September 20, 2021

அன்புள்ள சுந்தர் பிச்சை அவர்களுக்கு…! -எம். பாண்டியராஜன் எழுதிய கடிதாசு!

அன்புள்ள சுந்தர் பிச்சை அவர்களுக்கு…

உங்களுக்கும் எனக்கும் எந்தவித அறிமுகமும் கிடையாது, இன்னும் சொல்லப் போனால் மிகவும் பாமரனான நான் இதற்கு முன் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. எனக்குத் தெரிந்த பிச்சைகள் எல்லாம் தமிழ்நாட்டுக் கிராமங்களில் அலைபவர்கள்தான். பிறந்த குழந்தை தங்கவில்லை என்றால், யாரிடமாவது கொடுத்துவிட்டுப் பின், மடியேந்திப் பிச்சையாகப் பெற்று, பிச்சை என்று பெயரும் வைப்பார்கள். இப்படியான பிச்சைகள் எங்கள் அம்மா ஊரில்கூட இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்.
edit sep 7 a
கடந்த மாதம் முழுவதும் தமிழகத்தில் வாழ விதிக்கப்பட்ட தமிழர்களிடையே ஒரே உற்சாகம். யாரோ சுந்தர் பிச்சையாம், கூகுள் நிறுவனத்துக்கே தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம் என்று ஒரே பேச்சு. கேள்விப்பட்டவுடன் நானும்கூட நினைத்தேன், ‘பார்றா, நம்மூர்ப் பிச்சைகளில் ஒருவர் அமெரிக்காவில் சாகசம் செய்வதை’ என்று. பிறகுதான் தெரிந்தது நீங்களும் சென்னைக்காரர்தான் என்பது. விக்கிபீடியாவிலோ தங்கள் பள்ளியில்தான் நீங்கள் படித்தீர்கள் என்று அறிவித்துக் கொள்வதற்காகக் குத்துவெட்டே நடந்து, குழப்பிக்கொண்டிருந்தது. பிறகு விக்கிபீடியாக்காரர்களே தலையிட்டு எல்லாவற்றுக்கும் முடிவு கட்டினார்களாம்.

தமிழர்களுக்கு எத்தனையோ அபூர்வமான குணங்கள் உண்டு, சென்னையில் படித்த உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ‘ஊர்ல கல்யாணம் என்றால் மார்ல சந்தனம்’ என்றலைவது, அதேவேளை ‘பக்கத்து வீட்டில் இழவு என்றால்கூட பம்மித் திரிவது’. சமூக வலைத்தளங்களில் உங்களுக்காக ஒரே வாழ்த்து மழை பெய்துகொண்டிருந்தது. யாருக்கு வாழ்த்துச் சொல்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமா, தெரியவில்லை. இருட்டில் கண்ணடிக்கிற மாதிரி, கடலில் பெருங்காயம் கரைக்கிற மாதிரி கரைத்துக்கொண்டிருந்தார்கள்.

உள்ளபடியே அமெரிக்கவாழ் நண்பர் ஒருவர் காலையில் முகநூலில் இந்தத் தகவலைப் பதிவிட்டிருந்தார். பிற்பகல் எத்தனையோ செய்திகளில் ஒன்றாக இருந்தது, மாலையில் இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் அவ்வளவு அக்கறை காட்டாத முன்னாள் நடிகரும் இன்னாள் அரசியல் தலைவருமான விஜயகாந்த்கூட வாழ்த்துத் தெரிவித்தார். வேறு பல தலைவர்களும் வாழ்த்தத் தொடங்கினார். உள்ளூரில் எவ்வளவோ நடந்தபோதும் கருத்தோ, கண்டனமோ, வாழ்த்தோ தெரிவிக்காத முதல்வர் ஜெயலலிதாகூட மறுநாள் உங்களை வாழ்த்தினார். பாலஸ்தீனத்தின் யாசர் அராபத் தொடங்கி, ஒபாமா வழியாக சச்சின் தெண்டுல்கர் வரை வாழ்த்தத் தயங்காத திமுக தலைவர் மு.கருணாநிதியோ, ‘அட, எல்லாரும் வாழ்த்திவிட்டார்களே’, எனப் பதறி அதற்கும் அடுத்த நாள் உங்களை வாழ்த்திவிட்டார். இவர்கள் எல்லாம் வாழ்த்தியது தங்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. எல்லாம் ஒருவழிப் பாதைதான். இந்த இடைவெளியில் ஏதோவொரு நாள் வாழ்த்துத் தெரிவித்த இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் நீங்கள் ட்விட்டரில் நன்றி தெரிவித்ததாகக் கேள்விப்பட்டேன். அதுசரி, இப்படிக் கூட்டம் கூட்டமாக வாழ்த்திக்கொட்டினால் உங்களாலும் என்னதான் செய்ய முடியும்?

