December 4, 2021

அயோத்தியில் 5 கோபுரங்களுடன் ராமர் கோயில் : மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

இப்போதும் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பு அளித்தது. மேலும் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினால் பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டது.

இந்த தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு அங்கமாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையானது, ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரம் நடைபெறும், பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களின் முக்கிய கூட்டத்துக்கு பின்னர் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த விழா பிரதமர் மோடியின் வசதிக்கேற்ப அடுத்த மாதம் 3-ம் தேதி அல்லது 5-ம் தேதி நடைபெறும். இதற்கான அழைப்பை அவர் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிற போது, அதுவே ராம ஜென்ம பூமிக்கு அவரது முதல் பயணமாக அமையும். ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 3-ம் தேதி அல்லது 5-ம் தேதி நடைபெறுவதை அறக்கட்டளை உறுப்பினரான காமேஷ்வர் சவுபால் உறுதிப்படுத்தினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.