இந்தியாவில் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் பெண்கள்- உயிரை விடுவதும் அதிகம்! – AanthaiReporter.Com

இந்தியாவில் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் பெண்கள்- உயிரை விடுவதும் அதிகம்!

மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தின்படி, 2001 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 லட்சம் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவை அனைத்திற்கும் பின்னால் இருக்கும் ஒரே காரணம் காதல் என்றே பதிவாகி உள்ளது. அதேசமயம் கடந்த 15 ஆண்டுகளில் பயங்கர வாதத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000. பயங்கரவாதத்தால் உயிரிழப்பவர்களை விட காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 6 மடங்கு அதிகமாகும். காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடத்திலும், உ.பி., 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3வது இடத்திலும், தமிழகம் 4 வது இடத்திலும், ம.பி., 5வது இடத்திலும் உள்ளன. இவற்றில் காதல் கொலை மற்றும் தற்கொலைக்கு அதிக காரணம் ஜாதி கட்டுப்பாடுகள் என கூறப்படுகிறது.

காதல் தற்கொலைகளில் மேற்குவங்க மாநிலம் முதலிடம் பிடிக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் 15,000 க்கும் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன. 2வதாக தமிழகத்தில் 9405 தற்கொலைகள் நடந்துள்ளன. 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19ல் காதலால் தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். இந்நிலையில் இந்தியாவில் பெற்றோருக்காக பெண்கள் காதலை தியாகம் செய்கிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 1995ம் ஆண்டு ஒரு வாலிபரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பெண்ணின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். ஜெய்ப்பூரில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடத்துக்குள் காதலர்கள் இருவரும் மாலை மாற்றிவிட்டு, விஷத்தை குடித்துள்ளனர். முதலில் அந்தப் பெண் விஷத்தை குடித்துள்ளார். மீதமிருந்த விஷத்தை காதலன் குடித்தான். காதலியின் உடல் மோசமானதை கண்டு வருத்தம் அடைந்த காதலன், அவளை காப்பாற்ற அக்கம் பக்கத்தினரை அழைக்கச் சென்றான். அதற்குள் அந்தப் பெண் தூக்கில் தொங்கினார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண் இறந்தார். காதலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப் பட்டான். இச்சம்பவத்தை அடுத்து அந்த பெண்ணின், தந்தை தனது மகளை அவளது காதலன் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜஸ்தான் நீதிமன்றம் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை ஐகோர்ட் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்தது சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அப்போது அவர்கள் : அந்தப் பெண் விருப்பம் இல்லாமல் பெற்றோரின் முடிவுக்கு முதலில் சம்மதித்து இருக்கலாம். பிறகு அவர் தனது முடிவை மாற்றியிருக்கலாம். பெண்கள் தங்கள் காதலை பெற்றோருக்காக தியாகம் செய்வது இந்நாட்டில் வழக்கமான நிகழ்வு.

ஒருவன் தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்காமல், வேறொருவருடன் இணைவதை பார்க்க விரும்பாமல், அந்தப் பெண்ைண கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அனுமானம் அடிப்படையில் குற்றவழக்குகளில் முடிவு செய்ய முடியாது. குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ள முக்கிய அம்சங்கள்:–

* கிரிமினல் வழக்குகளில் அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக்கூடாது. இந்த வழக்கில் அரசு தரப்பில், குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை.

* நமது நாட்டில் பெற்றோரின் முடிவை ஏற்று, பெண்கள் தங்கள் காதலை தியாகம் செய்கிற நிலை உள்ளது. விருப்பம் இல்லை என்றால் கூட, இப்படி பெண்கள் செய்வது பொதுவான நிகழ்வாக உள்ளது.

* இந்த வழக்கை பொறுத்தவரையில், அந்தப் பெண், தன் காதலர் மீது ஆழமான காதல் கொண்டிருக்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள எண்ணி இருக்கிறார். இந்தக் காதல் காரணமாக தனது பெற்றோர் நடந்து கொண்டவிதம், அவரை குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்று காதலரை திருமணம் செய்து கொள்ள வைத்துள்ளது.

* ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாதபட்சத்தில், அவள் வேறு ஒரு ஆணுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதால் அவளை கொல்கிற அளவுக்கு செல்லக்கூடும். ஆனால் இந்த வழக்கில் அதற்கான ஆதாரம் இல்லை.

இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.