September 21, 2021

ஆன் லைன் அடிமைகளை மீட்க உதவும் நவீன மையம்!

குடிக்கு அல்லது கஞ்சாவுக்கு அடிமையானவர்களுடைய மூளையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ, அதேபோன்ற மாற்றங்கள் அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுகிறவர்களுடைய மூளையிலும் ஏற்படுகின்றன” என்று மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள் இதனிடையே பேஸ்புக், வாட்ஸ்அப், கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன் போன்ற ஆன்லைன் (டிஜிட்டல்) பொழுதுபோக்குகளுக்கு அடிமை ஆனவர்கள், உலகெங்கும் நிரம்பி இருக்கிறார்கள். இப்படி அடிமை ஆனவர்களை மீட்டெடுக்க சீனாவில் ஒரு அமைப்பே உருவாகியுள்ளது
addict
தற்போது உலக அளவில் வீடியோ கேம் ‘அடிமை’களில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது சீனா. இந்த நாட்டில் இணையதளத்தைப் பயன்படுத்தும் 632 மில்லியன் மக்களில், 10% பேர் இணைய அடிமைகளாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இப்படி ஆன்லைனில் வீடியோ கேம்ஸ்களை விளையாடுவதன் மூலம் தங்கள் நேரத்தை இழப்பதுடன், அடுத்த தலைமுறையினர் ஒருவித மன அழுத்தத்துடன்தான் பிறப்பார்கள் என்றும் சீனாவின் மனிதவள மேம்பாட்டு மையம் ஆய்வில் எச்சரிக்கை விடுத்துள்ளது

இதையெல்லாம் கருத்தில்கொண்டு, உலகமெங்கிலும் உள்ள வீடியோ கேம்ஸ் அடிமைகளை மீட்டெடுக்கும் நோக்கின் முதல் முயற்சியாக, சீனாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது சைனீஸ் இண்டர்நெட் கேமிங் டிஸ்ஆர்டர் ரீஹேபிலிடேஷன் கேம்ப் (Chinese Internet Gaming Disorder rehabilitation camp) எனும் மறுவாழ்வு மையம்,இதன் முக்கியத்துவம் அறிந்து, சீன அரசு இந்த மையத்துக்கு நிதியுதவி அளித்து ஊக்குவிக்கிறது. ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் முன்னணி புகைப்படக்காரர் பெர்னாண்டோ மொலரெஸ், இந்த சீன மறுவாழ்வு மையத்தைப் பற்றி டாக்குமென்டரி புகைப்படங்கள் எடுத்து, தன் வலைபக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போது உலகம் முழுவதும் இவை பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வீடியோ கேம்ஸ் அடிமைகளை மீட்கும் பணியின் முதல் நிலையாக அவர்களை ‘கொஞ்ச’ நேரம் வீடியோ கேம்ஸ் விளையாட விடுவார்களாம். பின் படிப்படியாக அவர்களை அதிலிருந்து விடுவித்து, மனரீதியான ஆலோசனைகள் மற்றும் ராணுவ அடிப்படையிலான உடற்பயிற்சிகளுக்கு அவர்களை உட்படுத்துகிறார்கள். கடைசி கட்ட பயிற்சியின்போது ராணுவ ஆடைகளை அணிந்து கிட்டத்தட்ட ராணுவ வீரர்கள் செய்யும் உடற்பயிற்சிகளை இவர்கள் தினசரி செய்ய வைத்து இந்தப் பயிற்சிகள் முடிந்த பிறகு அவர்களுக்கு தலையணையை கொடுத்து தூங்க வைப்பார்கள்.

இதையடுத்து இவர்கள் தங்களுடன் பயிற்சி எடுக்கும் சக தோழர்களுடன் இரண்டு மணி நேரம் குழுவாக இணைந்து பேசிக் கொள்வார்கள். கொஞ்ச நேரம் படிப்பது, கொஞ்ச நேரம் விளையாடுவது போக, தியானமும் செய்வார்கள். அனைத்துப் பயிற்சிகளும் முடிந்து திரும்பும்போது, முழுக்க முழுக்க வீடியோ கேம்ஸ்களை மறந்து, வேறொரு உலகத்தினுள் நுழைந்திருப்பார்கள். வீடியோ கேம்ஸ் என்று யாரேனும் சொன்னால்கூட, அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார்களாம்!

இதைப் பார்த்து, அமெரிக்காவும் இதுபோன்ற ஆன்லைன் அடிமைகள் மறுவாழ்வு மையம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடித்துள்ளது.போற போக்கைப் பார்த்தால் தமிழகத்தில் கூட இப்படியான மையம் தேவைப்படும் போலிருக்கிறது