September 27, 2021

ஆண்களுக்கு நிகராக பெண்களும் அர்த்த ராத்திரியில் திரிவதல்ல சுதந்திரம்! -இஸ்ரோ வளர்மதி பேட்டி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவாக அவரது பெயரில் விருது வழங்கப் படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதை இஸ்ரோ திட்ட இயக்குநரான என்.வளர்மதிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார். விருதுபெற்ற பிறகு என்.வளர்மதி பேசுகையில் ”எனது சொந்த ஊர் அரியலூர். அங்குள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அண்ணா பல்கலையில் எம்.இ., முடித்தேன். இஸ்ரோவில், 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ரேடார் இமேஜ் சாட்டிலைட்’ திட்ட இயக்குநராக பணியாற்றினேன். இது 24 மணி நேரமும் படம் எடுத்து அனுப்பக் கூடியது. இதனால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.அப்துல் கலாம் பெயரில் விருது வழங்குவதன் மூலம் தமிழக அரசு இஸ்ரோவை பெருமைப்படுத்தியுள்ளது. இந்த விருது, இளைஞர்களை உற்சாகப்படுத்தும். பொதுச் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுவது பெருமை தரக்கூடியது. இந்த விருதை இஸ்ரோவுக்கு சமர்ப்பிக்கிறேன். விருதை வழங்கிய முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் மக்களுக்கும் நன்றி” என்று வளர்மதி பேசினார்.
isro valarmathi
தற்போது இஸ்ரோ பிளானிங் டைகர்ட்ரான வளர்மதி ரிசாட்—1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர் ஐ ஆர் என் எஸ் எஸ் சரல், ஜிசாட் -7 மார்ஸ் மிஷன், ஜிசாட் -14 என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பல திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமைகளை உடையவர். தற்போது குரூப் டைரக்டராக உயர்ந்துள்ளார். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் பிறந்தவரான இவரின் பிளாஷ் பேக் வாழ்க்கைப் பற்றி கேட்ட போது, “அப்பா நடராஜன் ஊரக வளர்ச்சித்துறையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். அம்மா ராமசீதா இல்லத்தரசி. எங்கள் வீட்டில் மூன்று பிள்ளைகள் நாந்தான் மூத்தவள் அதனாலேயே அப்பாவுக்கு என்னிடம் பிரியம் அதிகம். அரியலூர் நிர்மலா மேல் நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். இயற்கையாகவே எனக்குள் ஒரு சுபாவம் உண்டு. திறமையானவர் களைப் பார்த்தால் அவர்களைப் போல் நானும் முயற்சி செய்து பார்ப்பேன். ஒரு ஓவியரைப் பார்த்தால் நானும் அவர் போல வரைய முயற்சி செய்வேன். உயிருக்கு போராடும் ஒருவரைக் காப்பாற்றும் மருத்துவரைப் பார்த்து நானும் ஒரு நாள் டாக்டராகணும் என்று நினைப்பேன். சாத்தியமா இல்லையா என்றுகூட சிந்திக்கத்தெரியாத அந்த வயதில் எல்லா துறைகளின் மீதும் ஆசை. ஊருக்குச் சென்றால் மாமா பிள்ளைகள் பெரியப்பா பிள்ளைகள் என எல்லோரையும் பக்கத்தில் அமர வைத்து தெரிந்த விஷங்களை சொல்லிக் கொடுப்பேன்.

கோவை அரசுக் கல்லூரியில் பி இ எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜீன்னியரிங் சேர்ந்தபோது வெளியுலகம் தெரியாத குடும்பச் சூழலில் வளர்ந்த நான் சின்னச் சின்ன பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. என் ஏழ்மையும் மற்றவர்களின் ஆங்கிலப் புலமையும் எனக்குள் ஆரம்பத்தில் மிரட்சியை ஏற்படுத்தியது. தளராமல் தயங்காமல் நானே சரி செய்துகொண்டேன். சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் எம் இ கம்யூனிக்கேஷன் சிஸ்டம் சேர்ந்தேன். பள்ளிப் படிப்பை முடிக்கும் வரைக்கும் கிராமத்து மாணவியாகவே வளர்ந்த நான் புத்தகங்கள் படிப்பது ஆங்கில அறிவு தைரியம் தன்னம்பிக்கை என்று அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டேன். இப்ப்டியான தன்னார்வ தேடலில்தான் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சாதாரணமாக எதிர்கொள்ளும் தைரியம் இலவசப் அரிசாக எனக்குக் கிடைத்தது.

