September 18, 2021

அப்ப உங்க ஊர் ஸ்மார்ட் சிட்டி லிஸ்டுலே இல்லையா? – இண்டர்வியூக்களில் நாளையக் கேள்வி

இந்தியாவின் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பில் நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட் சிட்டி’கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.அது சரி.. ஸ்மார்ட் சிட்டி -ன்னா என்ன ?? என்று கேட்டால் இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும் . கேமராக்கள் , வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் . இதன் மூலம் நீங்கள் ஒரு விளக்கை அணைக்க மறந்துவிட்டாலும் உங்களின் கட்டிடம் உங்களுக்கு அந்த வேலையை செய்து முடிக்கும் . உங்கள் கார்கள் உங்களுக்கு டிராபிக் இல்லாத இடமாக பார்த்து பார்க் செய்திட உதவும்.இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் பல முன்னனி நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க பல சாப்ட்வேர்களை உருவாக்கி கொண்டே இருப்பர் .இப்போது முன்னனி நிறுவனமான ஐ.பி.எம். பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க உதவ முன்வந்துள்ளது . இந்த ஐ.பி.எம் நிறுவனம் சிங்கப்பூர் கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள வண்டிகளின் எண்ணிக்கையை குறித்து வைத்து எந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆக போகிறது என முன் கூட்டியே கணித்து விடும் . அதற்கேற்ப அனைத்து பணிகளும் மாற்றி டிராபிக் ஜாம் இல்லாமல் செய்து விடுவர்.மேலும் தண்ணீர் எல்லாம் ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கிடப்படும் . இதன்மூலம் பயனாளர்கள் தங்களின் தண்ணீர் பயனீட்டு அளவை அவர்களே பார்த்துக் கொள்வர் . மேலும் அதை மற்ற மக்களின் பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.மேலும் இந்த நகரங்களில் மக்கள் உதவியின் மூலம் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க பல தொழில்நுட்பங்களை அமைப்பர். மேலும் கழிவுகள் அனைத்தும் ஓரே குழாய் வழியாக இணைக்கப்பட்டு மொத்தமாக சுத்திகரிக்கப்படும் .
edit smarcity 1
பா.ஜனதா அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த திட்டத்துக்கு நகரங்களை தேர்வு செய்வதற்கான அடிப்படை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தும். இங்கு அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் நாடு முழுவதிலும் இருந்து 98 நகரங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் சிட்டிகளாகும் அந்த 98 நகரங்களின் பட்டியலை, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று வெளியிட்டார்.இந்த பட்டியலில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தில் இருந்து தலா 12 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, வேலூர், சேலம், ஈரோடு, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 12 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மராட்டியத்தில் இருந்து நவி மும்பை, நாசிக், தானே, கிரேட்டர் மும்பை, அமராவதி, சோலாப்பூர், நாக்பூர், கல்யான்-டோம்பிவிலி, அவுரங்காபாத், புனே ஆகிய 10 நகரங்களும், கர்நாடகத்தில் இருந்து மங்களூரு, பெலகாவி, ஷிவமோகா, ஹுப்பள்ளி-தர்வார், துமக்கூரு, தாவணகரே ஆகிய 6 நகரங்களும் இடம் பிடித்துள்ளன.

மேலும் குஜராத்தின் காந்திநகர், ஆமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், தகோட் ஆகிய 6 நகரங்களும், ஆந்திராவின் விசாகப்பட்டினம், திருப்பதி, காக்கிநாடா ஆகிய 3 நகரங்களும், கேரளாவின் கொச்சியும், புதுவையின் உழவர்கரை பகுதியும் இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த நகரங்களை தவிர மத்திய பிரதேசம் 7, ஒடிசா 2, பஞ்சாப் 3, தெலுங்கானா 2, ராஜஸ்தான் 4, மேற்கு வங்காளம் 4, பீகார் 3, அரியானா 2 என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நகரங்களும் ஸ்மார்ட் சிட்டியாகும் வாய்ப்பை பெற்றுள்ளன.

இந்த பட்டியலை வெளியிட்டு பேசிய வெங்கையா நாயுடு , “நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்து வதற்காக 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த திட்டம் மற்றும் அடல் திட்டங்களின் மூலம் நாட்டின் 80 சதவீத நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியும். இது தற்போதைய முக்கிய தேவையும் ஆகும். இந்த திட்டத்தில் இணைய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்து உள்ளன. மேலும் நமது சொந்த தனியார் துறைக்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.
edit smarcity 2
இந்த திட்டத்துக்காக 98 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. காஷ்மீர் மாநிலத்துக்கு ஒரு ஸ்மார்ட் சிட்டிக்கான வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த நகரத்தை தேர்வு செய்ய மேலும் கால அவகாசம் தேவை என மாநில அரசு கேட்டு உள்ளது. மேலும் உத்தரபிரதேசத்துக்கு 13 நகரங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், 12 நகரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 13-வது நகரத்துக்கான வாய்ப்பில் அந்த மாநிலத்தின் ரேபரேலி மற்றும் மீரட் நகரங்கள் ஒரே புள்ளிகளை பெற்று சம வாய்ப்பில் நீடிக்கின்றன. எனவே இந்த 13-வது நகரம் குறித்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். இந்த காரணங்களால் மீதமுள்ள 2 நகரங்களை அறிவிக்க முடியவில்லை. எனினும் அந்த 2 நகரங்களும் வருகிற நாட்களில் அறிவிக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டிகளில் குடிநீர், மின்சார வினியோகம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சுகாதார வசதி, போக்கு வரத்து வசதி, வீட்டு வசதி குறிப்பாக ஏழைகளுக் கான வீட்டுவசதி போன்ற உள் கட்டமைப்புகள் மேற்கொள்ளப் படும். அந்த வகையில் குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரம் உறுதி செய்யப்படுவதுடன், தூய்மை, நிலையான சுற்றுச்சூழல் மற்றும் நவீன வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம், மின் ஆளுமைத்திறன், குடிமக்களின் பங்களிப்பு, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
smart-city
இந்த ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதற்காக ரூ.48 ஆயிரம் கோடிக்கான வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கும். இதே அளவு தொகையை அந்தந்த மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து உருவாக்க வேண்டும்.அந்தவகையில் மத்திய அரசு, மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து ரூ.96 ஆயிரம் கோடி முதலீட்டில் 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த நகரங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.100 கோடி வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் வழங்கும்.

எனினும் பயனீட்டாளர் கட்டணம், நிலங்கள் மூலமான வருமானம் மற்றும் கடன்கள் உள்ளிட்ட வருவாய் மூலமும் கூடுதல் நிதி வசதி உருவாக்கப்படும். மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற நிதி நிறுவனங்கள், தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதி, தனியார் துறை போன்றவையும் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முதலீடு அதிகமாக தேவைப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இதன் மூலம் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்”என்று வெங்கையா நாயுடு கூறினார்.