இதுபற்றி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஏன், ட்விட்டரில் நன்றி கூறியிருக்கிறாரே சுந்தர் பிச்சை என்றார், ஆர்வத்துடன் தேடிப் பிடித்தேன். …. Its been overwhelming to see such generous and warm responses from many dear friends, colleagues and strangers – heartfelt thanks. ப்ச். இங்கிருந்து வாழ்த்துச் சொன்னவர்களில் யாரும் உங்கள் நண்பரும் அல்லர், உங்கள் சகாக்களும் அல்லர், all strangers! (Stranger – பிறர், வெளியாள், தொலைநாட்டவர்- ஊரினர், பழக்கமற்றவர், புதியவர், ஏதிலார், அக்கறைக்கு உரியவரல்லாதோர், அன்னியர், முகமறியாதவர், பரதேசி, வேற்றாள், வேற்றுமனிதர், அயலார்… என்று அகராதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள்), இந்தப் பட்டியலில்தான் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த்… இன்னமும் நிறைய பேர்…, அனேகமாக வைகோகூட வாழ்த்தியிருப்பார், நான் கவனிக்கவில்லை).

இந்த மீடியாக்காரர்கள், அச்சு, அசல், ஒலி, ஒளி, என வேறுபாடு இல்லாமல் அனைவரும் கொண்டாடிவிட்டார்கள், உங்களுக்குத் தெரியுமா? சாதாரணமாகவே இவர்கள் ஆடித் தீர்த்துவிடுவார்கள், இதில் தமிழ்ப் போதை வேறு சேர்ந்து கொண்டுவிட்டதா, கேட்கவே வேண்டாம்.

இதெல்லாம் ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தால், சுந்தர் பிச்சை என்ன சாதி எனக் கண்டுபிடிக்க சிலர் முயலுவதாகவும் சாதி பார்க்காதே தமிழா என்றும் முகநூலில் ஒரே சாக்கடைப் பிரவாகம். இதற்கு நடுவே திடீரென ‘உலக’ பிராமணர் அமைப்பின் பெயரால் இடப்பட்ட ஒரு பதிவு, முகநூலில் ஒரு புதிய, திருப்பத்தை என்று கூற முடியாது, திருகலை ஏற்படுத்தியது எனலாம்.

‘இந்தியா, குறிப்பாக, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு அதிகமாக, அதிகமாக, அமெரிக்காவுக்கு லாபம். புத்திசாலிகளுக்கு அங்கே உயர்ந்த இடம். ஏன், மீதி 31 சதவிகிதத்தை ஏன் விட்டுவைத்தீர்கள்? 100% இட ஒதுக்கீடு இருந்தால் இன்னும் நிறைய ஓட்டு கிடைக்குமே’ என்று எகத்தாளம். இதைத் தொடர்ந்து, தங்களை வாழ்த்தியவாறே இடஒதுக்கீட்டுக்கு எதிரான விஷமம் அல்லது விஷம் ஆறாகப் பெருகியோடியது.

இதைப் படித்த பின், எனக்கு பிச்சை என்ற பெயரின் மீது இருந்த ஆர்வம் மேலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ‘யாருடா, இது’ என்று துழாவினால் உங்கள் அப்பா பெயரிலும்கூட பிச்சை என்றிருந்தது. தயவுசெய்து ஏதாவதொரு தருணத்தில் இந்த பிச்சை என்ற பெயரின் பின்னணியைத் தெரிவிக்க முடியுமா, பாருங்கள்.

