அதிமுக பொதுக்குழு நடத்த தடை இல்லை!- ஐகோர்ட் ஆர்டர்!

திமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று இரவு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என உத்தரவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடையில்லை என்ற சென்னை ஐகோர்ட் ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இரவோடு இரவாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி வீட்டில் விசாரணை நடைபெற்றது.

நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற விசாரணையின் முடிவில்,’ பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். பொதுக்குழுவில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்தி மூன்று வரைவு தீர்மானங்களை தவிர கூடுதல் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாது என்ற மகிழ்வில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமன்றி பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று வைத்தியலிங்கம் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயணன் ஆகியோரும், பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன் , திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர்.

விசாரணையையொட்டி நீதிபதி வீட்டின் முன்பு தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.