September 18, 2021

அங்கோர்வாட் கோவிலை வணிக நோக்கத்திற்காக காப்பியடிப்பதா? -கம்போடியா எச்சரிக்கை!

12-ம் நூற்றாண்டில் தமிழர்களால் கட்டப்பட்ட கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இக் கோவில் குறித்து சுபஸ்ரீமோகன் வார்த்தைகளில் விவரிப்பதென்றால் ”கம்பூச்சியா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் கிமர் என்றும் அழைக்கின்றனர். முதல் மூன்று நூற்றாண்டுகள் இந்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கி வந்தது. இந்த காரணத்தினால் இன்றும் இந்திய கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் அதிக அளவு காணப்படுகிறது.
hindu kovil
ஒரு நாகரிகம் தோன்றுவதற்கு நதி அவசியமாகிறது. மிகோங்க் மற்றும் தொன்லே சாப் நதிக்கரையில் தான் தெனோம் கூலன் என்ற ஊரை ஜயவர்மன் II நிர்மாணித்தான். அந்த நகரம் இன்று சியாம் ரீப் என்று அழைக்கப்படுகிறது. அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது.

மன்னன் சூர்யவர்மன் அங்கோர் வாட் நகரத்தில் கமய் என்ற தேசத்தை ஆண்டு வந்தான். மன்னன் சூரியவர்மன் II ஆட்சி காலத்தை அங்கோர் வாட்டின் பொற்காலமாக கருதுகிறார்கள். 6-ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை வெவ்வேறு மன்னர்கள் கோயில்களை கட்டினர். அவர்களில் முக்கியமானவர்கள் ஜயவர்மன், இந்திர வர்மன், ஹர்ஷ வர்மன் மற்றும் ராஜேந்த்ர வர்மன் ஆவர். சூரிய வர்மனது ஆட்சி காலத்தில் கமய் கட்டிட கலையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது.

அங்கோர் மன்னர்கள் தங்களை தெய்வமாகவே கருதி கோயில்களை கட்டி கொண்டனர். பந்தே ஸ்ரீ என்று கூறப்படும் ஆலயம் ஜயவர்மனால் 9-ம் நூற்றாண்டில் மணற் கல்லினால் கட்ட பட்ட பிரம்மாண்டமான ஆலயமாகும். ஜயவர்மன் என்ற மன்னன் தனக்கு மட்டுமில்லாமல் தன் தாய் தந்தைக்கும் கோவில் கட்டி உள்ளான். தன்னுடய கோவிலை அங்கோர் தாம் என்றும் தன் தாய்க்கு கட்டிய கோயிலை தா ப்ரோம் என்றும் அழைத்து கொண்டான்.

மன்னன் கமய வம்சாவளி தோன்றலாய் இருந்தாலும் இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட காதலால் தனது பெயரை ஜய வர்மன் என சூட்டி கொண்டான். இவனுக்கு பின் வந்த மற்ற மன்னர்களும் இதையே பின் பற்றினர். இவர்கள் காலத்தில் இந்து மதமும் புத்த மதமும் வேறுபாடின்றி தழைத்தோங்கியது.

அங்கோர் வாட் பெரிய கோயிலை காக்கும் கடவுளான விஷ்ணுவை கொண்டு தன்னையும் விஷ்ணுவாக பாவித்து கொண்டு இந்த கோயிலை எழுப்பினான். நான்கு திசைகளில் வாயில்கள், ஒரு அகழி, மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் அங்கோர் வாட் கோவிலின் அமைப்பு. தூண்களின் மேல்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும், சுவர்களில் நடன மாதர்கள், ஆண்கள், அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்கள் காணபடுகிறது.

இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்க்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது. நடைமுறையில் மக்கள் சட்ட திட்டங்களுக்கும், பழி பாவங்களுக்கும் கட்டுபட்டு நடக்க இந்த சிற்பங்கள் உதவியது. இவர்களது காலத்தில் நாடே செல்வ செழிப்புடன் காணப்பட்டது”என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்தான் தமிழர்களின் கட்டிடக்கலையை உலகம் முழுவதும் பறைசாற்றிய கம்போடியாவின் அங்கோர் வாட் கோயிலைப் போலவே ஒரு கோயிலை இந்தியாவில் கட்டப்போவதாக மகாவீர் அறக்கட்டளை அறிவித்ததை அடுத்து இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது கம்போடியா. உலகம் முழுவதும் மிகப்பிரபலமாகி விட்ட இந்த கட்டிடக்கலை வரலாற்று சான்று மிக்க கோவிலின் மாதிரியில் இன்னொரு கோவிலை எழுப்பக்கூடாது என கம்போடியா எச்சரித்துள்ளது.

பீகாரை சேர்ந்த மாகவீர் மந்திர் டிரஸ்ட் என்ற அமைப்பு உலகிலேயே மிகப் பெரிய இந்து கோவிலாக பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் 161 ஏக்கர் நிலத்தில், சுமார் ரூ.500 கோடி செலவில் ஒரு கோவிலை கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான வரைபடமும், மாதிரியும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவை அங்கோர் வாட் கோவிலின் தோற்றத்திற்கு பெரும்பாலும் ஒத்துப்போகும் அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

விராட் ராமாயன் மந்திர் என்ற பெயரிலான இந்த கோவில் 2800 அடி நீளமும், 1400 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் இந்த கோவிலுக்கு கம்போடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கம்போடியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவில் உருவாகவுள்ள விராட் ராமாயன் கோவில் கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலை காப்பியடிப்பது போல் உள்ளது. வணிக நோக்கத்திற்காக அவ்வாறு காப்பியடித்து புதிதாக ஒரு கோவில் கட்டப்பட்டால் அது உலக பாரம்பரிய சின்னத்திற்கான விதிமுறைகளை மீறுவது போலாகிவிடும். அங்கோர் வாட் கோவிலை கம்போடியாவின் தேசிய கொடியின் சின்னமாகவும் பல நூற்றாண்டுகளாக உள்ளது. எனவே, பாரம்பரியமாக இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க இருநாட்டு மக்களிடையேயான உறவுகளில் கருத்து வேறுபாடு ஏற்படாமலிருக்க இந்திய அரசு இந்த புதிய கோவிலை கட்ட அனுமதி அளிக்க கூடாது”என கம்போடியா கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 thought on “அங்கோர்வாட் கோவிலை வணிக நோக்கத்திற்காக காப்பியடிப்பதா? -கம்போடியா எச்சரிக்கை!

Comments are closed.