September 21, 2021

அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது…!

இந்தக் கடிதத்தை வாசிக்க உனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் இதனை வாசிக்கும் மனநிலையில் நீ இருக்க மாட்டாய் என்பதும் எனக்குத்தெரியும். ஆனால் உன் பற்றிய இக்கடிதம் உனக்கல்ல மகளே!
தமது இரும்புக் கரம் கொண்டு மனித உயிர்களை நரித்த இந்த அரசாங்கத்திற்கு உன்னைப்போன்ற பாலகர்கள் ஒரு பொருட்டல்ல என்று உனக்கும் எனக்கும் இன்னும் மனித உணர்வுள்ள அனைவருக்கும் தெரியும். மனித நேயமற்ற மகிந்த ,கோத்தாபய அரசாங்கத்திற்கு உன்னையும் உன் அம்மா போன்ற அப்பாவிகளையும் மோசமான சதிவலைக்குள் விழுத்தி காட்டுமிராண்டித்தனமான சட்டங்களின் பிடியில் சிக்க வைத்து அலைக்களித்து அழிப்பது இன்பம் தரும் விளையாட்டு மகளே!

கேட்பாரில்லாக்காலத்தில் நிற்கிறோம் விபூசிகா பெண்ணே!
edit vibooshika 2
அன்று யாழ்ப்பாணத்தில் நீ உன் அம்மாவுடனும், உன் அம்மாவைப் போன்ற நூற்றுக்கணக்கான அம்மாக்கள், அப்பாக்கள் மற்றும் சகோதரர்களுடன் வீதியில் இறங்கிக் காணாமல் போனவர்களுக்காகப் போராடிய போது லண்டனில் இருந்து அழைத்த என் குரலுக்கு ஓடிவந்து உன் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தாயே!

லண்டன் றேடியோவில் இருந்து ஒரு மாமா கதைக்கிறார் கதையுங்கோ என்று உன்னுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சகோதரி உன்னிடம் கைப்பேசியைத் தர நீ குமுறிய குரல் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது மகளே!

மாமா இங்க வாங்கோ எங்களை எல்லாம் பாருங்கோ என உன் இயலாமையின் உச்சத்தில் நீ அழைத்த அழைப்பும் உன் அழுகைச் சத்தமும் என் மனச்சாட்சியை உலுப்புதடி.

புலம்பெயர் தேசத்தில் என்போன்ற மாமாக்கள் இருப்பதனால் அவர்கள் எதையாவது சாதித்து விடுவார்கள், மலையை மத்தாக்கி இலங்கைப் படைகளை மோராக கடைந்து எடுப்பார்கள் உன் அண்ணாவை மீட்டுத்தருவார்கள் என்று நீ நினைத்திருப்பாய். கடந்த 15ஆம் திகதி படையினர் சுற்றி வளைத்த போது கூட எங்களுக்கு ஏதோ நடக்கப் போகிறது வாருங்கள் என்று பதைபதைத்தாய்.

ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடித்துச் சூரியரும் சந்திரரும் தேவர்களும் மீண்டெழுவார்கள் அவர்கள் தனித் தமிழீழத்தை எடுத்து கையில் தருவார்கள் என்று இப்போதும் கதை எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள்.

இப்படிக் கற்பனைக் கதைகள், எத்தனை விபூசிகாக்களையும், எத்தனை ஜெயக்குமாரிகளையும் தழுவிச் சென்றனவோ எனக்கு தெரியாது.

ஆனால் உண்மையில் எதையுமே செய்ய முடியாத கையாலாகாத மாமாக்களாகவே நாம் இங்கு வாழ்கிறோம் காலத்தைக் கழிக்கிறோம். இணையத்தில் எழுதுகிறோம் உன்னைப்போன்றவர்களின் கைதுகளைத், தடுத்து வைப்புக்களைப் பதிவு செய்கிறோம். அவற்றை உலகறியச் செய்கிறோம், குருடர்கள் வாசிக்கிறார்கள்.

வானொலியில் உங்கள் சோகங்களைப் பேசுகிறோம், உங்கள் அவலக் குரல்களைப் பதிவு செய்கிறோம். செவிடர்கள் கேட்கிறார்கள். உங்கள் துயர் சூழ்ந்த வாழ்வு கூட இங்கு சிலருக்கு வியாபாரமாகிப் போனதை உன் கள்ளமில்லா இதயம் அறியாதடி.

