October 25, 2021

அரசியலில் இறங்க தயக்கம் ஏன்? லிங்கா ஆடியோ விழாவில் ரஜினி விளக்கம்!

சென்னை சத்யம் தியேட்டரில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. திரையுலகமே திரண்டு வந்த அந்த விழாவை நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார். படத்தின் பாடல்காட்சிகள், முன்னோட்டம் திரையிட்ட பிறகு, லிங்கா படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மேடைக்கு அழைத்தனர். லிங்கா இசைவெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேச்சின் சுருக்கம்..
linga .2
* தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கேயார் பேசும்போது,“ரஜினி படம் வெளியாகும் நாட்களை அவரது ரசிகர்கள் தங்களின் பிறந்தநாளைப்போல் கொண்டாடுவார்கள். லிங்கா படமோ ரஜினியின் பிறந்த நாளிலேயே வருகிறது. அதுதான் லிங்கா படத்தின் ஸ்பெஷாலிட்டி” என்று குறிப்பிட்டார்.

* தேசிய கீதம் படம் வெளியான போது ரஜினி குறித்து ஒரு பத்திரிகை பேட்டியில் சொன்ன கருத்தையே தன் பேச்சிலும் குறிப்பிட்டார் இயக்குநர் சேரன்… “ காந்தி, காமராஜருக்கு அப்புறம் உங்களத்தான் தலைவரா பாக்குறோம். எங்கள் பாசம் உண்மை. உங்கள நம்பிட்டோம், நல்லது பண்ணுங்க” என்றவர் ரசிகர்களின் சந்தோஷத்துக்காக நீங்கள் நிறைய படங்கள் பண்ண வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

* நடிகர் விஜயகுமார் பேசும்போது, ’இந்த நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்ல மாட்டான் ’என்று கூறிவிட்டு, “மக்கள் உங்களுக்கு பெரிய விருதை விரைவில் அளிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள் ரஜினி அவர்களே…” என்று பேசினார்.

* லிங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு பேசும்போது, ரஜினியை தமிழ்நாட்டின் கடவுள் என்று குறிப்பிட்டார்.

* அவருக்கு முன் பேசிய லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ”இந்தப்படத்தை கடவுளை நம்பித்தான் ஆரம்பித்தேன். அவர்தான் நல்லவிதமாக முடித்துக் கொடுத்தார். அந்த கடவுளின் பெயர் ரஜினி” என்று பேசினார்.

* நகைச்சுவை நடிகர் சந்தானம் லிங்கா படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு, “ இவ்வளோ வெறித்தனமான ரசிகர்களை நான் பார்த்ததே இல்லை. அந்த ரசிகர்களை இவ்வளோ வெறித்தனமா நேசிக்கிற நடிகரையும் நான் பார்த்ததில்லை” என்று பேசிய போது ரசிகர்களுடன் ரஜினியும் கைதட்டினார்.

படத்தின் இயக்குநர் கே. எஸ்.ரவி குமார் பேசும் போது,””ரஜினி ஒரு திறந்த புத்தகம். அவர் ஒவ்வொரு காரியத்திலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதற்கு ஷூட்டிங்கில் நடந்த ஒரு விஷயத்தை வைத்து சொல்ல முடியும். இந்த படத்தின் அறிமுக பாடலுக்கு பிருந்தா நடனம் அமைத்து கொடுத்தார். அதை பார்த்த ரஜினி 25 வயதுக்காரர் ஆடுற மாதிரி நடனம் சொல்லிக் கொடுக்கிறீங்களே. அஜித், விஜய், தனுஷ் ஆடுற மாதிரி சொல்லிக் கொடுக்கிறீங்களே. என்னால் எப்படி ஆடமுடியும் என்று சொல்லிக் கொடுங்களேன் என்று சொன்னார். பிறகு வேறு ஸ்டைலில் நடனம் அமைக்கப்பட்டு ரஜினி ஆடினார். யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்று நினைப்பவர் ரஜினி. இதில் இருந்தே அது தெரிகிறது. நாசூக்காக பிருந்தாவிடம் சொன்னார். அவர் நினைத்திருந்தால் ஆடமுடியாது என்று வேறு மாதிரி சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை. இந்த படத்துக்கு ‘லிங்கா’ என்று பெயர் வைத்ததே ரஜினிதான். கமல் நடித்த ‘தெனாலி’ படத்துக்கும் பெயர் வைத்தது ரஜினிதான். ‘லிங்கா’ பட தலைப்பை ரஜினி சொன்னதும் அமீர் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் கேட்டோம். தலைவன் கேட்கும்போது தர முடியாது என்று சொல்ல முடியாது என கூறி உடனே பட தலைப்பை எங்களுக்கு தந்தார்.

கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்கா, அனுஷ்காவை தேர்வு செய்ததை அறிந்ததும் இவ்வளவு குறைவான வயதுள்ளவர்களை ஜோடியாக்குகிறீர்களே என்றார். சோனாக்ஷி அப்பா என் நண்பர் என்றார். ரஜினியை பொறுத்தவரை அவருக்கு வயது குறைந்துகொண்டே இருக்கிறது. 28 வயது கொண்ட ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியானார். பின்னர் 24 வயது கொண்ட தீபிகா படுகோனேவுடன் ஜோடி சேர்ந்தார். இப்போது 22 வயதான சோனாக்ஷி சின்கா ஜோடியாகியுள்ளார். ரஜினியுடன் நடிக்கும் கதாநாயகிகளுக்கும் வயது குறைந்து கொண்டே போகிறது.”என்றார்.

கடைசியாகப் பேசிய ரஜினி “என்னுடைய ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. இந்த ஆண்டே படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தப் படத்தை ஆறே மாசத்திலே எடுத்து முடிக்க சரியான ஒரே ஆள் கே.எஸ். ரவிகுமார் தான். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் ஆன பிறகு நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் மீண்டும் நடிக்க வந்ததற்கு காரணம் ரசிகர்கள் தான். அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் வேலைகள் தொடங்கியதால் பத்திரிகையாளர்கள், ஊடகங்களை என்னால் சந்திக்கவே முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கே.எஸ். ரவிகுமாரும் மற்றும் அனைவரும் ஷூட்டிங்கின் போது என்னை ஒரு சிறு குழந்தை போல பார்த்துக் கொண்டனர். நான் லேட் பண்ணுவேன். ஆனால் ஒரு விஷயத்தில் இறங்கிட்டா டக்குன்னு இறங்குவேன். என்னைப் பத்தி எனக்கே தெரியாது. படம் பண்றது ஈஸி. அதே போல அரசியலுக்குள் நுழைவதும் ஈஸி. ஆனால் வெற்றி கிடைக்கணுமில்ல? திரும்பத் திரும்ப நான் ‘மேலே’ கையைக் காட்டுவேன். ‘அடப்போய்யா’ன்னுவாங்க. எல்லாத்துக்கும் சூழல் அமையணுமில்ல.

ஆனாலும் அரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இங்கு பேசினார்கள். என் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது என்று வைரமுத்து சொன்னார். என்னை பற்றி எனக்கு தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன். அரசியல் என்பது என்ன? அதன் ஆழம் என்ன? என்பது எனக்கு தெரியும். யார் தோளில் ஏறி போகவேண்டும் எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் என்பது தெரியும். அப்படி போகும்போது நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுவதும் தெரியும். இதெல்லாம் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை மாதிரி. ஒரு அலை மாதிரி. அதெல்லாம் ஏற்பட வேண்டும். அரசியல் ஆழம் எனக்கு தெரியும் என்பதால்தான் தயங்குகிறேன். இங்கு பேசியவர்கள் எல்லோரும் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கெல்லாம் பதில் பேசாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னை பற்றி நினைத்து விடுவார்கள். அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன்.”என்று பேசினார்.

இன்று வெளியான டிரைலர் பார்க்க:https://www.youtube.com/watch?v=vL-c_RtYkBE

பாடல் ஆடியோ கேட்க:https://www.youtube.com/watch?v=c27BSddMccs&src_vid=c27BSddMccs&feature=iv&annotation_id=annotation_3131397747

தகவல் உதவி :http://jannalmedia.com/dpages.php?id=2476