September 20, 2021

அலகாபாத் ஹைகோர்ட்டின் அரசுப் பள்ளிகள் குறித்த தீர்ப்பு! -சரிதானே?!

சில்லறைக் காசு முதல் ஆயிரம் ரூபாய் நோட்டு வரையில் அரசாங்கம் அச்சிட்டுக்கொடுத்தால் நல்ல பணம். எவ்வளவு பெரிய வளாகம், வசதியான கட்டடம், நவீன எந்திரம், இறக்குமதி செய்யப் பட்ட காகிதம், விலையுயர்ந்த மை என்றெல்லாம் இருந்தாலும் தனியார் அச்சிட்டால் அது கள்ளநோட்டுதான்.
edit aug 20
எவ்வளவு பெரிய வளாகம், கட்டடம், நவீன வசதிகள் என்றெல்லாம் இருந்தாலும் தனியார் கல்வி வணிக நிறுவனங்கள் வழங்குவது கள்ளக்கல்விதான் என்பது என் சொந்தக் கருத்து. இதில் என்னோடு முரண்படுகிற தோழமைகளும் இருக்கிறார்கள், உடன்பட்டு பொதுப்பள்ளி முறைக் காகக் குரல் கொடுக்கிற தனியார் பள்ளி நிர்வாகிகளும் இருக்கிறார்கள்.  அரசு என்றால் மத்திய அரசு, மாநில அரசு மட்டுமல்ல, உள்ளாட்சிகளும் அரசுகள்தான். அந்த உள்ளூர் அரசுகளின் பொறுப்பில் மறுபடியும் பள்ளிக்கல்வி விடப்பட வேண்டும் என்பதையும் சேர்த்தே வலியுறுத்து கிறேன். மத்திய அரசோ, மாநில அரசோ, உள்ளாட்சி அரசோ – எதுவானாலும் கல்வி வழங்குதல் அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

கல்வி அரசாங்கத்தின் ஏகபோகமாக இருந்தால் ஒரே மாதிரியான பாட முறைதான் இருக்கும், பன் முகத் திறன், அந்தந்தச் சூழலுக்கேற்ற மாறுபட்ட பாடத்திட்டம் இவையெல்லாம் இருக்காது என்கிறார்கள். அந்தந்த மாநிலத்தின் வரலாறு, பண்பாடு, சூழல்கள் சார்ந்த கல்விக்கு இடமளிப்ப தாக கல்வி முறையை மாற்றி, அதை ஏன் அரசுப் பள்ளிகளால் வழங்க முடியாது? அரசு அப்படிச் செயல்படுத்த வலியுறுத்துவதா, தனியாரிடமே இருக்கட்டும் என்று விட்டுவிடுவதா?

தனியார் பள்ளிகளில் பன்முகக் கல்வித் தேடலுக்கு வழி இருக்கிறதா என்ன? ஒரே மாதிரியாகக் குழந்தைகளை “மோல்டு” பண்ணுகிற வேலையைத்தான் தனியார் நிர்வாகங்கள் செய்கின்றன. தலைமுறைகள் இப்படி ஒற்றைத் தன்மையுடன் வார்க்கப்படுவது ஆபத்தானது. உலக அளவிலும் உள்நாட்டிலும் பொருளாதாரத்தைக் கைப்பற்றி ஆளுமை செலுத்துகிற பெரும் கார்ப்பரேட் சக்தி களுக்கு எதையும் கேள்வி கேட்காத, எதையும் தட்டிக்கேட்காத தலைமுறைகள்தான் வேண்டும். அப்படிப்பட்ட தலைமுறைகளைத் தயாரித்துக் கொடுக்கிற சேவையில்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டபோது அதை ஏற்க மறுத்தவை தனியார் நிர்வாகங்கள்.

ஒரு ஊரில் பெரிய தனியார் பள்ளியும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கேந்திர வித்யாலயாவில் யார் வேண்டுமானாலும் சேர முடியும் என்றும் வைத்துக்கொள்வோம். பெற்றோர்கள் எந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பார்கள்? அதே போல் மற்ற அரசுப் பள்ளிகளையும் ஏன் மாற்ற முடியாது? அரசுப் பள்ளிகளுக்கிடையே ஏன் வேறுபாடு?

