September 24, 2021

“அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!!

“நான் இன்றைய தினம் உங்களிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ அத்தனையும் சொல்லி முடித்துவிட்டேன். இனி, எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. எதிர்காலம் என்றால் தமிழ் நாட்டின் எதிர்காலம், பாரத தேசத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் நிச்சயம் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன், அடுத்த ஆண்டு 2014-ல் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் போது, மத்தியிலே ஆட்சி நிர்வாகம் நடத்துகின்ற கட்சியாக நாம் இங்கே சந்திக்க வேண்டும். அதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் ” என்று பொதுக் குழுவில் ஜெயலலிதா தெரிவித்தார்.
jayalalitha pothu kuzhu Solo 2 - 20
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சென்னை அருகே வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழா நடந்த மண்டபத்துக்கு முதல்வர் ஜெயலலிதா 2.55 மணிக்கு வந்தார். 3 மணிக்கு செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் செயற்குழுக் கூட்டம் முடிந்தது.

பின்னர் அடுத்த அரங்கத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பேசும் போது,” .”இன்று நடைபெறுகின்ற இந்தப் பொதுக்குழுவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய தினம் 16 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். ஒரு தீர்மானத்தில் எனக்கு நீங்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் அதற்காக எனது இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என் மீது பொழிகின்ற அன்பைப் பார்த்து என்ன சொல்லுவதென்றே எனக்குத் தெரியவில்லை. இன்று தமிழ் நாட்டையும், பாரத தேசத்தையும் எதிர் நோக்கி உள்ள, ஏறக்குறைய அனைத்து முக்கிய பிரச்சினைகளும் நாம் நிறைவேற்றியுள்ள எஞ்சிய தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனக்கு முன்னால் பேசியவர்கள் பலரும் இன்று நாட்டின் நிலைமை, அரசியல் சூழ்நிலை குறித்து என்னென்ன கருத்துகளை தெரிவிக்க முடியுமோ அத்தனையும் தெரிவித்துவிட்டார்கள். கழகப் பொருளாளர் அவர்கள், கழகத்தின் வரவு செலவுக் கணக்கை வாசித்தார்கள். அதைக் கேட்ட போது எனக்கு ஏற்பட்ட பூரிப்பிற்கு ஒரு அளவே இல்லை.

கழக நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதிக் கணக்கில், நிலை வைப்பில்142 கோடியே 76 லட்சத்து 76 ஆயிரத்து 530 ரூபாய் உள்ளது என்று கழகப் பொருளாளர் அவர்கள் இங்கே தெரிவித்தார். நிலை வைப்பில் உள்ள தொகை மட்டும் 142 கோடிக்கு மேற்பட்ட தொகை. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான் ஆரம்பத்தில் கழக கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது, தினந்தோறும் தலைமைக் கழகம் சென்ற போது, கழகப் பணிகளை மேற்பார்வையிட்ட போது, அன்றைய காலக்கட்டத்தில் கழக வங்கி நிதிக் கணக்கில் இருந்தது ஒன்றரை லட்சம் ரூபாய். ஒன்றரை லட்சம் பொய் இருந்த காலத்தில் இருந்து இன்று இந்த அளவுக்கு முன்னேறி இன்று வைப்பு நிதியில் மட்டும் 142 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகை இருக்கிறது என்று சொன்னால், நம்முடைய கழகம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் பொருள். அதைப் போலவே, அண்ணா தொழிற்சங்கப் பேரவைக் கணக்கில், இன்று நிலை வைப்பில், 6 கோடியே 15 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதுவும் மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. எனக்குத் தெரிந்த காலந்தொட்டு, நான் கழகத்தில் இணைந்த நாள் முதல், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் அந்தக் கணக்கில் இவ்வளவு பணம் இருந்தே இல்லை. ஆனால், இன்று 6 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி நிலை வைப்பில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்து வருகின்றோம். ஆகவே, கழகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இனி தொடர்ந்து வளர்ச்சி தான் அடையுமே தவிர, வீழ்ச்சி என்பதே கிடையாது. வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான்.

இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கழக உடன்பிறப்புகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டி 285 பேர் மனு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பு கலந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல், கழக உடன்பிறப்புகள் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டி மிகுந்த ஆர்வத்தோடு 489 பேர் மனு செய்துள்ளனர். ஆக மொத்தம் 3 மணி நேரத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, 3 மணி நேரத்தில், 774 விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் 1 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த விருப்ப மனுக்களை பெறுகின்ற, வழங்குகின்ற திட்டம், நடைமுறை இன்று தான் துவங்கி உள்ளது. இன்னும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்றுகூட முழுமையாக இந்த மனுக்கள் வழங்கப்படவில்லை. ஏனென்றால் இந்த நிகழ்ச்சி தலைமைக் கழகத்தில் துவங்குகின்ற அன்றே கழகப் பொதுக்குழுவும் நடைபெறுவதால், தலைமைக் கழக ஊழியர்கள் இங்கே வரவேண்டும் என்பதால், காலை 10 மணி முதல் 1 மணி வரையில் தான் 3 மணி நேரம் தான் இந்த மனுக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதற்கே இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது என்று சொல்லும் போது, உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

இன்று எனக்கு முன்னால் உரையாற்றிய அனைவருமே இந்தப் பொதுக்குழுவை வரலாற்றுச் சிறப்பு மிக்க பொதுக்குழு என்று குறிப்பிட்டார்கள். அவ்வப்போது கழகத்தில் நடைபெறுகின்ற இத்தகைய நிகழ்ச்சிகளை வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால், உண்மையாகவே இன்று நடைபெறுகின்ற இந்தப் பொதுக்குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க பொதுக்குழுக் கூட்டம் தான். விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சழ்நிலையில், பொதுக்குழு கூடி இருக்கிறது. இந்தத் தேர்தல் மத்தியிலே ஆட்சி மாற்றத்தை உருவாக்கக் கூடிய தேர்தல். இல்லை, இல்லை. ஆட்சி மாற்றத்தை உருவாக்கக் கூடிய தேர்தல் என்று சொல்லக் கூடாது; ஆட்சி மாற்றத்தை உருவாக்கப் போகிற தேர்தல். அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்தத் தேர்தலை நாம் சந்திக்க வேண்டும்.

2011-ல் என்ன சூழ்நிலை நிலவியது, மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, என்ன சழ்நிலை இருந்தது என்பதை திரும்பிப் பார்க்கிறேன். திருப்பி செலுத்தும் திறனுக்கு மேல் கடன்; திவாலாகும் சூழ்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம்; மூழ்கும் சூழ்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள்; தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு; காங்கிரஸ் ஆட்சி அல்லாத மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசு ஆகிய பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே 2011-ஆம் ஆண்டு நாம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், தமிழகத்தின் நிதி நிலைமையை சமாளிக்கவும்; மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளவும்; மின் நிலைமையை சீர் செய்யவும்; தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு, தீர்வு காணவும், சிறப்பு நிதியினை ஒதுக்குமாறும்; குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவை உயர்த்திடக் கோரியும் பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து நான் கோரிக்கை மனுவினை அளித்தேன். இது தவிர, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்படுவதையும், சிறையில் அடைக்கப்படுவதையும், அவர்களது மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் பறிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த கடுமையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாரதப் பிரதமருக்கு பல கடிதங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான் எழுதியுள்ளேன். ஆனால், தமிழக அரசிடமிருந்து எந்தக் கடிதம் வந்தாலும் அதன் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவுடன் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், நமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மாநில அரசின் நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி உள்ளோம். அந்த மக்கள் நலத் திட்டங்கள் பல இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. தீர்மானங்களில் இடம்பெறாத இன்னும் ஏராளமான மக்கள் நல சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதென்றால் நேரம் போதாது.

