அரசியல் விவாதத்தில் ஆர்வமா? அப்ப உங்களுக்குத்தான்..!
அரசியல் ஈர்ப்பு என்பது ஒரு வினோதமான, முற்றிலும் ஆச்சரியமான ஒரு உணர்வு.. சமூகத்தில் தான் சாதிக்க நினைப்பதை எந்த ஒரு தலைவன் முன்னெடுத்துச் செல்கிறானோ அவனை நோக்கி செல்வது. தலைமை ஏற்று வழி நடப்பது.ஆனால் தன்னுடைய எதிர்கால சிந்தனைகள் அனைத்தையும் அவனுக்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதாகாது. அரசியல் எதிரிகளின் குறைபாடுகளை எந்த அளவுக்கு விமர்சிக்கிறோமோ அதே அளவுக்கு, தான் நம்பும் தலைமை மக்களுக்கான பொது நலன் தாண்டி சொந்த நலனுக்காக விலகிச் செல்கிறதா என்பதையும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்திபார்க்க வேண்டும்..அப்படி சொந்த நலனுக்காக விலகி தகாத வழிகளில் எல்லாம் செல்லும் போதும் கேள்வி கேட்காமல் விசுவாசம் என்ற பெயரில் ஒருவன் தலைமை சொல்லே மந்திரம் என்று செயல்படுவானேயானால், அவன் தன்னளவில் அரசியல் சுதந்திரமற்ற ஒரு ஜடம்.
இன்னொருவனுக்காகவே தனது மூளையை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட அடிமை.. பரம்பரை பரம்பரையாய் இன்னொரு பரம்பரைக்கே விசுவாசம் என்ற பெயரில் கூலிப் பட்டாளம் போல் செயல்படுபவன் கொத்தடிமையிலும் கேவலமான கொத்தடிமை. காலத்துக்கு ஏற்ப சித்தாந்தங்களின் பயணங்களும் அதன் திசைகளும் மாறாமல் இருக்கவே முடியாது.. அப்படி புதுப்பிக்கப்பட்ட சித்தாந்தங்களை தூக்கி நடத்த, தலைமைகளும் மாறாமல் இருக்க முடியாது.
அந்தத் தலைமை குறிப்பிட்ட வம்சத்திடம் மட்டுமே வழி வழியாக கிடைக்கும் என்று நம்புகிறவன் மூளை சலவை செய்யப்பட்டு விட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன்..
தலைவனே செருப்பால் அடித்தாலும் நீங்கள் செருப்பால் அடிப்பதற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சொரணை கெட்டு போய் விட்டவன்.தான் நம்பும் தலைமையே நாளுக்கு ஒரு விதமாய் முட்டாள்தனமான நிலைப்பாடு எடுத்தாலும், அதனை நியாயப்படுத்தி பேசுவதையே மகிழ்ச்சியான ஒரு விஷயமாய் மாற்றிக் கொள்பவன் சமூகத்துக்கே அபாயமானவன்.சமூக நலனை மட்டுமே எதிர்பார்ப்பவன் தனது அரசியல் தலைமையையும் எதிர்த்து குரல் கொடுப்பான்..
அது கட்டுக்கோப்பை குலைக்கும் கலகக்குரல் அல்ல. நியாயத்திற்கு வழி கேட்கும், கலகக்குரல். தவறான பாதைக்கு சென்றால் என் ஆதரவு உனக்கு கிடைக்காது என, உயிருக்குயிராய் நேசிக்கும் தலைமைக்கே எச்சரிக்கை விடுக்கும் நேர்மையான குரல்.. உண்மையில், தலைவன் தான் நேர்மையான தொண்டர்களுக்கு பயந்து கட்டுப்பட்டு அரசியல் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்..ஆனால் இங்கோ, எந்த தனிப்பட்ட ஆதாயத்தையும் பார்க்காத தொண்டர்கள், சுயநல தலைவர்களிடம் பயந்துபோய் காவடி தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்.
இவர்களிடம் அரசியல் விவாதம் நடத்தினால் ஒரு புடலங்காய்க்கும் பிரயோஜனம் கிடையாது..
ஏழுமலை வெங்கடேசன்