October 18, 2021

ஆளுநர் உரை:: தமிழக தலைவர்களின் விமர்சனம்!

இது ஆளுநர் உரையாகத் தெரியவில்லை. அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் களும் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி புகழ்பாடும் உரையாகத்தான் தெரிகிறது. மொத்தத்தில் ஆளுநர் உரையில் நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய கொள்கைகளோ, திட்டங்களோ இல்லை.‘ என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
jan 31 - jaya govt.2
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆதாய கொலை, அரசியல் கொலை, சொத்து தகராறு கொலை என கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலையும், சாதிக் கலவரத்தால் 144 தடை உத்தரவு வருடக்கணக்கில் பிறப்பிக்கின்ற நிலையும் தான் தமிழகத்தில் உள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆளுநர் உரையில் சொல்லப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆளுநர் உரை “உப்பில்லா பண்டம் போல்’’ இருக்கிறது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: அரசின் புகழ்பாடும் அறிக்கையாக ஆளுனர் உரை அமைந்திருக்கிறது. ஆளுனர் உரை மூலம் செய்யாத சாதனைகளுக்கு செலவில்லாமல் விளம்பரம் தேட அரசு முயன்றிருக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் நிலைதான் நிலவுகிறது. ஆனால், சட்டம்ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஆளுநர் உரை மூலம் ஜெயலலிதா அரசு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுள்ளது.

பாலகிருஷ்ணன் (மா.கம்யூ): விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. குறிப்பாக கரும்பு டன்னுக்கு ரூ.4000 வரையும், நெல்லுக்கும் விலை உயர்த்தி தர வேண்டும் என்று சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கேட்க இருக்கிறோம். அத்துடன் வீட்டுமனைப் பட்டா, கோயில் நில குத்தகை பிரச்னை, மாட்டு வண்டிகளில் மணல் எடுப்போர் பிரச்னைகள் குறித்தும் பேச இருக்கிறோம்.

ஆறுமுகம் (இந்திய கம்யூ.கட்சி): கரும்பு, நெல் ஆகியவற்றின் கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து வரும் கூட்டத் தொடரில் விவாதிக்க உள்ளோம்.