சர்வதேச யோகா தினம் : இந்தியாவில் ஏற்பாடுகள் ஜரூர்!

சர்வதேச யோகா தினம் : இந்தியாவில் ஏற்பாடுகள் ஜரூர்!

பிரதமர் மோடி அரசின்  முயற்சியால் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் என ஐ.நா. அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி அன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி தலைமையில் ஆயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தியாவில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளை ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.  இந்நிலையில் வரும் ஜூன் 21ம் தேதி அன்று ஜார்கண்ட் தலைநகர் ரான்சியில் சர்வதேச யோகா தினத்தின் பிரதான நிகழ்ச்சி நடைபெறும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தன்று தேசிய அளவில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்த டில்லி, சிம்லா, மைசூர், அகமதாபாத் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகாசன நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்வேறு மாநில தலைவர்கள், யோகா நிறுவனங்கள், யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் என 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டில்லியில் சர்வதேச யோகா தினத்தன்று முக்கிய நிகழ்ச்சி ராஜபாதையில் நடைபெறும். அதை தவிர செங்கோட்டை, நேரு பூங்கா, லோதி பூங்கா, தால்கட்டோரா பூங்கா, யமுனா விளையாட்டு வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

சர்வதேச யோகா தினத்தன்று மத்திய மாநில அரசுகளை சேர்ந்த அனைத்து அமைச்சகங்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடவும் லட்சக்கணக்கான மக்களை இதில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் இந்தியாவில் உள்ள பிரபல யோகா குருக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான யோகா நெறிமுறைகளை உருவாக்கியுள்ளனர்.

அதை பின்பற்றி சர்வதேச யோகா தின நிகழ்ச்சியின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆசனங்கள் 45 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக செய்யப்படும் என்று ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறைக்கு  விருது

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் 10ம் தேதி முதல் ஜூ 25ம் தேதி வரை யோகா குறித்து ஊடகங்களில் வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பரிசீலிக்கப்படும். அவற்றில் சிறந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். சிறந்த ஊடக நிறுவனங்களை தேர்ந்தெடுக்க 6 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்படும். செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ என்ற 3 பிரிவின் கீழ் தலா 11 விருதுகள் என மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படும் .

யோகா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பை கவுரவிக்கும் நோக்கத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் செய்தியாளர்களிடம் கூறினார்.

error: Content is protected !!