நீங்கள் படித்த ஐ.ஐ.டி. கரக்பூரில்கூட சுந்தர் பிச்சை என்று யாரும் இங்கே படிக்கவில்லை என்று கூறிவிட்டார்களாமே, ஆனால், அவர்களுடன் ஒப்பிட சென்னைக்காரர்கள் கெட்டிக்காரர்கள்தான். ஏனென்றால், கூகுள் தலைவராக நீங்கள் அறிவிக்கப்பட்டதுமே நீங்கள் பிளஸ் 1, 2 படித்த வன வாணி பள்ளி நிர்வாகம் பெருமைப்பட்டுக் கொண்டதுடன், தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தை களுக்கு எல்லாம்கூட பெருமிதத்தை ஊட்டிவிட்டார்கள். தொலைக்காட்சிகளில் நன்றாகப் பெருமைப்பட்டார்கள். தவிர, உங்களால்தான் இப்படியொரு பள்ளி இருப்பதுகூட எங்களைப் போன்ற பாமரர்களுக்கும் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும்கூட பாருங்கள், ஏதோ ஒரு வித்யா லயா என்று நீங்கள் படித்த பள்ளி நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவில்லை. உங்களைப் பற்றி எந்தத் தகவலையும் பகிர்ந்துகொள்ள மறுத்ததுடன், தொலைக்காட்சிக்காரர்களை எல்லாம் தீண்டத்தகாதவர்களாக விரட்டிவிட்டார்களாம். வாசலைக்கூட படமெடுக்கவிட மறுக்கிறார்கள் என ஒரே புலம்பல்.

அனேகமாக, இந்தப் பள்ளிகளில் எல்லாம், அடுத்த ஆண்டில் கட்டணங்களை உயர்த்திவிடுவார்கள் என்று நினைக்கிறேன். எப்படா, எப்படிடா, காசு பறிக்கலாம் என நினைக்கிற பள்ளிகளின் நாட்டில், மதுரையில் சேதுபதி மேனிலைப் பள்ளியில் ‘பாரதியார் பணிபுரிந்த பெருமையுடைத்து’ என்று குறித்துவைத்திருப்பதைப் போல, இந்தப் பள்ளிகளிலும் கூகுள் பிச்சை படித்த பள்ளி என்று எழுதி வைப்பார்களோ என்னவோ.
palani1
ஆனால், குறிப்பிட்டே தீர வேண்டிய விஷயம். உங்கள் தந்தையையும் தாயையும் கண்டுபிடிக்க, அவர்களைப் பேட்டி காண மேற்கொண்ட எந்தவொரு முயற்சியும் வெற்றி பெறவில்லை என்பது. யார் யாரோ முயன்று பார்த்தார்கள், சலித்துப் போய்விட்டது. அட, எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், எனக்கென்னவோ இது மிகவும் பிடித்தி ருந்தது. ஏனென்றால், தமிழில் யாரோ ஒருவர் எங்கோ, எதற்கோ வெற்றி பெற்றுவிட்டால், இங்கே தாத்தா, பாட்டியில் தொடங்கி, அம்மா, அப்பா, மாமா, மாமி, சித்தப்பா மகன், பெரியப்பா மகன், பேரன், பேத்தி என எல்லாரும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

