டைவோர்ஸ் ஆன பின்னும் எக்ஸ் ஹஸ்பண்ட் மீது புகார் கொடுக்கலாமே! – சுப்ரீம் கோர்ட் அனுமதி – AanthaiReporter.Com

டைவோர்ஸ் ஆன பின்னும் எக்ஸ் ஹஸ்பண்ட் மீது புகார் கொடுக்கலாமே! – சுப்ரீம் கோர்ட் அனுமதி

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் விவாகரத்து என்ற வார்த்தையை கேள்விபடுவதே அரிதாக இருந்தது. ஆனால் தற் போதைய நமது வாழ்வியல் மாற்றத்தின் விளைவாக இந்த விவாகரத்து முதல் நீரிழிவு, புற்றுநோய் வரை அத்தும் மிக சாதாரணமாக நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தையாக, சமூகத்தில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. ஆம்.. அப்போதெல்லாம் இந்த விவாகரத்து என்பது வீட்டின் கௌரவத்தை பாதிக்கும் விஷயம். அதன் பின் அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு பெரும் கேள்வி குறியாக மாறிவிடும் என்றே கருதுவார்கள். ஆனால், இன்று விவாகரத்து செய்து விட்டு அடுத்த நபரை திருமணம் செய்துக் கொள்ள தயாராகி விடுவது சகஜமாகி விட்டது.இதை ஆரோக்கிய மான மாற்றம் என்று சிலர் கருதினாலும். உறவுகளில் ஏற்படும் சின்ன, சின்ன பிரச்சனைகளுக்கு கூட தீர்வுக் காண இயலாமல் இவர்கள் விவாகரத்து செய்துவிடுகிறார்கள் என்பதே உண்மை என குடும்ப நல வழக்கறிஞர்கள் மற்றும் கன்சல்டன்ட்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் பெண்கள் விவாகரத்து பெற்ற பின்பும் தங்கள் கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்தது. இது குறித்து ராஜஸ்தான் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை மாற்ற முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதாவது கடந்த 2013 அக்டோபர் மாதம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண் தன் முன்னாள் கணவருக்கு எதிராக தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஒரு பெண் விவாகரத்து பெற்ற பின்பும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005ன் கீழ் தன் கணவர் மீது நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெறலாம் என ராஜஸ்தான் ஐகோர்ட் தெரிவித்தது. மேலும் ஒரு பெண்ணின் முன்னாள் கணவர் அந்த பெண்ணின் வீடு அல்லது பணியிடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டாலோ, அவளது உறவினர்களிடம் பிரச்சனை செய்தாலோ அவர் மீது அந்த பெண் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். விவாகரத்துக்கு பின் அந்த பெண்ணுக்கு உரிய சொத்துக்களை கணவர் கொடுக்க மறுத்தால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை அணுகி வழக்கு போடலாம் என ராஜஸ்தான் ஐகோர்ட் அறிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர். பானுமதி மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின் போது முன்னாள் கணவர் சார்பாக வழக்கறிஞர் துஷ்யந்த் பராஷர் ஆஜராகி வாதாடினார்.

பெண்கள் விவாகரத்து பெற்ற பின்பும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கணவர் மீது புகார் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்தினால் அதை பலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் துஷ்யந்த் பராஷர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் விசாரணை முடிவில் வழக்கறிஞர் துஷ்யத்தின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் ராஜஸ்தான் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் தலையிட முடியாது என கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.