இன்றைய தினம் நாம் இருக்கின்ற சூழ்நிலை என்ன? தமிழ் நாட்டில் நிலைமை என்ன? இந்திய நாட்டின் நிலைமை என்ன? நாடு நலம்பெற வேண்டும் என்றால், தமிழ் நாடு நலம்பெற வேண்டும் என்றால், பாரத தேசம் நலம்பெற வேண்டும் என்றால், மத்தியிலே ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும். அது தான் இன்றியமையாத தேவை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசை பழிதீர்த்துக் கொண்டே இருக்கிறது. 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திய ஒரே காரணத்திற்காக தமிழக மக்களை மத்திய அரசு தொடர்ந்து பழிதீர்த்துக் கொண்டே இருக்கிறது. இந்த மாற்றந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு மேற்கொண்டுள்ள பழிதீர்க்கும் நடவடிக்கைகள் எத்தகையவை, யாவை, அவற்றிற்கு ஒரு அளவே இல்லை. புதிதாக நாம் நிர்மாணிக்க நினைக்கும், திட்டமிட்டிருக்கும் புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய அனுமதியை வழங்காமல் மறுப்பதில் இருந்து, மாதா மாதம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைக்கின்ற அளவு வரை எல்லாவற்றிலுமே தமிழ் நாட்டை வஞ்சிக்கும் செயல்களில் மத்திய அரசு <டுபட்டுள்ளது. எந்நெந்த வழிகளில் தமிழகத்தை வஞ்சிக்க முடியுமோ, எந்தெந்த வகையில் தமிழக மக்களை பழிதீர்த்துக் கொள்ள முடியுமோ அத்தனையும் மத்திய அரசு இந்த கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் செய்திருக்கிறது. இன்னும் செய்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக, ஒரு மின் திட்டத்தை நிறைவேற்ற வனப் பகுதி மூலமாக ஒரு எலக்ட்ரிசிட்டி கேபிளை எடுத்துச் செல்வதற்காக மத்திய வனத் துறையின் அனுமதி தேவைப்பட்டது. இதை வேண்டுமென்றே மத்திய அரசு ஒன்றரை ஆண்டு காலம் தாமதப்படுத்தியது, கொடுக்க மறுத்தது. கடைசியில் வேறு வழியின்றி தமிழக அரசு, எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி அந்த அனுமதியைப் பெற வேண்டிய ஒரு துர்பாக்கிய சழ்நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஒரு மாநில அரசு பொதுநலனுக்காக, மக்களுக்காக ஒரு மின்சார உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றுகிறது என்று சொன்னால் அதற்கு மத்திய அரசு இத்தகைய அனுமதியை வழங்க வேண்டும் என்று சொன்னால், இதெல்லாம் சாதாரண நடைமுறையாக ரொட்டீனாக நடைபெற வேண்டிய பணிகள். ஆனால், இத்தகைய அனுமதிக்குக் கூட, இத்தகைய பணிகளுக்குக் கூட நாம் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய துர்பாக்கிய சழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். இதற்குப் பேரா ஜனநாயகம்? அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய சழ்நிலை இந்திய நாட்டிலேயே வேறு எங்கும் பார்க்க முடியாது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இல்லை. இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தமிழ் நாட்டின் மீது மட்டும் தான் ஏவிவிட்டிருக்கிறது. காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தினோம் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதற்குக் கூட நாம் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டி இருந்தது. பொதுவாக, ஒரு நதிநீர் தாவாவை தீர்ப்பதற்காக ஒரு நடுவர் மன்றம் அமைக்கப்படுகிறது என்று சொன்னால், நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ள ஒரு சட்டத்தின்படி தான் இந்த நடுவர் மன்றம் அமைக்கப்படுகிறது. இந்த நடுவர் மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கினால் அதை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டியது மத்திய அரசின் கடமை. இதை செய்யலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. ஆனாலும், இந்த காவேரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு வேண்டுமென்றே பல ஆண்டு காலம் மத்திய அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு தாமதப்படுத்தியது. அதனால் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தான் அதனை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தோம். ஆனால், அதோடு இருந்துவிடவில்லை. மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதி ஆணைக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால், செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்றால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அந்த இறுதித் தீர்ப்பில் உள்ளபடி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு தான் அமைக்க வேண்டும். அமைத்த பிறகு, அந்த மேற்பார்வை ஒழுங்குமுறைப்படுத்தும் குழு என்ற குழுவை அமைக்க வேண்டும். இதற்காகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பதால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் நாடு பல சமூக