மேலும், ப்ளூம்பர்க் இணையதளத்தில் சில தகவல்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இரண்டே அறைகள் இருக்கும் வீட்டில்தான் வளர்ந்தீர்கள், தம்பியும் நீங்களும் ஹாலில்தான் உறங்குவீர்கள் (நம்மூரில் எல்லாருமே இப்படித்தானே உறங்குவார்கள்) தந்தை பொறியாளர், தாய் சுருக்கெழுத்தாளர், சொந்தமாக கார்கூட இருந்ததில்லை, என்பதற்காக அமெரிக்காவில் வியந்திருந்தார்கள். `இரக்கப்பட்டுப் பேச எதுவுமில்லை, இந்தியாவில் இது எவ்வளவோ மேலான நிலை, இன்னமும் சென்னை மா…நகரிலேயே கழிப்பறைகள் இல்லாத வீடுகள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன’ என்று எப்படியாவது அவர்களுக்கு உணர்த்துங்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை உங்கள் நாட்டில், அதுதாங்க, அமெரிக்கா, அங்கே பிழைக்க வந்திருக்கும் நண்பர் பழநி, தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னபடியும் யோசித்துப் பார்க்கத்தான் வேண்டும்போல. அமெரிக்காவில் எத்தனையோ பெரிய பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. சுந்தர் பிச்சை ஒரு நிறுவனத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்று இருக்கிறார். நல்வினை, சுந்தர் பிச்சை தலைமையேற்கும் நிறுவனத்தைப் பற்றி உலகத்துக்கே நன்றாகத் தெரிந்திருக்கிறது, அதிலும் நம்மூர்த் தமிழர்களுக்குக்கூட நன்றாகத் தெரிந்துள்ளது. இதற்காக வெல்லாம் அவருடைய எதிர்வினையை எதிர்பார்க்கக் கூடாது என்று உணர்த்தினார், அதுவும் சரிதானே. நான்கூட கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே முட்டாளாக இருந்துவிட்டேன். ம். இருந்துவிட்டேன், என்ன, இருக்கிறேன்.

ஆமாம், நீங்கள் உங்கள் நிறுவனத்துக்குத்தான் பதிலளிக்க வேண்டியவர். முதல் போட்டவர்கள் எல்லாம் நம்பி உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டி, உங்களைத் தெரிவு செய்தது சரியென்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள், அடுத்துவரக் கூடிய வாய்ப்பில் எப்படியாவது அடுத்த படிநிலைக்கு முன்னேறுங்கள், அதற்காக நான் இப்போதே வாழ்த்திவிடுகிறேன். தமிழர்கள் எல்லாம் அப்போதும் வாழ்த்துவார்கள், அதை விட்டுவிட்டு இப்போது எதையாவது பேசி, எழுதி, உங்கள் பொன்னான, மறுபடியும் தப்புத்தப்பாக வருகிறது, டாலரான நேரத்தை வீணாக்கிவிடாதீர்கள். நேரத்துக்குப் பிடித்த கேடு.

அமெரிக்காவில் கல்லூரியில் படிக்க ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலர்கள் செலவாகும் என்கிறார்களே, மூன்றாண்டுகளுக்கே ஏறத்தாழ 2 லட்சம் டாலர்கள் ஆகிவிடுமே? அங்கேயெல்லாம் அவரவர் கடன் வாங்கிதான் படிக்க வேண்டுமாமே? இந்தியாவில்தான் இலவசமாக அல்லது மலிவாகக் கற்றுத் தருகிறார்கள், எல்லாம் மக்களுடைய பணம் அல்லவா? என்னுடைய நண்பர் பழநி குறிப்பிடும்போது, ஏழு ஆண்டுகள் இந்தியாவில் கல்லூரிகளில் படித்திருக்கிறேன், 4 லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள். என் மனசாட்சி எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்றார். இந்தியாவைப் பற்றி நினைக்கத் தங்களுக்கு எப்போதேனும் நேரம் கிடைக்கிறதா, நினைக் கிறீர்களா?கூகுளுக்குத் தனிப்பட்ட முறையில் நீங்கள் நன்றி கூறுங்கள், ஏனெனில், உங்களைப் போலவே, அமெரிக்காவில் வாழ்கிற அல்லது பிழைக்கிற ஒரு தமிழர், பழநிக்குமணன் என்று பெயர், உலக அளவில் புகழ்பெற்ற இதழியலுக்கான புலிட்சர் விருது பெற்றபோதுகூட இங்கே ஒருபய புள்ளயும் கண்டுகொள்ள வில்லை. இத்தனைக்கும் முதல் தமிழர், மூன்றாவது இந்தியர் என்றுகூட சொன்னார்கள்.

