பார்லிமெண்ட் கூடத் தொடங்கி விட்டது! – AanthaiReporter.Com

பார்லிமெண்ட் கூடத் தொடங்கி விட்டது!

குளிர்கால  நாடாளுமன்றக்கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த எம்.பி.கள் மற்றும் முன்னாள் எம்.பி.களுக்கு அஞ்சலி செலுத்திய பின் மக்களவை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தாமதமானது. குஜராத்தில் நேற்று (வியாழக்கிழமை) கடைசி கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மத்திய அமைச்சரவை மாற்றிமைக்கப்பட்டபின், நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பதால் மக்களவையில் புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி “புவி வெப்பமயமாதலால் இந்த ஆண்டு குளிரின் அளவு குறைந்துள்ளது. இதனால், நாடாளுமன்ற குளிர்ரகாலக் கூட்டத்தொடரும் காலதாமதமாக தொடங்கியுள்ளது” எனக் கூறினார்.

பின்னர், தற்போதைய எம்.பிக்கள் 3 பேர், மற்றும் மறைந்த எம்.பிக்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் இரங்கற் குறிப்பை வாசிக்க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் இருக்கும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடியுரிமை சட்டம் 1955, மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தேசிய ஆணையம் சட்டம் ஆகியவற்றை சட்டத்திருத்தம் செய்ய 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டத்தொடர், டிசம்பர் 15 முதல் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.முன்னதாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி செய்தியாள்களிடம் கூறியதாவது:

“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என நம்பிக்கை. இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக்கூறினார்.

அதே சமயம் குஜராத் தேர்தலுக்கு முன்பாக 200-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை குறைத்தது, விவசாயிகள் பிரச்சினை, உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலைப் புறக்கணித்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு திடீரென அதிகரித்தது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் எனத் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.