விபூசிகாவு நீ உன் அம்மாவுடன் 15ஆம் திகதி கடத்தப்பட்டாய். அருகில் உள்ள முகாமில் உன்னையும் உன் அம்மாவையும் மறைத்து வைத்திருந்தார்கள். ஆனால் உன் வீட்டைச் சுற்றி இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் குவிந்த போழுதே செய்திகள் பரவி ஊடகவியலாளர்களும் அயலவர்களும், விழித்துக் கொண்டதால் உங்களைக் கடத்தியதை மறைத்து, கோத்தபாய கும்பல் இப்போது அதனைச் சட்டபூர்வமான கைதாக மாற்றி இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு நான் கடத்தப்பட்ட சம்பவத்தை நினைத்துப்பார்க்கிறேன். என்னைச் தூக்கிச் சென்ற அதிகாலைப்பொழுதில் ஊடகவியலாளர்களும் என்னை அறிந்த அரசியல்வாதிகளும் இராசதந்திரிகளும் விழித்துக்கொண்டது மட்டுமல்லாது எனது விடுதலைக்காக கோட்டை புகையிரத முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்ததுடன் அதிகாரத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கவும் செய்த்தனர். அதனால் நான் மீண்டேன். இன்னும் பணபலம் உள்ளவர்களும் செல்வாக்குள்ளவர்களும் இப்படியான சூழ்நிலைகளில் இருந்து மீளவே செய்கின்றனர்.

திருகோணமலையில் எங்கோ ஒரு மூலையிற் பிறந்து, வன்னியில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த சிறுமி தானே நீ. ஏழைக் குடும்பத்தில் பிறந்த நீ சிறு பராயத்திலேயே இரண்டு சகோதரர்களைப் பறிகொடுத்துன் தந்தையையும் இழந்து தாயுடன் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தாய். இன்று உன்னோடிருந்த உன்னம்மாவையும் பறித்துப் பூசாவுள் வீசி விட்டார்கள். என்னடி செய்வாய் நீ?

உன்னைச் சுற்றி வளைத்த போது அயலவர்கள் சிலர் கூடினார்கள். ஊடகவியலாளர் சிலர் கூடினார்கள். மறுநாள் சில அரசியல்வாதிகள் வந்தார்கள். வழமைபோல் ஊடகவியலாளர்கள் ஊடகங்களில் உங்கள் நிலையை அறிக்கையிட்டார்கள். அரசியல்வாதிகள் தமது படத்துடன் கூடிய கண்டிப்பு அறிக்கையை வெளியிட்டார்கள். அத்துடன் எல்லாமும் முடிந்து விட்டதெடி.

நீ நம்பிய மாமாக்களோ தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து நின்று பூர்விகாவினதும் அம்மாவினதும் கைதை நாமே முதலில் வெளிக்கொணர்ந்தோம் என வீரப்பிரதாபம் பேசுகிறார்கள்.

உங்கிருக்கும் தானைத் தலைவர்களால் கண்டிக்கிறோம்-
edit viboosika
வன்மையாகக் கண்டிக்கிறோம்- மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற அறிக்கைகளுக்கு அப்பாற் செல்ல முடியாது உள்ளது. உனதும் உன்போன்ற சிறுவர்களதும் உன் அம்மாவினதும் அவர் போன்ற ஆயிரக்கணக்கான அம்மாக்களினதும் போராட்டங்களால் புளகாங்கிதம் அடைந்தவர்களால், அதனை வைத்து அரசியல் நடத்துபவர்களால் உங்களை சுற்றி வளைத்த இடத்தில் ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடத்த முடியவில்லையே விபூசிகா….

மகாகாணசபைத் தேர்தல் காலத்தில் தேசியம், சுயநிர்ணயம், எனக் கோசமிட்டார்களே! மாவீரர்களின் துயிலும் இல்லங்களை மீளகட்டி எழுப்புவோம் என்று சொன்னார்களே! காணாமல் போனவர்கள் சிறையில் இருப்பவர்கள் புனர்வாழ்வுக்கு உட்பட்டவர்கள் எல்லோருக்காகவும் குரல் கொடுப்போம் என்றார்களே! ஆனால் அவர்களே இன்று உன்னைச் சுற்றி வளைத்த இடத்தில் சப்பாணி கட்டி இருந்து சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடத்தினால் தமது வேட்டியிற் சிகப்பு மண் அல்லது அழுக்கு மண் பிடித்துவிடும் என்கிறார்களே என்ன செய்ய?

