் மென்தசைகளைக் கரைத்துவிடும்.

இதன் பலனால் மூச்சுக்குழாய் அடைப்பு முற்றிலும் நீங்கிவிடும். மூன்று வாரங்கள் இடைவெளியில் மொத்தம் 3 முறை இதைச் செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் குறைந்தது 5 வருடங்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதில்லை. இந்தச் சிகிச்சையை வெளிநோயாளியாகவே மேற்கொள்ள முடியும். மறுநாள் இயல்பான பணிகளைச் செய்ய முடியும். ஒரே ஒரு நிபந்தனை, இதை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ளமுடியும். 2010ல் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட இச்சிகிச்சை தற்போது இந்தியாவில் மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெரிய நகரங்களில் செய்யப்படுகிறது.