பாதுகாப்புத் திட்டங்களில், மக்கள் நலத் திட்டங்களில் நாட்டுக்கே முன்னோடியோகத் திகழ்கிறது. நம்முடைய பொது விநியோகத் துறையைக் கண்டு, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் எல்லாம் பாராட்டுகின்றன. அண்டை நாடுகள் கூட, வெளிநாடுகள் கூட பாராட்டுகின்றன. பொது விநியோக முறையின் கீழ் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்குகின்ற திட்டம் தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது; உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இப்படிப்பட்ட ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி தமிழக அரசு நற்பெயர் எடுத்துவிட்டதே என்பதைப் பொறுக்க முடியாமல், இந்தத் திட்டத்தை சீர்குலைக்க என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் இன்றைய மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. 2011-ஆம் ஆண்டில் நாம் ஆட்சிக்கு வந்த போது எத்தகைய கடுமையான மின்பற்றாக்குறை சழ்நிலை இருந்தது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இந்த நிலைமையை சீர்செய்யவே முடியாது என்று அனைவரும் கூறினார்கள். இதைப் பற்றிய விவரங்களை ஏற்கெனவே பலமுறை எடுத்துரைத்து இருக்கிறேன். அத்தகைய நிலைமையில், திவாலாகும் நிலைமையில் தமிழ் நாடு மின்சார வாரியம் இருந்தது. இதை எந்தக் காலத்திலும் தமிழக அரசால் சரிசெய்ய முடியாது. 40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன். இதையும் தீர்க்க முடியாது, கட்ட முடியாது என்ற சூழ்நிலை இருந்தது. 2011-ல் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது எவ்வளவு மோசமான நிலைமை இருந்தது என்றால், ரிசர்வ் வங்கி தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு நாட்டில் உள்ள எந்த வங்கியும் கடன் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுவிட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு, தமிழக மக்களின் நலன் கருதி, அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, பகீரத முயற்சி செய்து, வெற்றிகரமாக நிலைமையை சமாளித்தோம். 4,000 மெகாவாட் மின்பற்றாக்குறை இருந்ததை சீர்செய்து, 40 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்ததையும் நாம் சீர்செய்து, அந்தக் கடனை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, அதற்கு தேவையான நிதிகளை வழங்கி, வெற்றிகரமாக நிலைமையை சமாளித்து இந்த ஆண்டு 2013 ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மின்வெட்டே இல்லை என்ற சுபிட்சமான நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கினோம். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இது பெரிய அதிசயம் என்றார்கள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநில அரசும் இத்தகைய ஒரு சாதனையை செய்ததில்லை. செய்திருக்கவும் முடியாது. இதை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் பெருமையாக நான் குறிப்பிட்டேன். வேறு யாரும் செய்திராத ஒரு சாதனையை எனது தலைமையிலான அரசு செய்திருக்கிறது. மின்பற்றாக்குறை நிலைமையை சீர்செய்துவிட்டோம் என்று சொன்னேன். சொன்னது தான் தாமதம், சொல்லி வைத்தாற்போல் சில நாட்களுக்குள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டன. ஒரே சமயத்தில் பழுதடைந்துவிட்டன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மின் நிலையங்கள் எல்லாம் அன்றும் சரி, இன்றும் சரி, சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், நிலைமை சீராகிவிட்டது, மின்வெட்டு இல்லை என்று நான் சொன்ன உடனேயே மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டன. இதனால், மீண்டும் கிட்டத்தட்ட 2500 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. வேறு வழியின்றி மீண்டும் மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. மின்வெட்டு என்று அறிவிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அந்த நிலைமையையும் வெற்றிகரமாக, துணிச்சலாக எதிர்கொண்டு இன்று மீண்டும் 1,700 மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தியைப் பெருக்கி இன்றைய தினம் பெருமளவிற்கு நிலைமை சீர்செய்யப்பட்டு மிகவும் குறைந்த அளவே மின்வெட்டு நிலவுகிறது. சென்னையில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம். மற்ற மாவட்டங்களில் 2 மணி நேரம் என்ற அளவில் தான் இருக்கிறது. இந்த மத்திய அரசின் சழ்ச்சிகளுக்கு நாம் பயந்துவிடமாட்டோம்; தளர்ந்துவிட மாட்டோம். இன்னும் 6 மாத காலத்திற்குள் மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை உருவாக்கியே தீருவோம். மத்திய அரசின் உதவியே இல்லை என்றாலும் செய்தே காட்டுவோம். ஆனால், நான் இப்பொழுது சொன்ன உதாரணங்கள் எதைக் காட்டுகின்றன. இப்பொழுது நான் இங்கே குறிப்பிட்டது ஒரு சில