எம் இ படிப்பில் நான் எடுத்த் நல்ல ரேங்க் 84ம் ஆண்டில் இஸ்ரோ வேலையை வாங்கிக் கொடுத்தது. வேலைக்குச் சேர்ந்த அந்த நாளின் நினைவுகள் அனைத்தும் அப்படியே மனதில் இருக்கின்றன. என் பெற்றோர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிய நாள் அது. என் வாழ்க்கையில் முதல் வெற்றி துவங்கிய நாள். படிக்கும் காலத்தில் விஞ்ஞானி ஆவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் எந்தப் பணியாக இருந்தாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற பண்பை இளமையிலேயே கட்டமைத்துக் கொண்டேன். இஸ்ரோவில் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட உழைப்பு என்னை குரூப் டைரக்டராக உயர்த்தியுள்ளது. இப்போது என் குழுவில் 75 பேர் வேலை செய்கிறார்கள். சில நேரங்களில் நூற்றுக்கணக்கானவர்களுடன் இரவு பகல் பாராமல் உழைத்திருக் கிறேன். முதலில் எனக்குக் கொஞ்சம் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் பெண் என்ற வேலியை அறுத்து என் பொறுப்பை உணர்ந்து வேலை செய்யத் துவங்கிய கணத்தில் எந்தச் சூழலும் எனக்கு சுலபமாக மாறியது.

பொறுப்புக்கள் நிறைந்த வேலை மன அழுத்தம் சேர்ந்துவிடும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது. என எந்த சிரமங்களையும் என் வேலை குறித்து நான் குறிப்பிடமாட்டேன் என்னுடைய பையில் எப்போதும் ஒரு கேலண்டர் வைத்திருப்பேன் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்வேன். திட்டமிடுவதுதான் வாழ்க்கையில் அனைத்தையும் சுலபமாக்கியுள்ளது. இதனால் பணி நிறைவு கிடைத்ததே தவிர வலிகள் வேதனைகள் என்று எதையும் என் வேலை எனக்குத் தந்ததில்லை. குடும்பத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியதில்லை. கணவர் வாசுதேவன் பிள்ளைகள் தீபிகா ஹேமந்த் என குடும்பத்தினரின் ஒத்துழைப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். இரவு பகலாக நான் உழைத்த நேரங்களில் எல்லாம் எனக்கு தட்டிக்கொடுத்த கணவர் கிடைத்தது என் பாக்கியம்”. என்று பெருமையோடு குறிப்பிட்டார் வளர்மதி
22SEP_TYAVINS01_N__1217182e
பின்னர் தொடர்ந்தவர் “பெண்களின் முன்னேற்றம் என்று பேசும்போது ஆண்களுக்கு அடுத்த கட்டத்தில் பெண்கள் இருந்த நிலை மாறிவிட்டது. எல்லா துறைகளிலும் ஆண்களைப் பின் தள்ளி பெண்கள் முதலிடத்துக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இன்றைய உலகில் விரிந்து கிடக்கின்றன. அதை எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கு நிகர் என்பதற்காக அர்த்த ராத்திரியில் நானும் வெளியில் திரிவேன் ஆண்களைப் போலவே உடை அணிவேன் என்றெல்லாம் வெளிப்படுத்த தேவையில்லை மேலும் வெற்றிகளைக் குவிக்க ஆண்போல செயல்பட வேண்டியதில்லை. நிதானம் பொறுமை அரவணைப்பு என பெண்மைக்கான குணங்களே போதும் அப்படித்தான் நான் முன்னுக்கு வந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாலேயே என்னால் இவ்வளவு தூரம் தேக்கமில்லாமல் பயணிக்க முடிந்திருக்கிறது.

அலுவலகம் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒரு மணி நேரத்தைக் கூட வீணடித்ததில்லை. புத்தகங்கள் படிப்பது புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது துறை சார்ந்த நவீனத்துடன் இணைந்தே பயணிப்பது நம்மைச் சுற்றி யிருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துவது நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தினருக்கு வேண்டிய வற்றைச் செய்து கொடுப்பது என சோம்பல் என்பது என்னை அடையாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அதுதான் என்னை உயர்த்திக் கொண்டே வருகிறது என்று நம்புகிறேன். நான் வேலைக்கு சேர்ந்த போது இஸ்ரோ வில் 25 க்கும் குறைவான பெண்கள் தான் பணியாற்றினார்கள். இன்று இஸ்ரோ பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் எனும் அளவுக்கு இடம் பிடித்திருக்கிறோம். தனிப்பட்ட திறமையும் கடும் உழைப்பும் மட்டுமே இதற் கெல்லாம் காரணம். உடன் வேலை செய்யும் ஆண்கள் அன்றும் சரி இன்றும் சரி ஒரு போதும் பெண்களின் வெற்றிக்குத் தடையாக இருந்ததில்லை” என்று குறிப்பிட்டார்