October 16, 2021

அரிசி விலை அதிரடி சரிவு ; மூட்டைக்கு ரூ400 குறைந்தது!

கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து அதிகரித்துள்ளதாலும் ,ஆந்திராவில் நெல் அறுவடை துவங்குவதாலும்,தமிழகத்தில் அரிசி விலை கொஞ்சம் கொஞ்சமாக் குறைந்து வருகிறது. தற்போது 100 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரகத்தை பொறுத்து ரூ200 முதல் ரூ400 வரை விலை குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
18 - rice price 1
இன்னும் 15 நாட்களில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் நெல் அறுவடை தொடங்கி விடும். இந்த ஆண்டு நல்ல நீர் வளம் இருந்ததால் விளைச்சல் நன்றாக உள்ளது. அடுத்த சாகுபடியும் உடனே தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அறுவடையான நெல்லில் பெரும்பகுதி விற்பனைக்கு வந்து விடும். இந்நிலையில் கர்நாடகா ஸ்டீம் ரைஸ் காவேரி சோனா 100 கிலோ மூடை 3300 ரூபாயில் இருந்து 3200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் எல்லா ரகத்திலும் ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. புது நெல் வந்ததும் புதிய ரக அரிசி விலை அதிகமாக குறையும். ஆனால் பழைய அரிசி விலை சீராக இருக்கும்” என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்தாண்டு பருவமழை ஏமாற்றியதால் தமிழகத்தில் ஜனவரியில் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரவேண்டிய அரிசி வரத்து குறைந்தது. எனவே கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அரிசி விலை உச்சத்தில் இருந்தது.
அப்போது 100 கிலோ எடைக்கொண்ட வெள்ளை பொன்னி ரூ5200 என விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை கடந்த ஆகஸ்ட் வரை நீடித்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் பெய்த மழையால் அங்கு நெல் நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதனால் அங்கிருந்து அரிசி மிக அதிகளவில் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. அரிசி வரத்து அதிகரிப்பால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ5200க்கு விற்ற 100 கிலோ எடை கொண்ட வெள்ளை பொன்னி தற்போது ரூ4800 எனவும், ரூ4400க்கு விற்ற பிபிடி பொன்னி ரூ4200 எனவும், ரூ3500க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி ரூ3200 எனவும், ரூ3500க்கு விற்ற 045 ரக அரிசி ரூ3000 எனவும், ரூ3000க்கு விற்ற குண்டுகார் ரூ2800 எனவும், ரூ 3900க்கு விற்ற இட்லி கிராந்தி அரிசி ரூ3600 என விற்பனை செய்யப்படுகிறது. ரகத்தை பொறுத்து 100 கிலோ எடைக்கொண்ட மூட்டைக்கு ரூ200 முதல் ரூ400 வரை விலை குறைந்துள்ளது.

அத்துடன் வரும் டிசம்பர் மாதம் அரிசி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இந்த விலையில் இருந்து இன்னும் மூட்டைக்கு ரூ100 முதல் ரூ200 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. அதனால் வரும் மாதத்தில் விற்பனை இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.