September 26, 2021

சசிகலாவை முதல்வரா ஆக்கிட்டாய்ங்க! – அதிமுக எம்.எல். ஏ-க்கள்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்–அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா, போன டிசம்பர் மாதம் 5–ந்தேதி மரணமடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவும், முதல்–அமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கும் பலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலர் ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். அதாவது, கட்சியை தலைமை ஏற்று நடத்துபவரே, முதல்–அமைச்சராகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. சசிகலாவே முதல்–அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பலர் கூறி வந்தனர்.

sasai feb 5

இதனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா, முதல்–அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 27–ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடப்பதாக தகவல் வெளியானது. ஊருக்குச் செல்ல இருந்த எம்.எல்.ஏக்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியது. ஊருக்குச் சென்றவர்களை உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டது. எம்.எல்.ஏக்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, விரைவில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்ட நிலையில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

C35gzL2WQAACDza

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சசிகலா உரையாற்றிய போது, ”அதிமுகவின் கொள்கைகளைக் கட்டிக்காத்து மாநில அரசு செயல்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்தான்” என்றார் சசிகலா.

முதல்வர் சசிகலா – சிறு குறிப்பு

மன்னார்குடியைச் சேர்ந்த விவேகானந்தன்-கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 குழந்தைகளில் 5ஆவதாக பிறந்தவர் சசிகலா. 1956ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பிறந்த சசிகலாவின் வயது 59. 1973ஆம் ஆண்டு, அரசு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த நடராஜனை சசிகலா திருமணம் செய்தார். சென்னையில், வீடியோ விஷன் என்ற சிறு நிறுவனத்தை தொடங்கிய அவர், வீடியோ கேசட்டுகள் விற்பனை மட்டுமன்றி நிகழ்ச்சிகளை படம்பிடிக்கும் பணிகளையும் தனது நிறுவனம் மூலம் மேற்கொண்டார்.

1980களின் தொடக்கத்தில் தனது நிறுவனம் மூலம் படம்பிடிக்கப்பட்ட நிகழ்ச்சியொன்றின் வீடியோ கேசட்டை அப்போதைய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான ஜெயலலிதாவிடம் கொடுக்கச்சென்றதே இருவருக்குமான நட்பின் தொடக்கமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா தனிமைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பக்கபலமாக நின்றார் சசிகலா. 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது அவருடன் போயஸ் கார்டன் இல்லத்திலேயே குடியேறினார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மட்டுமின்றி, தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்த சோதனையான காலக்கட்டங்களிலும் அவருடன்தான் இருந்து வந்தார் சசிகலா. சொத்துக்குவிப்பு புகார் உள்ளிட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு ஜெயலலிதாவுடன் சசிகலாவும் சிறைக்குச் சென்றுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சூறாவளியாய் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது, அவருடன் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சசிகலாவும் பயணித்திருக்கிறார். ஜெயயலலிதா மறைவுக்கு பின் கடந்தாண்டு டிசம்பர் 29ம் தேதி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சிப் பணிகளை கவனித்து வந்த வி.கே.சசிகலா, சட்டமன்ற அதிமுக குழு தலைவராக, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தின் அடுத்த முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.