September 18, 2021

அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை?

இந்தியாவில் அறிவியலுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது முட்டாள்தனமானது என பாரத ரத்னா விருது பெறவிருக்கும் விஞ்ஞானியும், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவருமான பேராசிரியர் சி.என்.ராவ் கூறியுள்ளதை வெறும் ஆவேசமான பேச்சு எனப் புறந்தள்ளிவிட முடியாது. மத்திய அறிவியல்,தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும், பேராசிரியர் ராவின் இந்தக் கருத்தை வழிமொழிந்துள்ளார்.
nov 26 - edit science
“தகவல் தொழில்நுட்பம் என்பது அறிவியல் சார்ந்தது அல்ல. அந்தத் துறையில் பணியாற்றும் பலரும் மனஉளைச்சலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருவதை நான் அறிவேன். அடிப்படை அறிவியல் சார்ந்த துறையில்தான் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உலக அளவில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் 140 நாடுகள் வரிசையில் இந்தியா 66-ஆவது இடத்தில்தான் உள்ளது. அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா இடம் பெறவில்லை. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகள் மட்டுமே முன்னேற்றமடையும்; இதில் அக்கறை காட்டாத நாடுகள் பின்னுக்குத் தள்ளப்படும். எனது தாய்மொழியான கன்னடத்தில் படித்ததால்தான் நான் விஞ்ஞானியானேன்’ என்றும் பேராசிரியர் ராவ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கணினித் தகவல் தொழில்நுட்பம்தான் அறிவு; அதுதான் நமக்கு வாழ்வளிக்கும் என்ற தவறான புரிதல் நம்மில் பலருக்கும் உள்ளது. அதனால்தான், நமது நாட்டில் புற்றீசல் போல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகி வளர்ந்துள்ளன. வணிக நோக்கிலான இந்தக் கல்லூரிகளில் கணினித் தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இத்தகைய படிப்புகளைத் தவிர்த்து, அடிப்படை அறிவியல் சார்ந்த படிப்புகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள விரும்பும் நமது இளைஞர்களின் கனவுகளை அவர்களது பெற்றோர்களே கலைத்துவிடுகின்றனர். தகவல் தொழில்நுட்பப் படிப்புகளில் பட்டம் பெற்றால்தான் அதிக ஊதியம் கிடைக்கும் என மூளைச்சலவை செய்து, நமது இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் பெற்றோர்கள்.

நமது உயர் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் பணியை மட்டுமே செய்து வருகின்றன. வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் அறிவுசார் கல்வி நிலையங்களாக அவை உருப்பெறவில்லை. இதற்குக் காரணம், இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை என்பதுதான். விரல்விட்டு எண்ணக்கூடிய தனியார் பல்கலைக்கழகங்களிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் மட்டுமே உருப்படியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பெரும்பாலான பேராசிரியர்களும் தங்களது அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ளும் விதத்தில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதிலோ, ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதிலோ அதிக நாட்டம் இல்லாதவர்களாக உள்ளனர். இதேபோல, ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற தவறான கருத்தும் நம்மிடையே உள்ளது. ஆங்கில மொழிக்கும், அறிவாற்றலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். உலகில் அவரவர் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெற்றவர்கள்தான் மிகச்சிறந்த அறிவாளிகளாகவும், சாதனையாளர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் அவரவர் தாய்மொழியில் அடிப்படைக் கல்வி பெறுவதற்கு தேவையான கட்டமைப்புகளையும், தரமான பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொலைநோக்குப் பார்வையுடன் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்குக் கல்வியாளர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
nov 26 - edit science.statics 2
அறிவியலுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற பெரும் குறையைப் போக்குவதற்கும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், இந்திய மக்கள் அனைவருக்கும் ஆதார் எனப்படும் தனித்துவ அடையாள எண் வழங்கும் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து, அந்தப் பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கபளீகரம் செய்வதற்கு துணை போகும் மத்திய அரசு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நா. குருசாமி