உதாரணங்கள் தான். எந்தெந்த துறைகளில் எல்லாம், எந்தெந்த வழிகளில் எல்லாம், எந்தெந்த திட்டங்களில் எல்லாம் மத்திய அரசு, எனது தலைமையிலான மாநில அரசை பழிவாங்கி இருக்கிறது என்பதை விவரிக்க ஆரம்பித்தால் ஒரு நாள் முழுவதும் பேசினால் கூட போதாது. இதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? இதில் இருந்து நமக்குத் தெரிவது என்ன? தமிழ் நாடு பிழைக்க வேண்டும் என்றால், தமிழ் நாடு வளம்பெற வேண்டும் என்றால், தமிழ் நாடு முன்னேற வேண்டும் என்றால், நம்முடைய நியாயமான சட்டப்பூர்வமான உரிமைகளை நாம் பெற வேண்டும் என்றால், மத்தியில் இருக்கின்ற இந்த அரசு, இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். தமிழ் நாட்டைப் பார்த்து நேசக்கரம் நீட்டுகின்ற ஒரு மத்திய அரசு, தமிழ் நாடு என்னும் மாநிலம் அடிமை இல்லை, நாட்டின் வளர்ச்சியில் சம பங்கு உள்ள ஒரு நண்பர் என்று உணரும் ஒரு மத்திய அரசு எல்லா வகையிலும் தமிழ் நாட்டிற்கு ஆதரவு தருகின்ற, தேவையான உதவிகளை செய்கின்ற ஒரு மத்திய அரசு அமைய வேண்டும். தற்போதுள்ள மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு மட்டும் கேடு விளைவிக்கவில்லை. இந்திய நாட்டிற்கே, பாரத தேசத்திற்கே கேடு விளைவித்திருக்கிறது. தற்போதுள்ள மத்திய அரசு மக்கள் விரோத அரசு. குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர வகுப்பு மக்களுக்கு எதிரான அரசு. ஊழல், வரலாறு காணாத ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு, கருப்புப் பண பதுக்கள், பொயின் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார சீர்குலைவு, குடும்ப அரசியல், கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் ஆதிக்கம், அவர்களின் பிடியில் மத்திய ஆட்சி, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், அண்டை நாடுகளின் மிரட்டல், மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இவைகள் தான் தற்போதைய மத்திய அரசு இந்திய மக்களுக்கு வழங்கி உள்ள பரிசுகள். இந்த அபாயங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவோ, கையாளவோ தற்போதுள்ள மத்திய அரசுக்கு திறமையும் இல்லை, திராணியும் இல்லை. சீனா போன்ற பெரிய நாடுகள் மட்டுமல்ல, ஸ்ரீலங்கா, மியன்மார், போன்ற சிறு நாடுகள் கூட, சிறிய நாடுகள் கூட இன்று இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த மிரட்டல்களை சமாளிக்க முடியாமல் பலவீனமான மத்திய அரசு கையைப் பிசைந்து நிற்கிறது. நாட்டிற்குத் தலைமையேற்க ஒரு வலிமையான ஆட்சி மத்தியில் அமைந்தால், மிரட்டுகின்ற அண்டை நாடுகள் அடங்கும். அதற்கு வலிமையான தலைமை தேவை. எனவே, இந்தியப் பொருளாதாரத்தை சீர்படுத்தி, நாட்டு மக்களை இன்னல்களில் இருந்து காக்க வேண்டிய பெரும் பொறுப்பு அடுத்து அமையவிருக்கும் மத்திய அரசுக்கே இருக்கிறது. மத்தியில் வழிநடத்த ஆளின்றி நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் முழுமையான வெற்றியைப் பெற்றால் மட்டுமே பாரத தேசத்தின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்திட இயலும். எனவே, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு. இதே கருத்தை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தையும் இந்தப் பொதுக்குழு இன்று நிறைவேற்றி உள்ளது. இருப்பினும், கூட்டணி பற்றியும், தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளை எடுக்கவும் எனக்கு முழு அதிகாரத்தை வழங்கி இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் வைத்துள்ள முழு நம்பிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் கழகத்திற்கு எது நல்லதோ அதைத் தான் செய்வேன். அதற்கேற்ற முடிவையே நான் எடுப்பேன். ஆனால் இப்போது நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது இது தான். இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் தங்களின் முழு அர்ப்பணிப்போடு கூடிய கடும் உழைப்பின் மூலம் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகள் ஏராளம், ஏராளம். நமது சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் செல்வதோடு, எதிர்க்கட்சியினரின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் உங்களுடைய களப் பணி அமைய வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் அபார வெற்றி என்ற நம்பிக்கையுடன் நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும். jayalalitha pothu kuzhu 20
தெருவோரம் இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டே சென்றனர். ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்து ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மற்றொரு நண்பர் நடக்கவே முடியவில்லை. உடம்பில் ஏதோ கோளாறு இருக்கிறது. டாக்டரிடம் சென்று காண்பிக்க வேண்டும் என்று கூறினார்.

