September 20, 2021

அரவிந்தர் ஆசிரம அதிர்ச்சி! மூன்று பெண்கள் தற்கொலை:

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் 3 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
pondy dec 18
அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பீகாரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி பெண்கள் 5 பேர் தங்கி இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 5 பேருக்கும் ஆசிரம நிர்வாகத்தினர் சிலர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவல்துறையில் புகார் செய்திருந்தனர்..உடனே அவர்கள் ஆசிரம விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது.

உடனே இதனை எதிர்த்து 5 பேரும் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டனர். ஆனால் ஆசிரம நிர்வாகத்தின் உத்தரவின்படியே நடக்க வேண்டும் எனவும், 6 மாதத்திற்குள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. அப்படி சுப்ரீம் கோர்ட் விதித்த 6 மாத கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 5 பெண்களில் ஒருவரான ஹேமலதா, ஆசிரமத்தின் 5வது மாடியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். போலீசார் அவரை சாதுர்யமாக பேசி கீழே அழைத்து வந்தனர். பின்னர் அந்த 5 பேரும் அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டு மன நல மருத்துவர்கள் மூலம் . கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் 5 சகோதரிகளும் தாய், தந்தை ஆகியோரும் காலாப்பட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 7 பேரும் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கினார்கள். அப்போது அங்கிருந்த மீனவர்கள் இதை பார்த்துவிட்டனர். உடனே ஓடி சென்று அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் 7 பேரும் தண்ணீருக்குள் அதிக தூரத்துக்கு சென்றுவிட்டனர். அவர்களை அலை இழுத்து சென்றது. மீனவர்கள் நீந்தி சென்று 4 பேரை மீட்டனர். 3 பேரை அலை இழுத்து சென்று விட்டது. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுடைய உடல் கரையில் ஒதுங்கியது.

கடலில் மூழ்கி இறந்தவர்கள் தாயார் சாந்திதேவி, சகோதரிகள் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ என்று தெரியவந்தது..மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அரவிந்தர் ஆசிரமத்தின் மீது 300 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் . எனவே அரவிந்தர் ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர், தந்தை பெரியார் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு தாக்குதலில், அசிரமத்தின் கண்ணாடிகள், பாரம்பரியச் சின்னம் சேதமடைந்தன. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினாலும் ஆசிரம பகுதி பெரும் பரபரப்பில் காணப்படுகிறது.

மேலும் அரவிந்தர் ஆசிரம பெண்கள் தற்கொலையை அடுத்து புதுவையில் நாளை மறுநாள் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் 20 தமிழ் அமைப்புகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரவிந்தர் ஆசிரத்தை அரசே ஏற்று நடத்தவும் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

தகவல் :http://jannalmedia.com/dpages.php?id=3173