September 20, 2021

ஆதார் விவகாரம்: 14 ம் தேதி அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்!

அடுத்தடுத்து ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.ஆனாலும் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து ஆகஸ்டு 11–ந்தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை ஆதார் அட்டை வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். அதில், மண்எண்ணெய், சமையல் கியாஸ், ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக மட்டுமே ஆதார் அட்டையை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
aadhar oct 7

இதற்கிடையில் மத்திய அரசு, செபி, டிராய், ரிசர்வ் வங்கி மற்றும் சில மாநில அரசுகள் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களில் அரசு சார்ந்த சமூக நல திட்டங்களுக்கும், தங்கள் அமைப்புகளின் சேவைகளுக்கும் ஆதார் அட்டையை அனுமதிக்கும் வகையில் இடைக்கால உத்தரவில் மாற்றம் அல்லது விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுக்களின் மீது நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில் மாற்றமோ, விதிவிலக்கோ செய்ய முடியாது என்றும், இதில் மாற்றம் அல்லது திருத்தம் கோரும் இந்த மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்விலேயே விசாரணை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கே.கே.வேணுகோபால், ஹரிஷ் சால்வே உள்ளிட்ட மூத்த வக்கீல் ஆஜராகினர். அப்போது நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டுகிறோம். ஏற்கனவே எம்.பி.சர்மா என்பவர் தொடுத்த வழக்கில் 8 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனி மனிதர்களின் அந்தரங்கத்தன்மை அவர்களது அடிப்படை உரிமையில் வருவது இல்லை என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே தற்போதைய நிலையில் ஆதார் அட்டை தொடர்பான முடிவை எடுக்க அதை விட பெரிய அமர்வான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று முறையீடு செய்தனர்.

இதற்கு நீதிபதிகள் பதில் அளிக்கையில், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டால் பிற வழக்குகள் பாதிக்கப்படும். அரசியல் சாசன அமர்வில் எத்தனை நீதிபதிகள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் அறிவிக்கப்படும். ஆதார் அட்டை தொடர்பான உத்தரவில் திருத்தம் கோரும் மனுக்கள் குறித்து இந்த அரசியல் சாசன அமர்வு 14–ந்தேதி மதியம் 2 மணிக்கு விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.