ஆக்ராவின் பெயரை ஆக்ரவன் என்று மாற்றம்.? -யோகி ஆதித்யநாத் அரசு பரிசீலனை!

ஆக்ராவின் பெயரை ஆக்ரவன் என்று மாற்றம்.? -யோகி ஆதித்யநாத் அரசு  பரிசீலனை!

தாஜ்மகால் அமைந்துள்ள நகரமான ஆக்ரா, வரலாற்று காலத்தில் ஆக்ராவன் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக்ராவின் வரலாற்று பெயர் குறித்த தகவல்களை தருமாறு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள முகலாயர்கள் காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக விளங்கிய நகரங்களின் பெயர்களை யோகி ஆதித்யநாத் அரசு மாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக, அலகாபாத் நகரம் ப்ரக்யாராஜ் என்றும், வரலாற்று சிறப்புமிக்க முகல் சராய் ரயில் நிலையம் தீனதயாள் உபாத்தியாயா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆக்ராவின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் சிக்கந்தர் லோதி காலத்திலும், பாபர், அக்பர், பதேபூர் சிக்ரி ஆகிய முகலாயர் கள் ஆட்சிகாலத்தில் முக்கியமான நகரமாக விளங்கியது ஆக்ரா. குறிப்பாக, ஷாஜகான் காலத்தில் செழுமையான பகுதியாக விளங்கியது. தலைநகரமாக இருந்த ஆக்ராவை ஷாஜகான் பல்வேறு காரணங்களால் டெல்லிக்கு அருகிலுள்ள ஷாஜகான்பாத் என்ற புதிய நகரத்திற்கு மாற்றினார். ஷாஜகான் மறைவுக்குப் பிறகு, அவரது மகனான ஒளரங்கசிப் தலைநகரை மீண்டும் ஆக்ராவுக்கு மாற்றியதோடு, அந்நகரை தலைமையிடமாகக் கொண்டு தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார். முகலாயர்கள் ஆட்சிகாலத்தில் செல்வசெழிப்பாக விளங்கிய ஆக்ராவில் பல்வேறு முகலாயார்கள் காலத்து கட்டிடங்கள் இன்றும் உள்ளது.

முக்கியமாக ஷாஜகான் தனது மனைவி நினைவாக கட்டிய தாஜ்மஹால் முகலாயர்களின் ஆட்சியை வெளிகாட்டும் விதமாக உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் ஆக்ராவிற்கு புராண காலத்து வரலாறும் இருக்கிறது. மஹாபாரதத்தில் ஆக்ரா நகரமானது அக்ரவன் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமை மிக்க பாரம்பரிய புகழ் கொண்ட நகரின் பெயரை, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புராண காலத்தில் ஆக்ரா நகரம் குறிப்பிடப்பட்ட பெயரான அகர்வன் என்ற பெயரை மீண்டும் அந் நகருக்கு சூட்ட முடிவுசெய்துள்ள யோகி ஆதித்யநாத், இது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆக்ரா நகரில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக வல்லுநர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மகாபாரத காலத்தில் அக்ரவன் என்று அழைக்கப்பட்ட பெயர் எப்போது, எந்த சூழ்நிலையில் ஆக்ரா வாக மாறியது என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்களிடம் உத்தரபிரதேச அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்னர், அம்மாநிலத்தில், அலகாபாத் பிரக்யாராஜ் எனவும் பைசாபாத் அயோத்யா எனவும் முகல்சாராய் ரயில்வே நிலையம் தீன் தயால் உபத்யாயா நகர் எனவும் ஏற்கெனவே பெயர்மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!