June 16, 2021

ஆறு மாச குழந்தைக் கூட ஸ்மார்ட் போன்களை யூஸ் பண்ணுவது நல்லதா?

இப்போதெல்லாம் இருந்த இடத்தில் அமர்ந்தபடியே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. உலக மக்கள் தொகையில் சுமார் 73 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவருகின்றனர்.
baby phone 28


இந்த வகை போன்களுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே இந்த மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை இணையதளம் மூலமாகவே இயங்கும். இதனால் இந்த மென்பொருள்களை பயன்படுத்தும் போது, வைரஸ் மற்றும் மால்வேர்(தேவையில்லா தகவல்) தொகுப்புகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது என்று ஏற்கெனவே எச்சரிக்கை வெளியாகியிருந்தது..

மேலும் எப்போதும் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் டிவி என டிஜிட்டல் சாதனங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் முக உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனை மெல்ல இழந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.நேருக்கு நேர் பழகும் மற்றும் உரையாடும் வாய்ப்பு குறைவதால் இந்தப் பாதிப்பு என்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிறந்த 6-வது மாதத்திலேயே மூன்றிலொரு குழந்தைகள் நவீன செல்லிடப்பேசிகளான “ஸ்மார்ட் ஃபோன்’களைக் கையாளத் தொடங்குவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த வருவாய் கொண்ட, சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு சேவையளித்து வரும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுகுறித்து ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 370 பேரில் 74 சதவீதத்தினர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். 13 சதவீதத்தினர் தொடக்கக் கல்வியைத் தாண்டாதவர்கள். அவர்களில் 97 சதவீதத்தினரிடம் தொலைக்காட்சி சாதனமும், 83 சதவீதத்தினரிடம் “டேபிளட்’ எனப்படும் கைக்கணினிகளும், 77 சதவீதத்தினரிடம் “ஸ்மார்ட் ஃபோன்’களும் உள்ளன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில் 52 சதவீதம் பேர் ஒரு வயது ஆவதற்குள்ளாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கி விடுவதாக அவர்களது பெற்றோர்கள் பதிலளித்துள்ளனர். மேலும், 36 சதவீத குழந்தைகள் ஒரு வயதுக்குள்ளாகவே தொடுதிரைகளைக் கையாள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

24 சதவீத குழந்தைகள் தொலைபேசி அழைப்பு விடுத்திருப்பதாகவும், 15 சதவீதக் குழந்தைகள் மென்பொருள்களை இயக்கியிருப்பதாகவும், 12 சதவீதத்தினர் விடியோ விளையாட்டுகளைப் பயன்படுத்தியிருப்பதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டவர்களில் ஒருவரான ஹில்டா காபலி கூறியதாவது:

ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர், பிறந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே தொடுதிரைச் சாதனங்களை இயக்கத் தொடங்கி விடுகின்றனர்.

சில குழந்தைகள் தொடர்ந்து 30 நிமிடங்கள் கூட தொடு திரைகளைக் கையாள்கின்றன என்றார் அவர்.

குழந்தைகளிடம் இந்தச் சாதனங்கள் எவ்வாறு செல்கின்றன என்று கேட்டால், வீட்டு வேலைகளைச் செய்வதற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக அவற்றை குழந்தைகளுக்குத் தருவதாக 73 சதவீத பெற்றோர்கள் பதிலளித்துள்ளனர்.

65 சதவீத பெற்றோர்கள் அழும் குழந்தைகளை சமாதானம் செய்யவும், 29 சதவீதத்தினர் குழந்தைகளை உறங்கச் செய்வதற்காகவும் தொடுதிரைச் சாதனங்களை அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இவ்வாறு குழந்தைகளிடம் தொடுதிரைச் சாதனங்கள் தாராளமாகப் புழங்கினாலும், அதுகுறித்து 30 சதவீத பெற்றோர்களே மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.