இதைக் கேட்ட நண்பர் “டாக்டரிடம் செல்வதற்கு முன்பு நாம் கடற்கரைக்கு செல்வோம். அங்கே ஒருவர் சுறுசுறுப்பு டானிக் விற்பனை செய்கிறார். அதை தினமும் காலையில் சாப்பிட்டால் சுறுசுறுப்பு தானாக வந்துவிடும். நானும் சாப்பிட்டு இருக்கிறேன். நிறைய பேர் வாங்கி சாப்பிடுகிறார்கள்” என்று கூறினார். உடனே இருவரும் கடற்கரையை நோக்கிச் சென்றார்கள். அங்கே அந்த சுறுசுறுப்பு டானிக் அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. இருவரும் அங்கு சென்று ஒரு பாட்டில் மருந்தை வாங்கிக் கொண்டு சென்றனர்.

அதன் பிறகு, சோர்வாக இருந்த நண்பர் அந்த சுறுசுறுப்பு டானிக்கை சாப்பிட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம் என்றால், ஓரிரு நாட்களிலேயே சோர்வாக இருந்த உடம்பில் சுறுசுறுப்பு தெரிய ஆரம்பித்தது. உற்சாகமாக நடக்க ஆரம்பித்தார் அவர். நண்பரை தேடிப் போய் நன்றி தெரிவித்தார். சிறிது காலம் கழிந்தவுடன் கைவசம் இருந்த மருந்து தீர்ந்து போனது. மீண்டும் கடற்கரைக்கு சென்றார். ஆனால், அங்கே சுறுசுறுப்பு டானிக் விற்பனை செய்பவரைக் காணவில்லை. வேறு ஊருக்கு போயிருப்பாரோ என்று நினைத்து விட்டுவிட்டார். சிறிது காலம் கழித்து இரு நண்பர்களும் கடற்கரைக்கு சென்ற போது சுறுசுறுப்பு டானிக் விற்றவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இரு நண்பர்களும் அந்த பலூன் வியாபாரியிடம் சென்று என்ன ஆச்சு உங்களுக்கு? சுறுசுறுப்பு டானிக் இன்னும் கொஞ்சம் வேண்டுமே. எங்கேயெல்லாம் உங்களைத் தேடுவது? இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு அந்த பலூன் வியாபாரி, நான் அந்த டானிக் வியாபாரத்தை விட்டுவிட்டு வெளிக்ஷ்ருக்கு சென்று விட்டேன் என்று கூறினார். ஏன்? என்ன ஆயிற்று? என்று இரு நண்பர்களும் கேட்டனர்.

