September 29, 2021

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் யோகா கட்டாயம்?

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ’இந்தியாவின் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில் சர்வதேச யோகா தினமாக ஆண்டின் ஒரு தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.இதனிடையே அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகாவை ஒரு கட்டாய பாடமாக சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது..
yoga modi
இது குறித்து மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக்,”யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சேர்க்கும்படி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு சாதகமான பதில் கிடைத்தால் வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த திட்டத்துக்கு சம்மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்படும். நம்முடைய பாரம்பரிய கலைகளையும் மருத்துவ முறைகளையும் மறந்து விட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் நம்முடைய கலைகளையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றி வளர்ச்சி அடைந்து விட்டன. அடுத்தகட்டமாக அனைத்து கிராமங்களிலும் ஆயுர்வேத மையங்களையும் துவக்க திட்டமிட்டுள்ளோம்.”என்று அவர் கூறினார்.

இதனிடையே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-வது மொழியாக ஜெர்மன் மொழியை பயிற்றுவிப்பதற்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜெர்மனியுடன் போடப்பட்ட ஒப்பந்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்த ஒப்பந்தம் எந்த அடிப்படையில் போடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க ஏற்கனவே விசாரணை நடந்து வருகிறது. இந்த பள்ளிகளுக்கான 3 மொழி கோட்பாடு தெளிவாக உள்ளது. அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 23 இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை 3-வது மொழியாக மாணவர்கள் எடுத்து படிக்கலாம். அதன்படி இந்த பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க முடியாது.
நாங்கள் பிரெஞ்சு மொழியை கற்பிக்கிறோம். சீன மொழியை கற்பிக்கிறோம். அந்தவகையில், வெளிநாட்டு மொழியாக ஜெர்மன் மொழியும் தொடர்ந்து கற்பிக்கப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்