October 18, 2021

அ.தி.மு.க. துணை அமைப்பாக மாறிய தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்! – ராமதாஸ் காட்டம்

பா. ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தில் காலியாக இருந்த இடங்களை நிரப்பும் நோக்குடன் 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவர். அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தை அ.தி.மு.க.வின் துணை அமைப்பாக மாற்றும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை.
tnpsc
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். 11 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து அவற்றை நிரப்புவதற்காக 11 பேரை அரசு நியமித்துள்ளது. அவர்களில் இ.ஆ.ப. அதிகாரி இராஜாராம் உள்ளிட்ட நால்வர் தவிர மீதமுள்ள 7 பேரும் ஆளுங்கட்சி வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் என்ற சட்டப்பூர்வ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 316 ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு அ.தி.மு.க.வினர் இப்பதவிகளில் திணிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களில் பாதி பேர், அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாளில் மத்திய அல்லது மாநில அரசு பணிகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தற்போதைய உறுப்பினர்கள் 3 பேரும் அரசு ஊழியர்களாக இருந்தவர்கள். இப்போது நியமிக்கப்பட்டுள்ள 11 பேரில் இராஜாராம் உள்ளிட்ட 4 பேர் அரசு பணிகளில் இருந்தவர்கள். இவர்களைச் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களில் பாதிப் பேர் அரசு ஊழியர்களாக இருப் பார்கள் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மீதமுள்ள 7 இடங்களில் அ.தி.மு.க. வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறது ஆட்சி மேலிடம். அதுமட்டுமின்றி, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களில் ஒருவர் கூட மகளிர் இல்லை. பெண்களுக்காக நடைபெறும் ஆட்சி என்று பெருமை பேசிக்கொள்ளும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும். இந்த பணிக்கு விருப்பு, வெறுப்பு இல்லாத, நெருப்புக்கு நிகரான நேர்மை கொண்டவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஆனால், தங்களுக்கு துதி பாடுவோருக்கு பதவி வழங்குவதற்கான அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை மாற்றி அதன் பெருமையை அதிமுகவும், திமுகவும் சீரழித்து விட்டன.

புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இ.ஆ.ப. அதிகாரியான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளரான மு. இராஜாராம் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. உறுப்பினராவார். செய்தித்துறை செயலர் என்ற முறையில், ஊடக நிர்வாகங்களை கெஞ்சியும், சில நேரங்களில் மிஞ்சியும் ஊடகங் களில் அரசுக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது தான் இவரது சாதனை. வெள்ளத்தின் போது வெளியில் வராத ஜெயலலிதாவை வாட்ஸ்-அப்பில் பேச வைத்ததும் இவர் தான். அரசுத்துறை செயலாளர் பணியை பார்த்தாரோ இல்லையோ, ஜெயா தொலைக்காட்சியின் ஊதியம் வாங்காத மனித வளத்துறை மேலாளராக பணியாற்றி அந்நிறுவனத்திற்கு தேவையான செய்தியாளர்களை தேர்வு செய்யும் தொண்டூழியம் பார்த்தவர். இதன்மூலம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்ட நெருக்கத்தை பயன் படுத்தி பல கோடி ஊழல் செய்த இவர், இம்மாதத்துடன் ஓய்வு பெறவிருப்பதால், இவரது விசுவாசத்துக்கு பரிசாக இப்பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கு முன் இப்பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் இவரைப் போன்றவர்கள் தான். காவல்துறை தலைமை இயக்குனராக இருந்தபோது காட்டிய விசுவாசத்திற்காக ஆர். நட்ராஜ் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிந்தவுடன் தன்னையே அதிமுக வில் இணைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளை நடத்திய அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகியான நவநீதகிருஷ்ணன் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார். இப்படியாக பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அ.தி.மு.க. துணை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.

தகுதியும் நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது. லஞ்சம் கொடுத்து பணியில் சேர்பவர்களின் முதன்மை நோக்கம் லஞ்சம் வாங்குவதாகத் தான் இருக்கும் என்பதால் அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடும். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பதவிக்கு தகுதியான ஆட்களை பரிந்துரை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட சமூக ஆர்வலர்களைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்