அதற்கு அந்த பலூன் வியாபாரி, நான் உங்களிடம் விற்பனை செய்தது உண்மையிலேயே சுறுசுறுப்பு டானிக் இல்லை. உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், இவற்றையெல்லாம் பொடி செய்து தண்ணீரில் கலந்து கொடுத்தேன். அவ்வளவு தான். இது உண்மையான டானிக் இல்லை என்பதால் அந்த வியாபாரத்தை விட்டுவிட நான் முடிவு செய்தேன் என்று கூறினார். அப்படிச் சொல்லாதீர்கள். அந்த சுறுசுறுப்பு டானிக்கை அருந்தியதும் எங்கள் உடம்பில் சுறுசுறுப்பு ஏற்பட்டது உண்மை தான் என்று கூறினார்கள் அந்த இரு நண்பர்கள். அதற்கு அந்த பலூன் வியாபாரி, இருக்கலாம். அதற்குக் காரணம் மருந்து இல்லை. உங்களுடைய நம்பிக்கை. இதைச் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வந்துவிட்டதாக நீங்கள் நினைத்தீர்கள். உங்கள் நம்பிக்கை தான் உங்களின் உந்து சக்தி என்று கூறிவிட்டு பலூன் விற்கச் சென்றுவிட்டார்.

