October 19, 2021

அரசியலாக்கப்படுகிறதா அவதூறு வழக்குகள்?

ஆரோக்கியமான அரசியலே அவதூறு செய்யப்படுவதாக நான் பார்க்கிறேன். ஆளுங் கட்சியின் பணி ஆட்சி நிர்வாகத்தை முறையாக நடத்திச் செல்வதும், மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதும் தான். எதிர்க்கட்சிகளின் பணி அரசைக் கண் காணிப்பதும், தவறுகளை விமரிசிப்பதும்தான். இந்த இரண்டும் இணைந்ததுதான் ஜன நாயகம்.எதிர்க்கட்சிகளின் விமரிசனங்களையும், பத்திரிகைகளில் வரும் விமரிசனங் களையும் ஆட்சியாளர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அரசுத் தரப்பு நியாயங்களையும் எடுத்த நடவடிக்கைகளையும் எடுத்துச்சொல்லக் கிடைத்த வாய்ப்பாக்கிக்கொள்ள முடியும்.

edit jan 19

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது தொடர்பாக இரண்டு பத்திரிகைகளில் வந்த செய்திக் காக அவதூறு வழக்குகள் போடப் படுகின்றன. அந்தச் செய்திகள் உண்மைக்கு மாறா னவை  என்று சொல்கிறது அரசு. அரசு சொல்வது மட்டும்தான் உண்மை என்று ஏற்றுக் கொண்டு போக வேண்டுமா என்ன? அப்படியே உண்மைக்கு மாறான செய்தி என்றால், அதற்கான மறுப்பையும் உண்மையில் நடந்தது என்ன என்ற விளக்கத்தையும் அளித்திருக்கலாம், அதை வெளியிட அந்தப் பத்திரிகைகள் மறுக்குமனால், பத்திரி கை கள் மன்றத்தில் – பிரஸ் கவுன்சிலில் – புகார் செய்ய முடியும். அதன் விசாரணையில் பத்திரிகை களின் செய்தி தவறானதுதான் என்று தெரியவருமானால், அதே பத்திரிகை கள் வருத்தம் தெரிவித்து வெளியிட வேண்டும் என்ற சட்டப்பூர்வ ஏற்பாடு இருக்கிறது. இந்த அரசு ஏன் பிரஸ் கவுன்சிலை நாடவில்லை?

ஒரு தலைவரின் பேச்சைச் செய்தியாக வெளியிடும் ஊடகத்தின் மீது கூட அவதூறு வழக்கு! செய்தி யை வாசித்தவர் மீது கூட அவதூறு போட்ட முதல் மாநிலம், ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். அரசின் நோக்கம் எதிர்க்கட்சிகளையும் ஊடகங் களையும் வழக்குகளில் சிக்கவைத்து அலைக் கழிப்பதுதான். ஆனால், எந்த எதிர்க் கட்சியாவது தனது விமரிசனத்தை நிறுத்திக்கொண்டு விட்டதா? எந்தப் பத்திரிகை யாவது தனது பேனாவை மூடிவைத்துவிட்டதா? எந்தத் தொலைக் காட்சியாவது தனது கேமராவை அணைத்துவைத்துவிட்டதா?

எவ்வளவு பெரிய தலைவரானாலும், எந்த ஊடகமானாலும் விமரிசிக்கிறபோது தனிப்பட்ட முறையில் ஒருவரை இழிவுபடுத்துகிற, நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவைக்கிற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதே என் கருத்து. ஆனால், அப்படி அவர்கள் தவறான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அதை மேடைகளில் பேசு பொருளாக்கி, மக்களின் தீர்ப்புக்கு விடலாமே…அரசை விமரிசிக்கட்டும், ஆனால் முதலமைச்சரை ஏன் விமரிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். முதலமைச்சரே தனது அறிக்கைகளில் “நான் ஆணையிட்டபடி,” “எனது அரசு” என்றுதானே அறிவிக்கிறார்? மாநிலத்தில் முதலமைச்சரின் அமைச்சரவைதான் பொறுப்பேற்றிருக்கிறது. மத்தியில் பிரதமரின் அமைச்சசரவை தான் அமைக்கப்படுகிறது.

முதலமைச்சரையோ பிரதமரையோ விமரிப்பது மாநில அரசையும், மத்திய அரசையும் விமரிசிப்பது தான். அரசின் செயல்பாடு பற்றிய விமரிசனத்தை ஏன் தனிப்பட்ட தாக்குத லாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றமே கேட்டிருக்கிறது.நீதி மன்றங்களில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் குவிந்திருக்கின்றன. அதனால் குறிப்பாக ஏழைகளுக்கான நீதி தாமதப்படுத்தப்படுகிறது. இந்த நிலைமை யில், ஆட்சியாளர்கள் இப்படி மேலும் அவதூறு வழக்குகளைக் குவிப்பது நியாயமா? தனது நடவ டிக்கைகளால் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது, மக்களின் ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்குமானால் இப்படி அவதூறு வழக்குகளை வேண்டியதில்லை. அரசிடம் தன்னம் பிக்கை இல்லை என்பதைத்தான் வழக்குகள் காட்டுகின்றன.

அவதூறு வழக்கு அரசியலுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. முன்பு, ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது அவதூறு மசோதா என்றொரு சட்ட முன்வரைவே கொண்டுவரப்பட்டது. அரசை விமரிசிக்கிற ஒரு கவிதையை எழுதினால் கூட, ஒரு திரைப்படக்காட்சி வந்தால் கூட, ஒரு நாடகம் நடத்தப்பட்டால் கூட வழக்குப் போடவும் சிறையில் அடைக்கவும் அந்தச் சட்ட முன்வரைவு வழி செய்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டதால்தான் அது விலக்கிக்கொள்ளப்பட்டது.

இப்போதுகூட, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், ஒரு நல்ல ஆய்வு மாணவராக வளர்ந்துவந்த தலித் இளைஞர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டது ஏன்? அங்கே சாதி அடிப்படையில் பாகுபாடுகள் நிலவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐந்து மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இப்படிப் பாகுபாடு காட்டப்படுவது சாதிப்பிரச்சனை இல்லையாம், ஆனால் அதைச் சுட்டிக் காட்டியது சாதிப்பிரச்சனை கிளப்புகிற செயலாம். இப்படிக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதில் ஒரு பாஜக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதும் அவதூறு இல்லையா?எதற்கெல்லாம் அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன என்பதும் செய்தியாகும் என்பதை அரசும் அதிகார வர்க்கமும் உணர வேண்டும்.

-Kumaresan Asak