உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் – AanthaiReporter.Com

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

2007 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்த நாள் ஆட்டிச விழிப்புணரவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் ஏ.எஸ்.டி(ASD) என்று சுருக்க மாக சொல்லப்படுகிறது. இதன் முழுமையான பெயர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு. இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. இன்ன காரணமாகத்தான் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதை இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதற்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் 68க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஒருகோடிக்கும் அதிகமான ஆட்டிசநிலையாளர்கள் இருக்கலாம் என்று சொல்கிறது. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதன் அறிகுறிகள் மூன்று வயது முதல் தென்படும்.

* தனிமையை விரும்புவது

* உடல் நலக்குறைவு போன்ற நேரத்தில், பிறரின் அரவணைப்பை விரும்புவதை வெளிக்காட்ட தெரியாதது

* மற்றவர்கள் இருப்பதைப் பற்றிய உணர்வில்லாதது

* கூடி விளையாடும்போது, தனக்குரிய தருணத்தை பயன்படுத்திக்கொள்ள தெரியாதது

* குழந்தையின் முதல் வார்த்தை வழக்கத்திற்கு மாறாக இருப்பது

* தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டு, திரும்ப, திரும்ப சுற்றுதல், வரிசைப்படுத்துதல் போன்ற செயல்களை செய்வது

* ஒரு பொருளில், குறிப்பிட்ட ஒரு பாகத்தில் மட்டும் ஆர்வம் காட்டுவது,

* பேச்சில் தெளிவில்லாமை

* தன்னிடம் சொல்லப்பட்ட சொற்களை திரும்ப, திரும்ப சொல்வது

* கைகளை அவ்வப்போது பின்னிக் கொள்வது, கைகளை சுழற்றுவது, தலையை இடித்துக் கொள்வது போன்ற மாறுபட்ட உடல் செய்கைகள்

* அதீத பயம்

* சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறிய மாற்றத்தைக்கூட, ஏற்றுக் கொள்ளாமல் துன்பப்படுவது

* தினசரி செய்யும் வேலைகளை, அதே வரிசைப்படி செய்ய பிடிவாதம் பிடிப்பது

* சிறுநீர், மலம் கழிக்க பயிற்சி பெறுவதில் சிரமம்

இவற்றில், மூன்று முதல் ஆறு அறிகுறிகளுடன், பெயர் சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்காதது, கண்களை பார்த்து பேசாதது, சிரித்தால் பதிலுக்கு புன்னகைக்காதது போன்ற குறைபாடுகள் இருந்தால், அக்குழந்தைக்கு, “ஆட்டிசம்’ குறைபாடு இருக்க, வாய்ப்புகள் அதிகம்.

இக்குழந்தைகளுக்கு, “ஆக்குபேஷனல்தெரபி’யில், உணர்வுகளை ஒருங்கிணைக்கும் பயிற்சியை, 6 மாதங்கள் வரை அளிப்பதன் மூலம், அவர்களை, “ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து விடுவிக்கலாம்.

ஆக்குபேஷன் தெரபி சிகிச்சையை தொடர்ந்து அளிக்க வேண்டும்.

இதற்கு கூடுதல் நிதி செலவாகும். அதாவது இப் பயிற்சி பெற ஒவ்வொரு முறையும் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும்.

இதனால் அரசு காப்பீடு திட்டத்தில் பயன்பெற மருத்துவமனையில் டி.இ.ஐ.சி. திட்டத்தில் மனநல சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இன்று தமிழக மருத்துவமனையில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது