September 27, 2021

சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி !

“சேதுத் திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட பகுதியில் பருவநிலை, சுற்றுச்சூழல், இயற்கைச் சீற்ற பாதிப்புகள் போன்ற நுட்பமான ஆய்வுகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயமுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றுவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதால் இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
nov 27 --sethusamudramproject
முன்னதாக சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவராக இருந்தபோது சுப்பிரமணியன் சுவாமி, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்த வழக்கில், “சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை அதன் வடிவம் மாறாமல் (ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் வழியில்) செயல்படுத்த தயார் என்று மத்திய அரசு கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் குறித்து கருத்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்அரசு நிலையில் மாற்றமில்லை: சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலையை எனக்கு முன்பு தலைமைச் செயலராக இருந்த தேவேந்திரநாத் சாரங்கி கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதியும், அவரைத் தொடர்ந்து தலைமைச் செயலர் பொறுப்புக்கு வந்த நானும் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதியும் தெளிவுபடுத்தியிருந்தோம். அதில் இடம்பெற்றிருந்த அதே நிலைப்பாட்டை தற்போதும் தமிழக அரசு வலியுறுத்துகிறது. சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் உள்ள ஆதம்ஸ் பாலத்தை (ராமர் பாலம்) தேசிய நினைவுச் சின்னமாக்க வேண்டும்; ஆர்.கே. பச்சௌரி குழு அளித்த அறிக்கையில் சேதுத் திட்டம் சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளதால் அதை ஏற்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் “1967-ஆம் ஆண்டு அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றதும் விடுத்த வேண்டுகோள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். அந்தக் கனவை நனவாக்க திமுக பாடுபடும்போது, அதிமுக அரசு அதை நிறைவேற்றக் கூடாது என்று தடை கோருகிறது.உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒருமுறை அதிமுக தடை கோரியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக தடை கோரியுள்ளது. அண்ணாவின் எண்ணங்களையும், தமிழக மக்களின் தேவைகளையும் அதிமுக ஆட்சி எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படுகிறது என்பதற்கு இது தக்க அடையாளம் என்ரு வருத்தத்துடன் தெரிவித்தார் கருணாநிதி.