September 20, 2021

ஆயிரம் இருக்கு சொல்ல.. அருமைமிகு ஆசானே உன் நினைவை நித்தமும் கொள்ள..! ஜி.கெளதம்

என்றென்றும் போற்றுதலுக்குரிய நம் எம்.டி. எழுத்தில் அடக்கமுடியாத பெருமைக்குரிய பேராசான் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களால் ஆசைஆசையாக உருவாக்கப்பட்ட விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பட்டை தீட்டப்பட்ட அன்பு நண்பர்களே..நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் திரும்பிப் பாருங்கள்! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வேண்டுகோள்!

ஆயிரம் இருக்கு சொல்ல..அருமைமிகு ஆசானே உன் நினைவை நித்தமும் கொள்ள..ஒவ்வொரு கணமும் நம் மனக்கண்களின் முன்னே

அலைகடல் போல வந்து மோதும் ஆசிரியரின் நினைவுகளை –m d dec 23அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை

சிந்தாமல் சிதறாமல் சேகரித்து அடுத்து வரும் இதழாளர்கள் அனைவருக்கும் கொடுத்தாக வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் இருப்பதாக நான் திடமாக நம்புகிறேன்.

இப்படி ஒரு மாமனிதர் போற்றுதலுக்குரிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தியை இந்த உலகத்துக்கு உரத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு, அவரால் உருவாக்கப்பட்ட வளர்ப்பு மகன்களான / மகள்களான நமது தோள்களில் இருக்கிறது.

நம் எம்.டி. அவர்கள் குறித்தான உங்கள் கருத்துக்களையும் அவருடனான நேரடி அனுபவத்தில் உங்களுக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற பாடங்களையும் (ஃபேஸ் புக்கிலும் ட்விட்டரிலும் ஒருநாள் நினைவஞ்சலியாக மட்டுமே கொட்டி வீணடிக்காமல்) அப்படியே ஆழமான அன்போடு விரிவாக எழுதி எனக்கு அனுப்பி வையுங்கள். அவற்றை மொத்தமாகத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம் வெகு விரைவில்!

மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து நம் ஆசிரியருக்கு செய்யும் பொக்கிஷம் போன்ற நினைவஞ்சலியாக இது இருக்கும். பிள்ளைகள்கூடி பெற்றவருக்குச் செலுத்தும் பேரஞ்சலியாக இருக்கும்! ஓரிரு மாதங்களுக்கு முன்பாக ஒருநாள்.. நானும் நண்பன் முருகேஷ் பாபுவும் நம் எம்.டி. குறித்து பேசிக்கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றிய எண்ணம் இது.
பொறுமையாக எல்லா மாணவப் பத்திரிகையாளர்களுடனும் இதுகுறித்துப் பேசி, எல்லோரிடமும் எம்.டி. நினைவுகளைச் சுமந்திருக்கும் கட்டுரைகளை எழுதி வாங்கி, அழகான புத்தகமாகத் தொகுத்து, அதை எம்.டி.யின் காலடியில் விழுந்து வணங்கி ஒப்படைக்கலாம் என ஆசைப்பட்டேன்!

ம்ம்ம்.. அவர் வாழும் காலத்தில் இதைச் செய்ய இயலாமல் போனது காலாகாலத்துக்கான கவலைதான் என்றாலும்.. அவர் நினைவுகள் நம்முடன் வாழும் காலத்தில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்துவிட வேண்டும் என விரும்புகிறேன்.

உங்கள் கட்டுரை இத்தனை பக்கங்களில்தான் – இத்தனை வார்த்தைகளில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.. சுதந்திரமாக எழுதுங்கள்.

ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்.

சிறுகதைகள் எழுதும்போது ஒரே ஒரு மையக்கருத்தை எடுத்துக்கொள்வது போல.. ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நம் எம்.டி.யுடனான உங்கள் அனுபவத்தைத் தனித்தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய்யுங்கள்.
ஒருவரே எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் எழுதித் தரலாம். ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே சிறுகதை போல ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்வதாக இருக்கட்டும். அல்லது எம்.டி.யின் ஒவ்வொரு பண்பினை வெளிக்காட்டுவதாக இருக்கட்டும். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பாடத்தை விளக்குவதாக இருக்கட்டும்.
கூடவே.. எம்.டி.யுடன் நீங்கள் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வையுங்கள். எம்.டி. அவர்கள் இடம்பெறும் புகைப்படங்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் அவற்றையும் அனுப்பி வையுங்கள்.

இன்னும் ஓரிரு நாட்களில் (அதிகபட்சமாக வரும் 28.12.2014 – ஞாயிற்றுக் கிழமைக்குள்) உங்களிடம் இருந்து கட்டுரைகளையும் புகைப்படங்களையும் எதிர்பார்க்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரிக்கே நேரடியாக அனுப்பி வையுங்கள். தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

அடுத்த சில நாட்களிலேயே அந்த பொக்கிஷப் புத்தகத்தை நாம் எல்லோருமாகக் கூடி வெளியிடலாம்.

அன்போடும் நட்போடும் உங்கள் கட்டுரை மற்றும் புகைப்படத்தினை எதிர்நோக்கும் ஆவலோடும்..

ஜி.கௌதம்.
விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்ட முன்னாள் (1991 – 92) மாணவன்,
ஃப்ளாட் 6, ஆலயம் அபார்ட்மெண்ட்ஸ்,
1 / 432, 22-வது தெரு,
5-வது செக்டார்,
கே.கே.நகர்,
சென்னை – 600 078
மொபைல்: 98410 77789
ஈமெயில்: [email protected]
—————————————————————————————————-
கட்டுரை அளவில் பெரிதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கருத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நண்பன் முருகேஷ் பாபு எழுதியிருக்கும் இரண்டு கட்டுரைகளை இங்கே உங்கள் முன் மாதிரிக்காக வைக்கிறேன்.
—————————————————————————————————-
ஒன்றும் வெவ்வேறும்! – சி.முருகேஷ் பாபு

ஒரு நட்சத்திர ஜோடியின் திருமணச் செய்தியை எழுதியிருந்தேன். ஆசிரியர் மேஜையில் அவரது ஒப்புதலுக்காகக் காத்திருந்தது என் கட்டுரை.மறுநாள் எனக்கு அழைப்பு வந்தது.

ஆசிரியர் அறைக்குச் சென்றேன்.‘அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாரா? அந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால்தான் திருமண ஏற்பாடுகள் விரைவாக நடக்கிறதா?’ என்றார் ஆசிரியர்.

‘இல்லை சார்… பொதுவான ஏற்பாடுதான் இது’ என்றேன்.

‘அப்ப ஏன்… விரைவாக திருமணத்தை நடத்தவேண்டிய சூழல் உருவாகி விட்டது’ன்னு எழுதியிருக்கீங்க?’ என்றார்.

நான் அமைதியாக நின்றேன்.

‘உங்களுடைய உருவாகி விட்டதுங்கற வார்த்தை எனக்கு பல அர்த்தங்களைக் கொடுக்குது. திருமணத்தை விரைவாக நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதுனு சாதாரணமா எழுதுங்க. ரெண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்… ஆனா, ஒரேஒரு வார்த்தையை மாத்துறதால வேறு பல அர்த்தம் வந்துடும். அதையும் யோசிச்சுத்தான் எந்த வார்த்தையைப் போடுறதுனு முடிவு செய்யணும்’ என்றார் மிகப் பொறுமையாக.

இதை எழுதும்போதுகூட ஒவ்வொரு வார்த்தையின் வேறு வேறு அர்த்தங்கள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கின்றன…
—————————————————————————————————-

‘பணக்கணக்கை மிஞ்சியது வாசகனின் பாராட்டுக் கணக்கு!’- சி.முருகேஷ் பாபு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருந்த நேரம் அது.. அனேகமாக 96 போட்டி என்று நினைவு.
ஆனந்த விகடனில் கிரிக்கெட் தொடர்பாக ஒரு போட்டி வைத்திருந்தோம். அதாவது கோப்பையை வெல்லப் போகும் அணி, அரையிறுதிக்கு வரும் நான்கு அணிகள், வேகமாக 50 அடிக்கும் வீரர், 100 அடிக்கும் வீரர், அதிக விக்கெட்டுகள் எடுக்கப் போகும் பவுலர்.. என்று பல கேள்விகளோடு இருந்தது அந்தப் போட்டிக்கான கூப்பன்.

இறுதிப் போட்டி ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று நடப்பதாக இருந்தது. இறுதிப் போட்டியின் முடிவில் விகடன் கேள்வித்தாளில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். ஆனால், அதைப் பற்றி எதுவுமே அடுத்துவரும் விகடனில் எழுத முடியாது. ஏனென்றால், வழக்கமாக விகடன் இதழுக்கான பணிகளை முடிக்கும் நாள் சனிக்கிழமை.

எப்படி இந்த இக்கட்டைச் சமாளிப்பது என்ற கேள்வியோடு எடிட்டோரியல் மீட்டிங் நீண்டநேரமாக நடந்து கொண்டிருந்தது.
ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல, அணியின் கடைக்குட்டியான நான் கையை உயர்த்தினேன்.எம்.டி. என்ன என்பது போல என்னைப் பார்த்தார்.

