August 3, 2021

அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே போகுது வேலையின்மை!

உலகின் பெரியண்ணா என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 38.42 லட்சத்தை கடந்து விட்டது. அதில், 12.9 லட்சம் பேர் அமெரிக்கர்கள். பாதிக்கப்பட்ட வர்களில் இதுவரை, 2.70 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதில், 76,537 பேர் அமெரிக்கர்கள் எனத் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், அங்கு வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை, 3.33 கோடியாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவில் பணி புரிவோரின் எண்ணிக்கையில், 20 சதவீதமாகும். வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணம் கோரி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், 69 லட்சம் அமெரிக்கர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் என்-95 முக கவசங்களை தயாரிக்கிற, பீனிக்சின் ஹனிவெல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு அதன் பணியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருகிறது. நாம் இப்போது கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் உள்ளோம். இது மிகவும் பாதுகாப்பான கட்டம். அமெரிக்கா படிப்படியாக திறக்கப்படுகிறது. நமது மக்களின் ஆழமான அர்ப்பணிப்புக்கு நன்றி. அமெரிக்கா கிட்டத் தட்ட 250 ஆண்டு களுக்கு முன் விடுதலை பெற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நமது சுதந்திரத்தை வெளிநாட்டினருக்கு வழங்க அரசியல்வாதிகள் அனுமதித்தனர். ஆனால் நாங்கள் அதை திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அதை திரும்ப எடுத்து வருகிறோம். நீங்கள் இப்போது வேலை வாய்ப்பு பெற்றுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கையை பாருங்கள். அது தெரியும். எங்கள் நிர்வாகம் 2 எளிய விதிகளில் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஒன்று, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், மற்றொன்று, அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பைத் தர வேண்டும் இதுதான் அந்த 2விதிகள். நமது நாட்டின் மக்கள் போர்வீரர்கள். உங்கள் உதவியுடன் நாங்கள் கொரோனா வைரசை வீழ்த்தி வெற்றி காண்போம். நமது எதிர்காலத்தை பெரிதாக உருவாக்குவோம்.

அமெரிக்க இதயங்களுக்கு, அமெரிக்க கைகளுக்கு, அமெரிக்க ஆன்மாக்களுக்கு பெருமை சேரட்டும். நீங்கள் நல்ல தரமான முக கவசங்களை தயாரிக்கிறீர்கள். மற்ற நாடுகளைப் போல் மோசமான முக கவசங்கள் இல்லை. இதை போன்று நல்ல நிறுவனம் இல்லை. துணிச்சல் நிறைந்த நமது டாக்டர்கள், நர்சுகள், கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுகையில் அவர்களை பாதுகாக்க இந்த கவசங்கள் பயன் படுகின்றன. 150 தொழிலாளர்கள் இரவு பகலாக 3 ஷிப்டுகளில் தினமும் பணிபுரிகிறீர்கள். வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்ததை எண்ணிப் பாருங்கள். நீங்கள் இந்த நம்ப முடியாத தொழில் துறையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இது மிகப்பெரிய அணி திரட்டல் ஆகும். ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியை நம்புவது கடினம். ஆனால் அது ஒரு மோசமான எதிரி.உங்களுக்கு முன் இருந்த தலைமுறை தேசபக்தர்களைப் போலவே இந்த தொழில் நிறுவனத்தின் தொழிலாளர்களும் நமது தேசத்தை பாதுகாப்பதற்கும், ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், அவர்களின் இதயத்தையும், ஆன்மாவையும் ஊற்றுகிறார்கள்”என்று அவர் கூறினார்.

இதனிடையே , ஊரடங்கை தளர்த்தி, வேலைவாய்ப்பைத் தரக் கோரி, பல்வேறு இடங்களிலும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ஊரடங்கால் போக்குவரத்துத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ‘ஊபர், ஏர் பி.என்.பி.,’ போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மொத்த அமெரிக்க பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 32 லட்சம் அமெரிக்கர்கள், வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணத்தை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.5 சதவீதமாக குறைந்திருந்தது. தற்போதைய சூழல் மேலும் மோசமடைந்து வருவதால், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், 15 சதவீதத்திற்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக்கும்