September 25, 2021

ஆர்யா + அனுஷ்கா உங்களுடன் சாட்டிங் பண்ணப் போறாங்களே!

கோலிவுட்டின் பிளேபாயும் சைக்கிள் ரேஸ் வின்னருமான ஆர்யா-அனுஷ்கா இணைந்து நடித்து வரும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவருகிறார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் உருவாகிறது.
inji iduppu
விறுவிறுப்பாக நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் எடை குறைப்பு பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது. இதில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடியதாகவும், அதற்குப் பிறகு ஆர்யா கொடுத்த சில டிப்ஸ்மூலம் எடையை மீண்டும் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யா, இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராகத் தோன்றுகிறார். பல பிரத்யேகக் காட்சிகள் சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் எடுக்கப்பட்டன. ஆர்யா பங்கேற்று வெற்றி பெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றியும் எடுக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சமூகத்தில் நிலவும் அன்றாடப் பிரச்னைகளைப் பற்றிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் ‘இஞ்சி இடுப்பழகி’ படக் குழுவினர் விவாதிக்க உள்ளனர்.

இந்தப் படத்தைப்பற்றி இதுவரை வெளிவந்த செய்திகள் அனுஷ்காவின் பிரமாண்டமான உருவத்தைப் பற்றியும், ஒருவருடைய உடல்வாகு சமுதாயத்தில் அவர்களுக்கு எத்தகைய அடையாளத்தை பெற்றுத் தருகிறது என்பதையும் சித்தரிப்பதாக உள்ளது. இந்தச் சிந்தனையை ஒட்டியே படக் குழுவினர் சமூக வலைத்தளங்களில் விவாதிக்க உள்ளனர். அனுஷ்காவின் உருவ அமைப்பு பற்றிய கருத்துகளுக்கு அவரது பதில் ‘அழகு என்பது உருவத்தில் உருவானது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வதுதான் சரி’ என்ற கோணத்தில் விவாதிக்க உள்ளார்..

சதா சர்வமும் உடற்பயிற்சியைப் பற்றியே பேசும் ஆர்யாவோ ‘ உடற்பயிற்சியின் அத்தியாவசியத்தையும், ஊட்டச்சத்துள்ள உணவின் அவசியத்தையும் பேச இருக்கிறார். இதன்மூலம், ரசிகர்களிடையே படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக்க முடியும் என நம்புகிறார்கள் படக்குழுவினர். இதையொட்டி, ரசிகர்களுக்கு ஒரு சிறப்புப் போட்டியும் நடக்க இருக்கிறதாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை வெளிவர உள்ளதாகவும், அக்டோபர் மாதம் படத்தை வெளியிட தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.