September 27, 2021

ஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- ஒரிஜினல் தமிழில்!’

உலக அளவில், இளம்பெண்களிடம் புகழ் பெற்ற, மில்ஸ் அண்டு பூன் பதிப்பக நாவல்கள், முதன் முறையாக, தமிழ் கதாபாத்திரங்களுடன், தமிழில் வெளிவர உள்ளது. ஆபாசம் இல்லாமல், காமரசம் ததும்பும் வகையில், எழுதப்படும் மில்ஸ் அண்டு பூன் நாவல்கள், தமிழில் வெளிவருவது, இளம்பெண்கள் மத்தியில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
vanikam book
பொழுதுபோக்கு என்றாலே மகிழ்வூட்டல், இன்பக் கிளுகிளுப்பைப் பெருகச் செய்தல் என்ற இரண்டு முக்கியக் கடமைகள் உண்டு.கலை மற்றும் இலக்கியத் துறையில் இன்று வரை, உலகம் முழுவதும் இந்த ‘ஃபார்முலா’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகில் இந்த ‘ஃபார்முலா’ சில ஆண்டுகள் ‘ஒர்க் அவுட்’ ஆனது. ஆனால் தமிழ்ப் பதிப்பகத் துறையில் இந்த ‘கிளுகிளுப்பூட்டி – மகிழ்ச்சியூட்டும்’ வியாபார தந்திரத்தை ஒருவரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ‘இது மாதிரி’ விஷயங்களை எழுதியவர்களின் ‘எழுத்து ஆயுட்காலம்’ மிக மிகக் குறுகிய காலமாகவே இங்கு இருந்து வந்துள்ளது.ஆனால் ஆங்கிலப் பதிப்பக உலகத்தைப் பொறுத்தவரை விஷயமே வேறு. அவர்களுக்குப் பொழுது போக்கிற்காகவே புத்தகத் தயாரிப்புத் தொழிலை நடத்த வேண்டிய தேவையும் அவசியமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போயிற்று. ஆங்கிலத்தில் புத்தகம் படிப்போரில் பெரும்பாலானவர்களுக்கு, ரயில் – பஸ் பயணங்களில் கையடக்கப் புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம்.

இந்நிலையில் ஆண் – பெண் – காதல் – காமம் – படுக்கையறை சாகசங்கள் என அந்தப் புத்தகங்களில் விஷயங்கள். எளிமையான ஆங்கிலத்தில் சிருங்கார ரஸம். பச்சையான எழுத்து எனக் கொச்சைப்படுத்த முடியாத வகையில் வார்த்தைப் பிரயோகம். நீலப்படம் என்று அடித்துக் கூற முடியாமல், போர்வை போர்த்திய சரச விளையாடல்கள், நமது பண்பாட்டுக்கு மரபு மீறல். ஆனால் ஆங்கில மரபு வழியில் சாகசம், துணிச்சல். இளம் உள்ளங்களில் ஏதோ ஒரு வகையில் ‘திருப்தி’யை வழங்கும் விஷயங்கள் நிறைந்த இப்புத்தகங்களை, வாலிப வயதினர், அதிகளவில், விரும்பி வாசிப்பர். “மில்ஸ் அண்டு பூன்’ பதிப்பகத்திலிருந்து வெளிவரும் புத்தகங்களை, பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர்.அலுக்காமல், சலிக்காமல் கடந்த நூறு வருஷங்களாக ‘இப்பதிப்பகம் மேலே கூறிய வகைப் புத்தகங்களைப் பதிப்பித்து வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருகிறது.

