September 27, 2021

அழிவின் விளிம்பில் சோலை மந்திகள்! – உணவுப் பழக்கம் மாறியதே காரணம்!

ஆங்கிலத்தில் Lion Tailed Macaque என்று சோலை மந்திகள் அழைக்கப்படுகின்றன. இதற்கு தமிழ்ப் பெயரான சோலைமந்தி என்பது பலருக்கு தெரியாத விஷயம். இதன் காரணமாக ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிப் பெயர்ப்பான சிங்கவால் குரங்கு என்று பெரும்பாலானோரால் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் சோலைமந்திகள் அதிகமாக களக்காடு, தேனி, நீலகிரி, முதுமலை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.இந்நிலையில் அழிந்து வரும் உயிரினமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சோலை மந்திகள், மாறிவரும் உணவுப் பழக்கம் காரணமாக அழிவின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ளதாக எச்சரிக்கின்றனர் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்.
monkey 11
சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு) மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. இவற்றின் உணவுப் பழக்கம் மாறி வருகிறது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் சோலை மந்திகளின் எண்ணிக்கை 3,000 முதல் 3,500 மட்டுமே இருக்கின்றன. எனவே இவற்றை காப்பாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

வெப்ப மண்டல மழைக் காடுகளில் மட்டும் வாழும் சோலை மந்தி பகல் பொழுதில் மட்டும் சுறுசுறுப்புடன் காணப்படும் விலங்காகும். மரமேறுவதில் மிகவும் திறமை வாய்ந்த இம்மந்தி பெரும்பாலான நேரத்தை உயர்ந்த மரக்கிளைகளிலேயே கழிக்கும். மிகவும் கூச்சவுணர்வுடைய இவ்விலங்குகள் மனிதர்களைத் தவிர்த்தே வாழ விரும்புபவை. இவை 10 முதல் 20 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டக் குழுக்களாக வாழும் நடத்தை கொண்டவை. ஒரு குழுவில் ஒரு சில ஆண் மந்திகளும் பல பெண் மந்திகளும் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும், தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்பொழுது, மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும், சில வேளைகளில் வேற்றுக்குழு உறுப்பினருடன் சண்டைகளும் நடக்கும்.

இந்த விலங்கின் இனப்பெருக்க காலம் 6 மாதங்களாகும். பிறந்ததிலிருந்து ஒரு ஆண்டு காலம் வரை குட்டி தன் தாயின் அரவணைப்பில் வாழும். இதன் சராசரி ஆயுள்காலம் காடுகளில் சுமார் 20 ஆண்டுகள் எனவும் விலங்கு காட்சியகங்களில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

செயற்கை உணவுகள்: சோலை மந்திகள் பெரும்பாலும் மனிதர்களை தவிர்க்க கூடியவை. ஆனால் அண்மை காலங்களில் மனிதர்கள் காடுகளில் வீசும் உணவுப் பண்டங்களை உண்ணத் தொடங்கிவிட்டதாக வன உயிர் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக சோலை மந்திகளின் இயல்புத் தன்மை குறைந்து, அவை மனிதனின் அருகே வர தொடங்கி விட்டது.

சோலை மந்திகள் வனத்தில் கிடைக்கும் பழங்கள் போன்றவற்றை உள்கொள்ளும் போது விழும் எச்சத்தால், செடிகள் முளைக்க வாய்ப்புள்ளது. இதுபோன்று செடிகள் முளைப்பது, மான் போன்ற விலங்குகளுக்கு உணவு எளிதில் கிடைத்தது. இந்நிலையில், வனத்தில் போதிய உணவு கிடைக்காத நிலையில், வனத்தை விட்டு சமவெளிப் பகுதிக்கு வந்த சோலை மந்திகள் மனிதன் தூக்கி எறியும் உணவை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.

அண்மையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோலை மந்திகள் பயமில்லாமல் மனிதன் இருக்கும் பகுதிகளுக்கு வருகின்றன. மேலும் மனிதன் தூக்கிப் போடும் உணவுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளன.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர்,”சோலைமந்திகளுக்கு போதுமான இயற்கையான உணவுகள் வனத்தில் உள்ளன. ஆனால், சில சுற்றுலாப் பயணிகள் அவற்றிற்கு உணவு இல்லை என நினைத்து இரக்கப்பட்டு தின்பண்டங்களை வழங்கி வருகின்றனர். இதனால், அவைகளின் உணவு தேடும் பழக்கம் மறந்து போய், மனிதர்கள் தரும் உணவை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டங்களை தர வேண்டாம். அவற்றால், அதற்கு தீங்கே ஏற்படும். எனவே, குரங்குகள் தங்கள் இயல்பு தன்மையை மறக்காமல் இருக்க, செயற்கையான உணவு தருவதை தவிர்க்க வேண்டும்.ஏற்கெனவே மிகவும் அரிதான இனமாக கணக்கெடுக்கப்பட்டுள்ள சோலை மந்திகளின் எண்ணிக்கையை இது மேலும் குறைக்க கூடும்” என்றார் அவர்.