October 19, 2021

அடுத்த முதல்வர் யார்?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு,அவர் முதல்வர் பதவியை இழந்து விட்ட நிலையில் அடுத்த முதலமைச்சராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும், அது குறித்த விவாதமும் தீவிரமடைந்துள்ளன.
cm sep 27
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதா, அவரது எம்.எல்.ஏ. பதவி தானாகவே தகுதி இழப்பாகி முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்து விடுகிறார். இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர்.இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவர்னர் ரோசையா, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னதாக கடந்த முறை ஜெயலலிதா, இதேப்போன்று நீதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவி இழந்தபோது அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக அப்போது நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு மிகக் குறைவுதான் என்று கூறப்படுகிறது. வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன. மேலும் விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயரும் அடிபடுகிறது. அத்துடன் முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் தவிர முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றிரவு தெரிய வருமாம்.

இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இவர்கள் இன்று காலை சென்னை திரும்ப உள்ளனர். அதிமுக உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கூடி புதிய முதல்வர் பெயரை இறுதி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவர் முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார். அதன் பிறகு இது குறித்த தகவல் கவர்னர் ரோசையாவுக்கு தெரிவிக்கப்படும். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் யார், யார் என்ற பட்டியல் அறிவிக்கப்படும். அமைச்சரவை பட்டியலில் ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு அதே இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.