வடக்கிலும் கிழக்கிலும் உள்ளுராட்சிசபைகள், மாகாண சபைகள், பாராளுமன்றம் ஆகியவற்றில் அங்கத்துவம் வகிப்பவர்களைச் சேர்ந்தாலே 200க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழ் மக்களின் விடிவுக்காய் தாங்கள் தூங்காமல் இருப்பதாக ஊடகங்களில் தவறாமல் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விபூசிகா ஒரு நாள் ஒரே ஒரு நாள் உனக்காகவும் உன்னைப் போன்ற ஏராளமானவர்களுக்காகவும் இந்த வெள்ளை வேட்டிக்காரரும், கோட்சூட் போட்டவர்களும் ஒன்றிணைந்து ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியாது இருக்கிறார்களே!

வெளிநாடுகளில் புலம்பும் அமைப்புக்களைப்பற்றி உனக்கு தெரியாது பிள்ளை. அவர்கள் தங்கள் கட்சியை, தங்கள் கொடிகளை, தங்கள் சின்னங்களையெல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியாக ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியாதபடிக்கு மாற்ற முடியாத குழுநிலை வாதங்களுக்குள் சிக்குண்டு தவிக்கிறார்கள்.

சர்வதேசம் கூட உன்னைக் கண்டு கொள்ளவில்லையே!! பாக்கிஸ்தானின் மலலாவைத் தெரிந்து கொண்ட உலகின் கண்களுக்கு உன்னைத் தெரிந்து கொள்ள முடியாது போய்விட்டது. இதுவும் புதிதில்லை சிரியாவையும் லிபியாவையும் கண்டுகொள்ள முடிகிற உலகத்துக்கு முள்ளிவாய்க்காலைக் கண்டு கொள்ள முடியாமல் போனதை நாங்கள் அறிவோம் நீ அறியாய்.

நீயும் மலலாவைப் போன்ற ஒரு சிறுமி தானே. அவள் எப்படித் தன்னுடைய நாட்டின் சமூகத்தின் அடிப்படைவாதங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க- அடிப்படை உரிமைகளுக்காகப் போராடத் துணிந்தாளோ அப்படித்தானே மகளே நீயும் துணிந்தாய்!

உன் அண்ணாவைத்தேடும் உன் குரல், அதன் பின்னால் உள்ள எத்தனை அண்ணன்மார் அக்காமாரின் காணாமல் போதலைத் தேடுகிறது? உன் சகோதரனைத் தேடி நீ எழுப்பிய குரல் எத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தியது?

ஆனால் உன்னை அமெரிக்காவுக்கும் மேலைத் தேசத்திற்கும், ஐநாவுக்கும் தெரியவில்லையே?

நீ தான் அமெரிக்காவாலும் அதனைச் சார்ந்தவர்களாலும் இலக்கு வைக்கப்படும் இஸ்லாத்திற்கு எதிராக போராடவில்லையே!

நீ பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ அல்லது ஈராக்கிலோ பிறந்திருந்தால் இஸ்லாமுக் கெதிராகப் போராடவேண்டும். நீ சிரியாவில் பிறந்திருந்தால் அசாத்துக்கெதிராகப் போராடவேண்டும். நீ சிம்பாவேயில் பிறந்திருந்தால் முகாபேக்கு எதிராகப்போராடவேண்டும். நீ கியூபாவிலோ வெனிசு வெலாவிலோ சீனாவிலோ ருஸ்சியாவிலோ வடகொரியாவிலோ பிறந்திருந்தால் அந்தந்த அரசுகளுக்கு எதிராகப் போராட வேண்டும் ஆனால் இலங்கையில் பிறந்தால் எதற்கெதிராகவும் போராடக் கூடாதென்றறியாச் சிறுமியாகிப் போனாயே பெண்ணே?

நீ உன் அண்ணாவைத் தேடினால் பயங்கரவாதம்.

நீ உன் அப்பாவைத் தேடினால் பயங்கரவாதம்

நீ உன் அம்மாவை அரவணைத்துக்கொள்வது பயங்கரவாதம்…

நீ உன் மண்ணின் மேலமர்ந்து உனது உரிமைகளுக்காகப் போராடினால் அது பயங்கரவாதம்.

பின் எதடி இங்கே சனநாயகம்?

உன் அண்ணாவையும் உன் அம்மாவையும் ஒன்று சேரக்காண உனக்கு கொடுத்து வைக்க வேண்டுமடி மகளே… மகளே…

நன்றி:globaltamilnews.net/