அல்லாமல், இதற்கு முன்னால் எத்தனையோ பேர் தலைமைப் பதவிகளைப் பெற்றார்களே, பெப்ஸியில் இந்திரா நூயி, மைக்ரோசாஃப்டில் சத்ய நாராயண நாதெள்ள, மாஸ்டர் கார்டில் அஜய் பங்கா, .டாய்ஷ் வங்கியில் அன்ஷு ஜெயின், அடோபி நிறுவனத்தில் சாந்தனு நாராயணன், நோக்கியாவில் ராஜீவ் சூரி, சான்டிஸ்க்கில் சஞ்சய் மல்ஹோத்ரா, டிபிஎஸ் பியூஷ் குப்தா… இப்படி எத்தனை பேர்.. எந்த தெலங்கானாக்காரனாவது, எந்த குஜராத்தியாவது, எந்த வட இந்தியாக் காரனாவது எங்களைப் போலக் கொண்டாடினானா? என்ன இருந்தாலும் தமிழர்களைப் போல வருமா?இவர்களுக்கெல்லாம் உங்களுக்கு சொன்னதைப் போல வாழ்த்துச் சொன்னார்களா? யாரும் கண்டுகொள்ளவில்லையே, இப்போதும்கூட தமிழகம்வாழ் தமிழர்கள் எல்லாருக்கும் இவர்களைப் பற்றியெல்லாம் தெரியுமா என்ன?

இன்னொன்றும் கேள்விப்பட்டேன், அங்கே தலைமைப் பீடங்களை அலங்கரிப்போரில் பலரும் முதலில் பொறியியல் பட்டதாரிகள், தொடர்ந்து மேலாண் பட்டமேற்படிப்பாளர்கள் என்றார்கள். தவிர, நம்மூரில், இந்தியாவைத்தான் சொல்கிறேன், பொறியியல் படித்தவர்கள், குறிப்பாக, ஐ.ஐ.டி., போன்ற இங்கேயுள்ள மேல்தட்டுக் கல்விக் கூடங்களில் படித்தவர்கள், அமெரிக்கர்களை விடத் திறமை மிக்கவர்களாமே?

இந்தியாக்காரர்கள் எப்படி இவ்வளவு புத்திசாலிகளாக இருக்கிறார்கள்? எல்லாம் ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக இருந்ததால்தான் என்கிறார்களே? உலகில் எங்கே, எதற்காகச் சென்றாலும் அங்கே போட்டியாக வந்து நிற்கும் சீனர்களைவிட இந்தியர்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும் என்பதால்தான் என்கிறார்களே? தங்களுடைய ஆங்கிலேய ஆண்டைகளிடமிருந்துதான் மேலாண் தொழில்நுட்பங்களையெல்லாம் இந்தியர்கள் கற்றுக்கொண்டார்களாம். இதுபற்றி யாரோ எஸ்.எல். ராவ் என்பவர் எழுதியுள்ள ‘ஃப்ரம் சர்வன்ட்ஸ் டு மாஸ்டர்ஸ்’ புத்தகத்தை எங்கேயாவது வாங்கி முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் பார்த்தால் தமிழர்கள் மிகவும் வெகுளிகள், இந்தியாவில் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, சந்தர்ப்பம் கிடைத்ததும் ஏதோ வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, அவரவர் வாழ்க்கை, அவரவர் குடும்பம், அவரவர் சம்பாத்தியம், அவரவர் முன்னேற்றம் என்று இருப்பவர்களையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தலையில் வைத்துக் கொண்டாடு கிறார்களே?

