October 19, 2021

அதற்கு இவர் சரிப்பட மாட்டார்! இழு தள்ளு (2) by கதிர்

ஆமாம், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது என் தந்தை ராஜிவ் காந்தி தலைமை வகித்த காங்கிரஸ் அரசுதான்...‘ஆமாம், இந்த தேர்தலில் பிஜேபிதான் அதிக இடங்களில் ஜெயித்து ஆட்சி அமைக்கப் போகிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார மனதை தயார்படுத்திக் கொண்டுவிட்டது...‘இல்லை, காங்கிரஸ் ஒருவேளை ஜெயித்தாலும்கூட நான் பிரதராக மாட்டேன். எங்கள் கட்சியில் என்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது வருவார்கள்…’—இப்படியெல்லாம் ராகுல் காந்தி பதில் சொல்லி இருந்தால், எதிர்க்கட்சியினரும் பத்திரிகைகளும் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள்.
push-pull-door-signs-2
‘மடையன்’ என்று ஒரு இசையமைப்பாளர் ட்விட்டரில் பதிவு செய்கிறார். அநாகரிகமான அந்த கருத்தை அங்கீகரித்து ரீ-ட்வீட் செய்கிறார், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.‘மடையனுக்கும் கொலைகாரனுக்கும் இடையே இந்தியா சிக்கிக் கொண்டிருக்கிறதே, என்ன செய்வேன்?’ என்று அந்த இசைகெட்டவர் சந்தடிசாக்கில் நரேந்திர மோடிக்கும் குட்டு வைத்ததால், ‘அரசியல் தலைவர்களை இப்படி கீழ்த் தரமாக யாரோ விமர்சிப்பதும், அதை ஒரு முதல் அமைச்சர் வழிமொழிவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது’ என்று பிஜேபி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஊடகங்களின் விமர்சனம் அநாகரிக எல்லையை எட்டவில்லை. ராகுல் காந்தி முதல் முதலாக அளித்துள்ள முழுநீள பேட்டியை டெலிவிஷனில் பார்த்த அவரது கட்சிக்காரர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்று ஒரு ஆங்கில நாளிதழ் முதல் பக்கத்தில் தலைப்பிட்டது. எதிர்க்கட்சிகளுக்கு அவல் கிடைத்துவிட்டது என முன்னணி இந்தி நாளேடு அறிவித்தது.

ராகுல் தீவிர அரசியலுக்கு வந்து எம்.பி.யாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கும் இங்குமாக அவர் சுற்றுப்பயணம் செல்லும்போது மேடைகளில் பேசுவதும், அபூர்வமாக நாடாளுமன்றத்தில் அல்லது செய்தியாளர் கூட்டங்களில் பேசுவதும் மட்டுமே ஊடகங்கள் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கிறது. முக்கியமான பல பிரச்னைகளில் ராகுலின் நிலைப்பாடு என்ன என்பது, அவரை சுற்றியுள்ள இளம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்குக்கூட தெரியுமா என்பது சந்தேகம்.

தன்னை சந்திப்பவர்கள் மனதில் உள்ளதை தெரிந்து கொள்வதில் ராகுல் காட்டும் ஆர்வம் அதீதமானது; ஆனால், தனது மனதில் ஓடும் எண்ணங்களை எவரோடும் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு அக்கறை கிடையாது என ராகுலின் நட்பு வட்டத்தில் உள்ள ஓர் இளைஞர் ஒப்புக் கொண்டார்.

இதுவரை அப்படி இருந்ததெல்லாம் சரி. இப்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர். மே மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்குமானால் பிரதமர் நாற்காலியில் அமரப் போகிறவர் இவர்தான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் அடையாளம் காட்டப்பட்டுள்ள இளைஞர்.

எனவே, இந்த நேரத்தில் அவர் நிச்சயமாக மனம் திறப்பார்; பரந்த இந்த நாடு, இதன் பலதரப்பட்ட மக்கள், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றை தீர்க்க அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள், அவை எதுவும் ஈடேறாத வகையில் தடுக்கும் ஊழல் பெருச்சாளிகள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு, அவை முன்வைக்கும் மாற்றுத் திட்டங்கள், மரத்துப் போன அரசு எந்திரம், எந்தப் பிரிவையும் பின்தங்க விடாமல் நாட்டை முன்னால் இழுத்துச் செல்வதற்கான புதிய வழிமுறைகள் – இதையெல்லாம் பற்றிய தனது சிந்தனைகளை ராகுல் வெளிப்படுத்துவார் என்று நடுநிலையாளர்களும் எதிர்பார்த்தார்கள்.

