September 27, 2021

ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் ‘ஆர்கானிக்’ புட்ஸ்!

சென்னை தி.நகரில் உள்ள ‘தான்யம்’ ஆர்கானிக் கடையில் எப்போதும் ஏதோ ஒரு நட்சத்திர முகத்தைப் பார்க்கலாம். அவர்கள் சூர்யா, வைரமுத்து, சுசித்ரா, கவுதமி, லிசி ப்ரியதர்ஷன், ராதிகா, லட்சுமி என யாராகவும் இருக்கலாம்! ‘‘பிரபலங்களைக் குறி வச்சு ஆரம்பிச்ச கடையில்லை இது. இயற்கையோட உன்னதம் எல்லா மக்களுக்கும் போய்ச் சேரணுங்கிற நோக்கம்தான் காரணம்’’ என்கிறார் தான்யம் கடையின் உரிமையாளர் தென்றல்!
lady organ food
‘‘பிறந்து, வளர்ந்ததெல்லாம் புதுச்சேரி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு ஐ.டி. கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். ஆர்கானிக் உணவு பத்தின விழிப்புணர்வு வளர ஆரம்பிச்ச நேரம்… ஆர்கானிக் உணவுகளுக்காகவே பிரத்யேகமா ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சா என்னனு நானும் கணவர் மதுசூதனனும் யோசிச்சோம். அதுக்கான ஆர்கானிக் பொருட்கள் எங்கே கிடைக்கும்னு தேட ஆரம்பிச்சோம். தேடத் தேட நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் வந்தது. ஒரு வருஷம் அதைப் பத்தி ரிசர்ச் பண்ணினோம். ஆர்கானிக் உணவுகள்னு சொன்னாலே ஆர்கானிக்னா என்னங்கிறதுல ஆரம்பிச்சு, ஆர்கானிக்தான்னு நாங்க எப்படி நம்பறதுங்கிற வரைக்கும் மக்களுக்கு ஆயிரம் கேள்விகள்… எல்லாத்துக்கும் விளக்கம் தேடித் தெரிஞ்சுக்கிட்டோம்…

ஆர்கானிக் விவசாயம் பத்தியும், எந்தப் பயிரைப் பயிரிட்டா எவ்வளவு லாபம் கிடைக்கும்னும் கத்துக்கிட்டோம். இப்படி எங்களுக்குக் கிடைச்ச அனுபவங்களும் தகவல்களும், ஆர்கானிக் பொருட்களுக்கான பிரத்யேக கடை ஆரம்பிக்கிற எண்ணத்தைக் கொடுத்தது. 4 வருடங்களுக்கு முன்னாடி ‘தான்யம்’ உதயமாச்சு…’’ – பின்னணிச் சொல்கிறார் தென்றல். ‘‘தமிழ்நாட்டுல ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் பகுதி விவசாயிகள், ஆர்கானிக் உணவு தானியங்களை பயிரிட்டு எங்களுக்கு சப்ளை பண்றாங்க. ஆர்கானிக் விவசாயம்னு சொன்னதும் பலரும் அது ஆள்பலம் அதிகம் தேவைப்படற துறைனு நினைக்கிறாங்க. ஆனா, அப்படியில்லை. சாதாரண விவசாயத்தைவிட இது சுலபம். கணவன் – மனைவி மட்டுமே கவனிச்சுக்கலாம்.

அந்த விழிப்புணர்வு இன்னும் நிறைய மக்களுக்கு வரலை. பூமிக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற வசதியான நில அதிபர்கள் அல்லது ஐடி வேலை போரடிக்கிறவங்கதான் ஆர்கானிக் விவசாயம் பண்றதுங்கிற நிலைமைதான் இப்ப இருக்கு. அது மாறணும்’’ என்பவர், ஆர்கானிக் விவசாயத்துக்குத் திரும்ப நினைக்கிறவர்களுக்கும், ஆர்கானிக் பொருட்களை வாங்க நினைப்போருக்கும் சில விஷயங்களைச் சொல்கிறார். ‘‘ஏற்கனவே விவசாயம் பண்ணிட்டிருக்கிற நிலத்தை ஒரு முறை சாயில் டெஸ்ட் பண்ணணும். அப்புறம் 3 வருஷங்களுக்கு சும்மா விடணும். உரமெல்லாம் போடக்கூடாது. அதுக்கடுத்து இன்னொரு முறை சாயில் டெஸ்ட் பண்ணி, அந்த நிலம் ஆர்கானிக் விவசாயத்துக்கு ஏத்ததுதான்னு சர்ட்டிஃபிகேட் தருவாங்க.