இங்கிருந்து போய் வெற்றி பெற்றவர்களை, இந்திய வம்சாவளியாக்கும், தமிழ் ரத்தமாக்கும் என்று கொண்டாடுகிறார்களே, கூலிக்குப் பிழைக்கச் சென்று இப்போதும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், ஃபிஜி என இன்னும் எண்ணற்ற நாடுகளில் உழன்றுகொண்டிருப்போரைப் பற்றி மட்டும் இவர்கள் எல்லாம் நினைத்து உருக மறுக்கிறார்களே?நீங்கள் எப்படியோ, என்ன மாதிரியோ, எப்படிப் பழகுவீர்களோ, எனக்கு எதுவும் தெரியாது. எப்போதாவது இந்தியாவுக்கு வந்தால் தமிழகத்துக்கும் வாருங்கள். தமிழர்களுக்கு, தமிழ்க் குழந்தைகளுக்குச் சொல்ல உங்களிடம் ஒரு செய்தி இருக்கிறது. ‘நன்றாகப் படியுங்கள், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது உருவாக்கிக் கொள்ளுங்கள், தடைகள் இருக்கும், ஆனால், முறியடியுங்கள், எல்லாமும் தொட்டுவிடும் உயரம்தான், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள்’ என்று எல்லாருக்கும் சொல்லுங்கள். உங்களுடைய கரப்பான் பூச்சி கதையைப் படித்தேன், இடமோ, நேரமோ இருக்காது என்பதால் தமிழர்களுக்கு இப்போது சொல்லப் போவதில்லை.

எனக்குக்கூட மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அவ்வளவாகப் பிடிக்காது, போகிற போக்கில் கூடங்குளம் அணுமின் நிலையம் நல்லதுதான் என்று சர்டிபிகேட் வழங்கினால் யாருக்குதான் பிடிக்கும்? எப்போது பார்த்தாலும் கனவு காணுங்கள், கனவு காணுங்கள் ஒரே பேச்சுச் சப்தம், அவருடைய காலத்தில் வேண்டுமானால் கனவு கண்டால் சாத்தியமாகியிருக்கலாம், இந்தியா இப்போது இருக்கிற நிலைமையில் சாத்தியமா என்ன? ஆனாலும் அவர் மீது பெரிய கோபமோ, வருத்தமோ வந்ததில்லை, ஏனென்றால் அவர் சொன்னதை எல்லாரும், குழந்தைகளும் இளைய தலைமுறையினரும் நம்பினார்கள், நம்புகிறார்கள், நடக்குமோ, நடக்காதோ, உத்வேகம் பெற்றார்கள், பெறுகிறார்கள்.

அப்துல் கலாமின் மறைவின்போது நாடே அழுதது, துக்கம் கொண்டாடியது. தமிழர்களுக்கேயுரிய குணாதிசயப்படி அதீத உற்சாக – அதீத துக்க மனப்பாங்கு காரணமாகக் கிராமங்களில் எல்லாம்கூட போஸ்டர் போட்டுக் கண்ணீர் விட்டிருந்தார்கள். எவ்வளவோ குடியரசுத் தலைவர்கள் இருந்திருக் கிறார்கள், இறந்திருக்கிறார்கள், எல்லாருக்குமா, இவ்வாறு எல்லை மறந்து அழுதார்கள்? ஏனெனில் மக்களுடன் கலந்துவிட்டிருந்தார் கலாம். நம்பிக்கையளிப்பவராக விளங்கினார்.

எனவே, நீங்களும் வாருங்கள். தமிழ்க் குழந்தைகளை, இளைஞர்களைச் சந்தியுங்கள். ஆனால், இந்தியா வரும்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வெறும் ஐ.ஐ.டி.க்களுக்கு மட்டும் சென்றுவிட்டுப் போய்விடாதீர்கள், கொஞ்சம் அழுக்காக இருந்தாலும், சுத்தபத்தமாக இல்லா விட்டாலும் மாநகராட்சி பள்ளிகளுக்கு, கிராமங்களுக்குச் செல்லுங்கள். ‘அட, நம்மூர்க்காரராமா? டாப்ல இருக்காராமா’ என்று நாங்களும் கொஞ்சம் வியந்து பார்த்துக் கொள்வோம்!

ம். கடிதத்தை எழுதிவிட்டேன், எப்படி அனுப்புவதென்றெல்லாம் தெரியவில்லை. இருக்கட்டும், கடிதங்கள் என்றால் சென்று சேர்ந்துதான் தீர வேண்டுமா, என்ன? எழுதுவதே பெரிய மகிழ்ச்சிதானே, நினைத்ததைச் சொல்லிவிட முடியும், அதுபோதும், நன்றி.

அன்புடன்,
எம். பாண்டியராஜன்.
_