அத்தனை பேரையும் ராகுல் அடியோடு ஏமாற்றிவிட்டார் என்று சொல்ல முடியாது.

பேட்டியில் டைம்ஸ் நவ் சேனலின் முதன்மை ஆசிரியர் எழுப்பிய சில கேள்விகளுக்கு ராகுல் நேரடி பதில் தரவில்லை. சில கேள்விகளை கண்டுகொள்ளவே இல்லை. சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் சிறுபிள்ளைத் தனமாக தெரிந்தன. சில பதில்கள் சிரிக்க வைத்தன. அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணாவில் உள்துறை அமைச்சர் ஷிண்டேயின் தலையீடு, காங்கிரஸ் தோற்கும் என்று கூறும் கருத்துக் கணிப்புகள், லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கட்சிகளை கொண்டு வருவது போன்ற கேள்விகளுக்கு ராகுல் அளித்த பதில்களை இதற்கு உதாரணம் காட்டலாம்.

ஆனால், ராகுல் காந்தியிடம் போலித்தனம் இல்லை என்பதை அவரது பதில்கள் ஒவ்வொன்றும் உரத்த குரலில் பிரகடனம் செய்தன.

தேர்ந்த அரசியல்வாதியாகவோ, பேட்டி காண்பவரை காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்பது போலவோ சித்தரிக்க அவர் முயற்சி செய்யவில்லை.

சிஸ்டம், சேஞ்ச் என்ற இரண்டு சொற்களை அவர் திரும்பத் திரும்ப பயன்படுத்தியது பலருக்கு ஆயாசத்தை அளித்திருக்கக் கூடும். எனில், ’இந்த நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் ஆதார ஸ்தலமாக விளங்குவது அரசியல், நிர்வாக கட்டமைப்பில் இருந்துவரும் குறைபாடுகள்தான்’ என்ற ஆழமான நம்பிக்கையில் இருந்து அவதரித்த வார்த்தைகள் அவை.

இது ராகுல் என்ற தனி மனிதனின் குரல் அல்ல. கோடிக் கணக்கான இளைஞர்கள் நமது அரசியல் நிர்வாக அமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஏங்குகிறார்கள். அமைப்பு மாறும்போது அதில் இயங்கும் மனிதர்கள் தாமாக மாறுவார்கள், மாறியாக வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘சிறு குற்றம்கூட செய்யாதவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்’ என்பதை உறுதிப்படுத்த திருத்தம் கொண்டுவருவது அமைப்பு மாற்றம். அது நடைமுறைக்கு வரும்போது காணக்கூடியது மனித மாற்றம்.

கீழ் கோர்ட்டில் குற்றவாளி என அறிவிக்கப்படுபவன் மேல்கோர்ட்டில் நிரபராதி என விடுவிக்கப்படுகிறான். ஹைகோர்ட் அப்பீல் மூலம் மீண்டும் குற்றவாளி ஆகிறான். ஆனால் சுப்ரீம் கோர்ட் விடுதலை அளிக்கிறது. சராசரி குடிமகன் திகைக்கிறான்.

வசதி படைத்த குற்றவாளிகள் சிறைவாசத்தை நிரந்தரமாக தவிர்ப்பதற்கு ஏதுவாக சட்டத்தின் பிரிவுகள் முரண்பட்ட குரல்களில் வாதங்களாக வைக்கப்படுவதையும், நீதிதேவதை கண்கட்டு வித்தைக்கு உள்ளாக்கப்படுவதையும் பார்த்து விரக்தியில் புலம்புகிறான்.

குற்றவாளியா நிரபராதியா என்பதை தீர்மானிப்பதில் நீதியமைப்பிலேயே இந்த குழப்பம் நேர்ந்தால், சொந்த கட்டமைப்பு ஏதுமற்ற தேர்தல் ஆணையத்தால் குற்றவாளிகளை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? இப்படியாக குறுக்கு வழியில் குற்றவாளிகள் சட்டமியற்றும் பேரவைக்குள் நுழைந்துவிட்டால் நாட்டில் நல்லது என்ன நடந்துவிடும்?