அப்படி சர்ட்டிஃபிகேட் பண்ணின நபர்கள்கிட்டருந்து வாங்கற பொருட்கள் நம்பகமானவை. ஐ.எம்.ஓ., யு.எஸ்.டி.ஏ., ஐ.என்.ஓ.ஆர்.ஜி. – இந்தக் குறியீடுகள் ஆர்கானிக்தான்னு நம்பி வாங்கறதுக்கானவை. விதம் விதமான அரிசிகள், பருப்பு வகைகள், வெல்லம், கருப்பட்டி, பனஞ் சர்க்கரை உள்பட, நாம சாப்பிடற எல்லாமே ஆர்கானிக்ல கிடைக்குது. ஆர்கானிக் பால்கூட வந்திருச்சு. லாபத்தை மட்டுமே கணக்குப் பண்ணி, மாடுகளுக்கு ஹார்மோன் ஊசி போட்டு, நிறைய பால் சுரக்க வைக்கிறதுதான் பரவலா நடக்குது. ஆர்கானிக் முறையில பால் உற்பத்தி பண்றவங்களோ, மாடுகளை ஃப்ரீயா மேய விட்டு, இயற்கைத் தீவனம் கொடுத்து வளர்ப்பாங்க. சில மலைப் பிரதேசங்கள்ல ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் கிடைக்குதுனு தேடித் தேடி வாங்கறோம்.

ஆனா, தண்ணீரை மண் உறிஞ்சவும், அதன் விளைவா காய்கறிகள் ஃப்ரெஷ்ஷா காட்சியளிக்கவும்கூட ஒரு கெமிக்கல் உபயோகிக்கிறதை நான் கண்கூடா பார்த்திருக்கேன். இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு கெமிக்கல் இருக்கு. அத்தனையும் நமக்குக் கேடுதான்…’’ – அதிர்ச்சித் தகவலை முன் வைப்பவர், ஆர்கானிக் பொருட்கள் வசதியானவர்கள் மட்டுமே வாங்கும் விலையில் இருப்பது பற்றி என்ன சொல்கிறார்?

‘‘உண்மைதான்… ஆர்கானிக் உணவுகளோட விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனா, ஆர்கானிக் உணவுகளுக்குப் பழகிட்டீங்கன்னா முதல் விஷயம் உங்களோட மருத்துவச் செலவு குறையும். உறுப்புகள் ஆரோக்கியமா இருக்கும். நீரிழிவு, கொலஸ்ட்ரால்னு எந்தப் பிரச்னையும் வராது. 2 மாசத்துல அந்த மாற்றத்தை உணர்வீங்க… மருத்துவர்களுக்குக் கொடுக்கிற பணத்தை, ஆரோக்கியமான உணவுகளுக்குக் கொடுக்கிறதுல தப்பில்லையே…’’ என்கிறவரின் எதிர்காலத் திட்டங்கள்?‘‘முடிஞ்ச வரை ஆர்கானிக் விவசாயத்துக்கு சப்போர்ட் பண்றோம். ஏதோ ஒரு ஊர்லேருந்து ஒரு விவசாயி, முக்கால் கிலோ ஆர்கானிக் காராமணி கொண்டு வந்தார்.

முக்கால் கிலோவை வாங்கி நாங்க என்ன செய்யறதுனு கேட்காம, வாங்கிக்கிட்டோம். அது அவருக்கு நிச்சயம் ஒரு ஊக்கமா இருக்கும். இதோடு, நிறைய தள்ளுபடி விற்பனை, சலுகை விற்பனையெல்லாம் அறிவிச்சு, மக்களை ஆர்கானிக் பக்கம் திரும்ப ஊக்கப்படுத்தறோம். இந்த வருஷக் கடைசிக்குள்ள இன்னும் 5 கடைகள் திறக்கணும்… இயற்கையோட இணைஞ்ச வாழ்க்கைக்கு மக்களைப் பழக்கணும்… ஆரோக்கியத்தைப் பாதுகாக்கணும்… அவ்வளவுதான்…’’ – ஏராளமான திட்டங்களை எளிமையாகச் சொல்கிறார்.

தகவல்:Nagoorkani Kader Mohideen Basha