எங்கும் தனியார்மயமாக்கப்படுகிறபோது கல்வியை மட்டும் எப்படி விலக்கிப் பார்க்க முடியும் என்று கேட்கிறார்கள். ராணுவத்தை, காவல்துறையை, உளவுத்துறையை, முதலில் சொன்னது போல் பணம் அச்சிடுவதைத் தனியாரிடம் விட்டுவிட முடியுமா? அதே போல்தான் கல்வி, மருத்துவம் இரண்டும் அரசின் முதல் கடமைகளில் சேர்க்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்ப டுவதில்லை என்பது உண்மை. ஆனால் அந்த உரிமைக்காகப் போராட முடியும், வழக்குத் தொடுக்க முடியும். தனியார் நிர்வாகங் களுக்கோ இட ஒதுக்கீடு சட்டமே பொருந்தாது. அவர்களை யார் கேள்வி கேட்பது? கல்வி உரிமைச் சட்டத்தின்படி பொருளாதாரத்திலும் சமூக அடிப்படையிலும் ஒதுக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறவர்கள், அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர்கள் தனியார் நிர்வாகி கள்தானே?

கல்வியாகட்டும், வேலையாகட்டும் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி ஏற்பாடே ஏன் தேவைப் படுகிறது? 100 சதவீதம் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலைமையை அரசுகளால் ஏற்படுத்த முடியவில்லை என்பதால்தானே, இருக்கிற கல்வி வாய்ப்புகளிலும் வேலை வாய்ப்புகளிலும் பகிர்ந்தளிப்பதற்கான இட ஒதுக்கீடு கொள்கை தேவைப்படுகிறது?

சில தனிப்பட்ட தனியார் கல்வி அறக்கட்டளைகள் ஒரு பாரம்பரியத்தோடு கல்விச் சேவையில் ஈடுபட்டு வந்திருப் பதை மறுப்பதற்கில்லை. ஏழைகளுக்கும் சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட வர்களுக்கும் அந்த நிறுவனங்கள் இலவசக் கல்வியும் வழங்குகின்றன என்பதும் உண்மை. விடுதலைக்கு முன் உருவான அத்தகைய கல்விச் சாலைகளையும், அதற்குப் பின் முதலீடு லாபம் என்ற அடிப்படையில் நடத்தப்படுகிற தனியார் நிறுவனங்களையும் ஒப்பிட முடியாது. இத்தகைய விதி விலக்குகளைப் பொது விதியாக வைத்துப் பேச முடியாது.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் வரவேற்கத்தக்கது. ஆனால், தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளிக்கு அனுப்புவது என்பதில் அரசு ஊழியர்களுக்கு உள்ள உரிமை மதிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களும் கூட அரசுப் பள்ளிகள் முறையாக, ஆரோக்கியமாக இயக்கப்படவில்லை என்பதால் பாதிக்கப்படுகிறவர்கள்தான். யாராக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளை விரும்பி அனுப்புகிற இடமாக அரசுப் பள்ளிகள் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? ஆட்சியாளர்களின் அரசியல் உறுதியின்மையே காரணம். அதை நிலைநாட்ட வலியுறுத்த வேண்டுமேயல்லாமல், தனியார் நிறுவனங்கள் இருந்துவிட்டுப் போகட்டும் என்பது சரியான தீர்வாகாது.

இதைச் சொல்கிறபோது தோசையைத் திருப்பிப் போடுவது போல நாளைக்குக் காலையிலேயே எல்லா தனியார் பள்ளிகளும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்ற பொருளில் சொல்ல வில்லை. ஆனால் அதை நோக்கி நகர வேண்டாமா? அதற்கு அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒரு தூண்டுதலாக இருக்க முடியும்.

எந்த மாற்றமும் தானாக வந்துவிடாது. அரசுப் பள்ளி தங்களுடைய சொத்து என்ற உணர்வோடு மக்கள் போராடப் புறப்பட்டால்தான், அதுவும் ஒருங்கிணைந்த போராட்டமாக வடிவெடுத்தால்தான் மாற்றம் நிகழும்.

-‘சன் நியூஸ்’ தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 19 இரவு ‘அரசுப் பள்ளிகள் யாருக்காக’ என்ற தலைப்பில் நடந்த ‘விவாத மேடை’ நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துகளின் சாரம்.

Kumaresan Asak