வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள்! – AanthaiReporter.Com

வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள்!

வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படும். உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் திகழ்கிறது. சர்வதேச அளவில் ஜனத்தொகை வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, நிலப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சூழல் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளுக்கு  முக்கிய பங்கு வகிக்கின்றது ஜனத்தொகை.

உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப் படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப் படுகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-ன்படி 132. 42 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகி விட்டது.

1989-ம் ஆண்டு ஐ.நா., மக்கள்தொகை அதிகரிப்புபற்றி விவாதிப்பதற்காகக் கூடியது. மக்கள்தொகை பற்றிய விவாதத்தை நடத்துவதற்கென சர்வதேச தினம் தேவை என முடிவுசெய்யப்பட்டது. இதன் விளைவாக இன்றைய தினத்தை உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

நம் இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடிக்கு சென்று விட்டது. அதாவது உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியா வை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-ன்படி 132. 42 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகி விட்டது. உலக மக்கள் தொகை யும் வரும் 2030 -ம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.

இந்த மக்கள் தொகை கொள்கையின் தந்தையாக போற்றப்படுபவர் தாமஸ் ராபர்ட் மால்தூஸ். இவர் ‘மக்கள் தொகை பெருகினால் எதிர்காலம் ஆபத்தானதாக மாறிவிடும்’ என்று உலகை எச்சரித்தவர். அதை உலகம் உணர்ந்ததால் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகையை கணக்கெடுக்கின்றனர்.

பொது ஆண்டுக்கு முன்…

ராபர்ட் மால்தூஸ் கவலைப்படுவதற்கு முன்பே மக்கள் தொகை கணக்கீடு செய்யும் பழக்கம் பொது ஆண்டுக்கு முன்பே(நன்றி: தமிழக அரசு) அதாவது மக்களுக்கு புரியும் படி சொல்வதென்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இருந்துள்ளன. பாபிலோனியர்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தொகை கணக்கெடுத்துள்ளனர். நாடு முழுவதும் கணக்கெடுப்பு செய்ய ஆறேழு ஆண்டுகள் ஆனதாம். ஆள் கணக்குடன் கூடவே மக்கள் வைத்திருந்த வெண்ணெய், தேன், பால், கம்பளி, காய்கறிகள் அளவுகளையும் கணக்கீடு செய்துள்ளனர். ஆவணப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு என்றால் 2518 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷியா பேரரசில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புதான். நிலம் ஒதுக்கீடு செய்யவும், வரி விதிக்கவும் இந்த கணக்கெடுப்பு நடந்ததாம்.

இந்தியாவை பொருத்தவரை தமிழ் பேரரசுகள் ஆண்ட காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அனைத்து நவீனங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால் அவை இந்திய வரலாறாக பதியப்படவில்லை. எனவே இந்திய வரலாறை கணக்கில் கொண்டால் மவுரிய பேரரசு காலத்தில் சுமார் 2370 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. வரி விதிக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். கூடவே மக்களின் பொருளாதார நிலை, வேளாண் தொழில் ஆகியன குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாம்.

உலகின் பெரும் பேரரசுகளாக இருந்த ரோமப் பேரரசு, சோழப் பேரரசுகள் மட்டுமல்ல பழங்குடி பேரரசுகள் இருந்த காலத்திலும் வருவாயை இலக்காக கொண்டுதான் கணக்கெடுப்புகள் நடந்தன. இப்படி இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்களிடம் எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம், யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கால அரசுகள் தலைகளை எண்ணின. அதுதான் இன்று ஜிஎஸ்டி வரை தொடர்கிறது.

பொது ஆண்டுக்கு பின்பு…

இந்தியாவில், மொகலாயர் காலத்தில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் முதன்முதலாக தொகுத்து வெளியிடப்பட்டன. அக்பருடைய அரசவையில் இடம் பெற்றிருந்த அபுல்பாசல் என்ற அறிஞர் எழுதிய, ‘அயனி அக்பரி’ என்ற நூலில், அன்றைய காலக்கட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது. அதனைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் காலத்தில், (1687)அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்கள் தொடர்பான முழு விவரங்களைச் சேகரித்து தந்தார். பின்னர், 1853-ம் ஆண்டு வடமேற்கு பகுதியில் சிறிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிறிஸ்டோப் குலிமிட்டா என்பவர் தலைமையில், 1871-ல் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அப்போதுதான் மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன.

இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது, கல்வி மற்றும் எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு, இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், பெற்றோர் விழுக்காடு, வீடு முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், பங்கேற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி மையத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுவதற்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உட்பட 18 மொழிகளில் பயிற்சி குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டன. அதனடிப்படையில், 16 மொழிகளில் மக்கள் தொகை குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆண்டில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின்போது, இந்தியா-வங்காளதேசம் ஒன்றாக இணைந்து, எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டன.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியல் இடுதலில், கட்டிட எண் மற்றும் மக்கட்தொகை கணக்கெடுப்பு வீட்டு எண், அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனம் பற்றிய விவரங்கள் உட்பட 35 கேள்விகள் கேட்கப்பட்டன. கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுபடி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சத்து 3 ஆயிரத்து நானூற்று இருபத்தி இரண்டு பேர் எனக் கணக்கிடப்பட்டது. இதில், ஆண்களின் எண்ணிக்கை 623, 724, 248 எனவும், பெண்களின் எண்ணிக்கை 586, 469, 174 எனவும் கணக்கிடப்பட்டது. இந்த 7 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 135 கோடியை தாண்டிவிட்டது.

பெயருக்கு பதில் எண்

நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை தொடங்கியது. இன்று மக்களே எண்களாகி விட்டனர். ஆம் தேசிய அடையாள அட்டையான ‘ஆதார் அட்டை’ யில் வழங்கப்பட்ட எண்ணே ஒருவரின் பெயராகும் நிலை. உங்கள் பெயர் சொல்லாவிட்டாலும் உங்கள் ஆதார் எண்ணை தந்துதான் சேவைகளை பெறமுடியும் என்ற நிலைமை உருவாகி வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால் பெயருக்கு பதில் போலீஸ்காரர்களை கூப்பிடுவது போல் எண்களை சொல்லி மக்களை அழைக்கும் காலம் வரும் என்பது காலத்தின் கட்டாயம்.