நம்பிக்கையே வெற்றிக்கு அடிப்படை. நாம் எதை அடைய வேண்டும் என நினைக்கிறோமோ அதனை அடையும் வல்லமை நமக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை நிச்சயம் வேண்டும். நம்முடைய குறிக்கோளை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் எல்லாம் பணியாற்றி வெற்றிக் கனியை பறிக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் விரும்பும் அரசு மத்தியில் அமையும். அதன் மூலம் தமிழகத்திற்கு வேண்டியவற்றை நாம் பெற முடியும்; தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக ஆக்க முடியும்.

உங்களால் முடியும் என்று நான் நம்புகிறேன். செய்து முடிக்க வேண்டும் என்று உறுதிபூண்டுவிட்டால் உங்களால் எதையும் சாதிக்க முடியும். அந்த நம்பிக்கை எனக்கு நூற்றுக்கு நூறு உள்ளது.

ஏற்காடு இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்பது அனைவருக்கும் முன்பே தெரிந்த விஷயம். அந்த இடைத் தேர்தலை சாதாரணமாக எண்ணி ஓரளவிற்கு பணியாற்றி இருந்தாலும் கூட, எப்படியும் 20 ஆயிரம் அல்லது 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் முதல் கடைசி கழக உடன்பிறப்புகள் வரை அனைவரும் முழு மூச்சுடன், முழு மூச்சாக, முழு மனதுடன் களத்தில் இறங்கி பணியாற்றியதால், அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றோம். அதே விதமான அர்ப்பணிப்புடன் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலிலும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கழத்தின் சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடக் கூடிய தகுதி படைத்தவர்கள் இந்த கழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். தகுதி வாய்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், ஒரு தொகுதிக்கு ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆகவே, ஆட்சி மன்றக் குழு யாரை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்தாலும் நல்ல மனதோடு அதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக நீங்கள் அனைவரும் முழு மனதுடன் பாடுபட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2014-ல் இந்தப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் போது, மீண்டும் இந்தப் பொதுக்குழுவில் உங்களை எல்லாம் சந்திக்கும் போது, இந்திய நாட்டையே வழிநடத்தும் சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலே வீற்றிருக்கின்ற நிலைமையிலே தான் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற வேண்டும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் ரயில் வண்டி 6 முறை தனது வெற்றிப் பயணத்தை முடித்து, புனித ஜார்ஜ் கோட்டை என்னும் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. 3 முறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய தலைமையிலும், 3 முறை எனது தலைமையிலும் நடந்துள்ளது. விரைவில் 2014-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் இந்தக் கழகம் என்னும் ரயில் வண்டி தனது வெற்றிப் பயணத்தை நடத்தி டெல்லி செங்கோட்டை என்னும் இலக்கை வெற்றிகரமாக அடையப் போகிறது. இது நடந்தே தீரும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பச்சைக் கொடி காட்ட தமிழக, புதுச்சேரி மக்கள் இருக்கிறார்கள். ரயில் வண்டியை ஓட்டிச் செல்ல நான் இருக்கிறேன். ரயில் வண்டியையும், அதில் பயணம் செய்யும் கழக வேட்பாளர்கள் என்னும் பயணிகளையும் பத்திரமாகவும், வெற்றிகரமாகவும் டெல்லி செங்கோட்டையில் கொண்டுபோய் சேர்க்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் இருக்கிறீர்கள். வேறு என்ன வேண்டும்?

சரி, மத்தியிலே நாம் ஆட்சி செய்ய வேண்டும். மத்தியிலே ஆட்சி நிர்வாகத்தை நாம் நடத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படி மக்கள் நமக்கு வாக்களித்தால் மக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அதையும் சொல்ல வேண்டும் அல்லவா? நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நம்முடைய வாக்குறுதி, அமைதி, வளம், வளர்ச்சி. நம்முடைய தேர்தல் அறிக்கையில் இதைத் தான் சொல்லப் போகிறோம். இது தான் நமது தேர்தல் அறிக்கையில் அடிப்படையாக இருக்கப் போகிறது. அமைதி இருந்தால் தான் நாடு வளம்பெற முடியும். நாடு வளம்பெற்றால் தான் வளர்ச்சியடைய முடியும். இதைத் தான் மக்களுக்கு அமைதி, வளம், வளர்ச்சி; ஏற்படுத்திக் கொடுப்போம் என்று நாம் வாக்குறுதி அளிக்கப் போகிறோம்.

நான் இன்றைய தினம் உங்களிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ அத்தனையும் சொல்லி முடித்துவிட்டேன். இனி, எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. எதிர்காலம் என்றால் தமிழ் நாட்டின் எதிர்காலம், பாரத தேசத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் நிச்சயம் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன், அடுத்த ஆண்டு 2014-ல் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் போது, மத்தியிலே ஆட்சி நிர்வாகம் நடத்துகின்ற கட்சியாக நாம் இங்கே சந்திக்க வேண்டும். அதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொண்டு,

அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.நன்றி, வணக்கம்.” என்று பேசினார்

1 thought on ““அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!!

  1. நாலாவது வருட அதிமுக ஆட்சியில் மின்சாரம் பற்றாக்குறை தீர்தாகி விட்டது, இடுப்பை உடைத்து நம் இன்றைய இளைஞ்சர்களை இலவசமாக முதியவர்களாக்கும் குண்டு குழியுள்ள சாலைகளை அறவே (குறைந்தபட்சம் தலைநகர் சென்னையிலாவது) நீக்கியாகிவிட்டது போன்ற சாதனைகளை ஏன் மறந்து விட்டார் நம் முதல்வர்.

    சரி சரி அது என்ன ?? அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! இனிவரும் பேச்சுக்களில் அப்படியே இதையும் சேர்துகிட்டா நல்ல இருக்கும் “பொது ஜனங்களுக்கு போட்ட நாமமும் வாழ்க”.

Comments are closed.