நான் மெதுவாக எழுந்து சார், நாம இஷ்யூவை இந்த வாரம் மட்டும் ஞாயிற்றுக்கிழமை முடிச்சா என்ன?’ என்றேன்.
ஒட்டுமொத்த எடிட்டோரியல் அணியும் அதிர்ந்து போனது.சனிக்கிழமை இரவு இதழ் அச்சுக்குப் போனால்தான் ஞாயிறன்று பிரிண்ட் ஆகி, திங்களன்று கடைகளுக்குச் செல்லும். ஒரு மணி நேரம் தாமதமாக இதழ் விற்பனைக்குப் போனால்கூட அது விற்பனையைப் பாதிக்கும். இந்த அடிப்படையே தெரியாமல் ஐடியா கொடுக்கிறானே… என்பதுபோல எல்லோரும் என்னைப் பார்க்க, எம்.டி. கொஞ்சநேரம் கண்களை மூடி யோசித்தார்.

பிறகு, ‘சொல்லுங்க பாபு… ஞாயிற்றுக் கிழமை இரவு 11.30 மணிக்கு இறுதிப் போட்டி முடியும். அதன் பிறகு என்ன செய்யமுடியும் என்றார்.

நானோ உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, ‘கேள்விகளுக்கான சரியான பதிலை மட்டும் முதல் பக்கத்தில் போட்டுடலாம். இந்த பதில்களை எழுதிய வெற்றியாளர் விவரம் அடுத்த இதழில்னு போடலாம் சார். உலகக் கோப்பை போட்டியை கவர் பண்ணின மாதிரி ஆகிடும் என்றேன்.

மீண்டும் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார் எம்.டி. அடுத்து போனை எடுத்து ஜே.எம்.டி-யை அழைத்தார்.
இதழை ஞாயிறன்று முடித்தால் என்ன என்ற கேள்வியோடு அவரை உசுப்ப, பேப்பர் பேப்பராக கணக்குப் போட்டுப் பார்த்த ஜே.எம்.டி. கடைசியாக ஒரு தொகையைச் சொன்னார். அதாவது, சனியன்று இரவு ஷிப்ட், ஞாயிறு பகல் ஷிப்ட் ஊழியர்களுக்கு வேலை இல்லை. ஞாயிறு இரவு ஷிப்ட் ஊழியர்கள் தவிர இன்னும் கொஞ்ச பேர் ஓவர் டைம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டுச் சொன்னார்.

மீண்டும் எம்.டி. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு ஓகே… அப்படியே செய்துடலாம்’ என்று சொன்னார்.

ஒப்பந்தப்படி நான் ஞாயிறன்று அலுவலகத்தில் உட்கார்ந்து போட்டியைப் பார்த்தேன். இதழ் நிர்வாக ஆசிரியர் வீயெஸ்வீ சார் அவருடைய வீட்டில் மேட்ச் பார்த்தார். எம்.டி. அவர் வீட்டில் இருந்தபடியே மேட்ச் பார்த்தார்!

இறுதிப்போட்டி முடிந்ததும் மூவரும் விகடனின் கேள்விக் கூப்பனை நிரப்பினோம். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் போனில் பேசி சரியான பதில்களை உறுதி செய்து கொண்டோம்.

12.00 மணிக்கு அச்சகத்து இயந்திரங்கள் ஓடத் தொடங்கின. முதல் செட் புத்தகம் ரெடியானதும் வழக்கம் போல திங்களன்று காலையில் சென்னை கடைகளுக்கு விற்பனைக்குச் சென்றது. வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

செவ்வாயன்று மீண்டும் எடிட்டோரியல் மீட்டிங். கையில் ஒரு கட்டுக் கடிதங்களோடு வந்தார் எம்.டி. வரும்போதே ஜே.எம்.டி-யையும் வரச் சொல்லியிருந்தார். அவர் கொண்டு வந்திருந்த கடிதங்கள் அத்தனையும் உலகக் கோப்பை பற்றிய உடனடி ரியாக்ஷனுக்குக் கிடைத்த பாராட்டுகள்.

‘பணக் கணக்கு, ஓவர் டைம் கணக்கையெல்லாம்விட இது பெரிய விஷயம்’ என்றார். என்னைப் பாராட்டும்விதமாக பணமுடிப்பும் கொடுத்தார்.

இப்படித்தான்… எந்த சபையாக இருந்தாலும் உனக்குத் தோன்றும் கருத்தை தைரியமாக முன் வைக்க வேண்டும், அதற்கான முழு திட்டமும் உன்னிடம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் என்னைப் பாராட்டவில்லை. ஆனால், அதை என்னை அனுபவத்தாலேயே உணரச் செய்தார்.