October 16, 2021

ஆன்-லைன் மூலம் விற்கும் பொருட்களுக்கு வரி! தமிழக அரசு கண்டிப்பு

உலகம் மாறிவருகிறது. மிகுந்த விலை உயர்ந்ததாக நேரம் மதிக்கப்படுகிறது. வாழ்க்கையை எளிதாக்கவும் இனிமையாக்கவும் ஆன்லைன் வர்த்தக முறை உதவுகிறது. வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளும் டிஜிட்டல் மயமாகி அன்றாட வாழ்க்கையினை இன்று கம்ப்யூட்டர் வழியாகவே நிறைவேற்றிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. பரபரப்பு மிகுந்த இன்றைய வாழ்க்கை சூழ்நிலைக்கு இது பெரிய உதவியாகவே உள்ளது.நகரங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இந்த டிஜிட்டல் வசதிகள் இன்று சிறிய ஊர்களிலும் பழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்டன. விமானப் பயணங்களில் தொடங்கி இன்று ட்ரெயின் டிக்கட், ஆம்னி பஸ் டிக்கட் என பயணங்களை எளிதாக்கும் வகையில் ஆன்லைனில் டிக்கட் எடுப்பது அவற்றை மாற்றி அமைப்பது, கேன்சல் செய்வது என அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.இருந்த இடத்திலிருந்தே ஸ்டாக் மார்க்கட்டை கலக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் மேலோங்கி உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கிப் பதுக்கி விற்பனை செய்வதுவும் நடக்கிறது இதனிடையே ஆன்-லைன் மூலம் விற்கும் பொருட்களுக்கு வரிசெலுத்தாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இணையம் மூலம் பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்-லைன் மூலம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
tax-
அண்மையில் பல கோடிக்கு வர்த்தகம் புரிந்த நிறுவனம் வரியாக சிறுதொகையை கட்டியது. வங்கிப் பரிவர்த்தனையை ஆராய்ந்த போது பல கோடி விற்பனை மறைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டில் விற்கப்படும் பொருட்களுக்கு சட்டப்படி வாட் வரி செலுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆன் லைனில் பொருள் வாங்குவோர் ரசீதை கேட்டு பெறவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் சமீப காலமாக, அதிக தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பிலிப்கார்ட் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை ஒரு நாளில் தள்ளுபடி விற்பனை மூலம் ரூ.600 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்து உள்ளதும் முறையற்ற வர்த்தக நடைமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன. மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களால் எப்படி அதிக அளவு தள்ளுபடி வழங்க முடிகிறது என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.