December 4, 2021

அந்தமானில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகுமாம்!

வரும் 29ம் தேதி வடக்கு அந்தமானில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஏனைய வட தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27, 28 தேதிகளில், தென்தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.