இப்படியெல்லாம் அன்றாட வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் குடிமகன் குமுறலாம். அது, அதிகாரம் இல்லாத ஏழையின் கையாலாகா தனத்தின் வெளிப்பாடு. அதிகாரத்தில் இருப்பவரும் அதையே எதிரொலித்தால்…?

ஏதோ ஒன்று இடிக்கிறதுதானே?

பாதகமில்லை. அப்பாவை போல பிள்ளை.

ராஜீவ் காந்தி 1985 டிசம்பர் 28ம் தேதி மும்பய் பிரபோன் மைதானத்தில் நடந்த காங்கிரஸ் நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தும்போது வெளியிட்ட அதே கருத்துகளை, மகன் ராகுல் காந்தி இப்போது இன்றைய தகவல் தொடர்பு யுகத்துக்கு உரிய வார்த்தைகளில் வெளியிட்டு இருக்கிறார்.

எழுச்சியும் ஆவேசமும் தார்மிக கோபமும் கொப்பளித்த ராஜீவ் காந்தியின் மும்பய் உரை அன்று நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியது. அரசியல், நிர்வாகம், நீதி, கல்வி, வர்த்தகம், குடும்பம், சமூகம், தனிமனித உறவுகள், ஒழுக்கம், நேர்மை, பத்திரிகைகள், ஊழல்… என்று எந்த தலைப்பையும் விட்டுவைக்காமல் கொந்தளித்தார் ராஜீவ். மொத்த அமைப்பையும் மாற்றாதவரை இந்த நாட்டுக்கு, அப்பாவி மக்களுக்கு விமோசனம் கிட்டப்போவதில்லை என முழங்கினார்.

அப்போது அவர்தான் பிரதமர்.

நேரு – இந்திரா பரம்பரையில் முரண்பாடு முதலில் தோன்றியது ராஜீவ் உருவில். இந்திரா காந்தியின் இயல்பான அரசியல் வாரிசு சஞ்சய் காந்தி. அவரது அகால மரணம், பைலட்டாக இருந்த ராஜீவ் மீது வெளிச்சத்தை வீசியது. ஆனாலும் அவர் தரையில் கால் பதிக்காமல் பறந்து கொண்டிருந்தார். இந்திராவின் மரணம் அவரை அரசியலுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. அவருக்கு அரசியல் பிடிக்கவில்லை. பிடிபடவும் இல்லை என்பதை மும்பய் உரை காட்டிக் கொடுத்தது. இந்திய அரசியல் அமைப்பில் இணைந்து இயங்க முடியாத ஓர் அந்நியனாக அவர் தன்னை உணர்ந்தார்.

யாருக்கும் தராத மகத்தான வெற்றியை தனக்கு வழங்கிய மக்களுக்கு அந்த அமைப்பைக் கொண்டு பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அந்த உரை நெடுகிலும் சிதறிக் கிடந்தது. பிரதமர் பதவியை இழந்து எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருந்த காலகட்டத்தில் ராஜீவ் முகத்தில் தவழ்ந்த நிம்மதியை அருகிலிருந்து பார்த்தவர்கள், அரசியல் அதிகாரத்தை அடியோடு வெறுக்கும் இப்படியும் ஒரு தலைவரா என்று அதிசயித்தார்கள்.

அவருக்கு பிறகு சோனியா காந்தியிடம் அந்த பற்றின்மையை பார்த்தோம். இன்று ராகுலிடம் பார்க்கிறோம்.

தியாகம் என கட்சிக்காரர்கள் பெருமைப்படலாம். பயம் என எதிர்க்கட்சிகள் கேலி செய்யலாம். இரண்டுமே சரியல்ல. காரணமே இல்லாமல் சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்காது. ஒருவகை அலர்ஜி. கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் தடுப்பதற்கு அந்த குடும்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சி சிதறியது நமது காலத்தில்தான் என வரலாறு பதிவு செய்துவிடக் கூடாதே என்ற கவலையில் குடும்பமும் இடம் கொடுக்கிறது.

மற்றபடி, ‘அதிகார தாகம் எங்கள் குடும்பத்தில் எவருக்கும் இல்லை’ என்று பேட்டியில் ராகுல் சொன்னது நிஜம்.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் ராகுல் பிரதமராக மாட்டார் என்பதும்.

(கதிர் In குமுதம் ரிப்போர்ட்டர் 09.02.2014)