1908ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பதிக்கம், தற்சமயம் இந்தியாவில் சென்னையில் தனது கிளையைத் தொடங்கியுள்ளது. இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதும் திறன் உள்ள எழுத்தாளர்களுக்கு வலை வீசியுள்ளது.கடந்த ஆண்டில், தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அயல்நாட்டு கதாபாத்திரங்கள், பெயர்கள், இடங்கள் என, அனைத்திலும் அந்நியத்தன்மை இருந்ததால், உலக நாடுகளில் கிடைத்த வரவேற்பு, நம் நாட்டில் கிடைக்கவில்லை.உள்ளூர் மொழிகளில் : இதனால், நேரடியாக உள்ளூர் மொழிகளில், நாவலை வெளியிட முன் வந்துள்ளது, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகம். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம், தமிழ் நாவலை வாங்கி, பதிப்பிக்க உள்ளது. இது குறித்து, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகத்தின், இந்தியாவுக்கான படைப்பாக்க தலைவர், மணீஷ் சிங் கூறியதாவது: கடந்த ஆண்டே, இந்தி, மராத்தி, மலையாளம், தமிழ் ஆகிய உள்ளூர் மொழிகளில், நாவல்களை வெளி யிட்டோம். அதற்கு, நல்ல வரவேற்பு இருந்தது. இருந்தாலும், உள்ளூர் கதாபாத்திரங்கள், தெரிந்த இடங்கள், பெயர்கள் இருந்தால், வாசகர்களுக்கு இன்னும், நெருக்கமாக இருக்கும் என, நினைத்தோம். அதனால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து, நாவல் பெற்று, பதிப்பிக்க உள்ளோம். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில், தமிழில், மில்ஸ் அண்டு பூன் நாவல்களை, படிக்கலாம்.”என்று அவர் கூறினார்.

இதனிடையே மில்ஸ் அண்ட் பூன் முதலில் ‘செக்ஸி’ நாவல்களைப் பதிப்பிக்க முடிவு செய்தபோது எழுத்தாளர்களை நோக்கித் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு விளம்பரம் வாயிலாக வேண்டுகோள் விட்டது. ஆயிரக்கணக்கில் நாவல்கள் வந்தன. நூற்றுக்கணக்கான இளம் – ஆண் – பெண் நடுவர்கள் நாவல்களைப் படித்தனர். ‘விஷயங்கனத்’துடன் ஆறு நாவல்கள் மட்டுமே தேறின. போட்டியில் கலந்து கொண்டவர்களில் 75 சதவிகிதத்தினர் பெண்கள். இந்த மாதிரி விஷயங்களை எழுதும் ஆசை, அந்த நாள்களிலேயே பெண்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. இங்கிலாந்தில்! ‘சோபியா கோலி’ என்ற பெண்மணி எழுதிய ‘இருளிலிருந்து அம்புகள் (Arrows from the Dark) முதல் தகுதி பெற்று பிரசுரமாயிற்று. ‘காமரசம் சொட்டுகிறது, ஆனால் ஆபாசம் என துளிக்கூட இல்லை’ என்ற விமர்சனத்துடன் வாசகர்களால் வரவேற்கப்பட்டது.

இதையடுத்து திறமையான எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். தினுசு தினுசாக, புதுசு புதுசாக இந்த ரஸனுபவத்தைப் பிழிந்து தர, எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்தார்கள். டாக்டர்கள், நர்ஸ்கள், விமானப் பணிப் பெண்கள், வீட்டு வேலைக்காரர்கள், இராணுவ வீரர்கள், வியாபாரிகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் கதை மாந்தராகி, தங்கள் உள்ளக்கிடக்கைகளை, வேட்கைகளை, மோகதாபங்களை அச்செழுத்தில் வெளிப்படுத்தினார்கள். லிலியன் வாரன் என்ற எழுத்தாளர் மூன்று வெவ்வேறு பெயர்களில் எழுதிக் குவித்தார். வயலெட் என்ற பெண்மணி சினிமா ஸ்டூடியோக்களை வலம் வந்து தகவல் சேகரித்து கனவுலக சில்மிஷங்களுக்கு நாவல் வடிவம் தந்தார். கதாநாயகி என்பவள் கணவனிடம் திருப்தி காணாதவளாக, வேலிதாண்டி ‘வித்தை’ கற்பதாக ஆணின் ஆதிக்கத்தை இந்த ‘யுத்தி’ மூலம் அடித்து நொறுக்குவதாகக் கதைகள். எல்லாக் கதைகளிலும் தங்களின் வாழ்க்கைச் சாயல் நிழல் இருப்பது போன்ற பிரமையை வாசகர்களிடம் ஏற்படுத்தும் ரஸவாதம் நிறைந்த எழுத்துகள் நிறைந்த மில்ஸ் அண்ட் பூன் நாவல்கள் இனி நம் மண்ணின் கேரக்டர்களில் எப்படிதான் வரவேற்பைப் பெறும் என்று பார்க்கத்தானே போகிறோம்!