September 23, 2021

அய்லானைப் போல் கடற்கரையில் சவமாய் படுத்து ஏராளமானோர் அஞ்சலி!

துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லானின் சடலமும், அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படங்கள் உலகையே கண்ணீர் கலங்கடித்து விட்டது. இந்த சம்பவம் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
aylon sep 9
அந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்த கொடூரத்தை கண்டித்தும், அகதிகளை காக்க வேண்டியும் பல்வேறு வகையான படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அதில் சிறுவனின் உயிரற்ற உடலைப் பார்த்து கடல்வாழ் உயிரினங்களும் கண்ணீர் வடிப்பது போன்று உள்ளது. மற்றொரு படத்தில் வானத்தில் இருந்து வந்த தேவதை சிறுவனை அழைத்துச் செல்கிறார். அப்போது இனியாவது மனிதர்கள் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அந்த தேவதை கூறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவன் அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மொராகோவின் கடற்கரையில் ஒன்று கூடிய சமூக ஆர்வலர்கள் சிறுவனின் உடல் கிடந்தது போல அனைவரும் மணலில் சவம் போல் படுத்து அஞ்சலி செலுத்தியது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாய் இருந்தது.

இங்கு கூடிய சுமார் 30 சமூக ஆர்வலர்கள் இறந்த அய்லன் அணிந்திருந்ததைப் போலவே சிகப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன், சிறுவன் இறந்து கிடந்த அதே நிலையில் அனைவரும் கடற்கரை மணலில், சுமார் 20 நிமிடங்கள் படுத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.