பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு – சில தகவல்கள்/கருத்துக்கள்1 – AanthaiReporter.Com

பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு – சில தகவல்கள்/கருத்துக்கள்1

நேற்று பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற செய்தி வந்தவுடன் தொலைக்காட்சிகள் என்னைக் கருத்துக் கூற அழைத்தன. ஆனால் என் பணிகள் காரணமாக அதற்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. இங்கு சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

 “இது புதிதா?”

1.பொதுப்பிரிவில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீட்டை 1991ல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால் 1992ல் அது செல்லத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது

2.2003ல் இதை நடைமுறைப் படுத்தும் சாத்தியங்கள் குறித்து ஆராய அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்தது

3.2004ல் இதற்கொரு பணிக்குழு அமைக்கப்பட்டது

4. 2006 முதல் கேரளத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12% இடங்கள் பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

“பொருளாதாரத்தில் பின் தங்கிய” என்று ஒரு பிரிவு உண்டா?”

உண்டு. அதை EBC (Economically Backward Class) என்று மத்திய அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பெரும்பாலும் கல்விக்கடன், கல்விக் கொடை (scholarships)இவை தொடர்பாக இந்த பகுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஜாதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை

“பொதுப்பிரிவில் இருப்பவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமா?”

வேளாளர்கள் ( பிள்ளைமார், முதலியார்கள், கார்காத்தார்), நாயுடு வகுப்பில் ஒரு பிரிவினர், செட்டியார்கள் சமூகத்தில் ஒரு பிரிவினர் ஆகியோரும் இருப்பதாக அறிகிறேன்

“பார்ப்பனர்கள் எல்லோரும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள்தானா?”

கர்நாடக சட்டமன்றத்தில் அதன் நிதி அமைச்சர் 2015ல் வெளியிட்ட தனி நபர் வருமானம் பற்றிய புள்ளிவிவரம்:

வொக்கலிகா: ரூ 914, பட்டியல் இனத்தவர் ரூ 680, பட்டியல் மரபினர் ரூ577, பார்ப்பனர்கள்ரூ537

ஆந்திரப் பிரதேசத்தில்: வீடுகளில் சமையல்காரர்களாகப் பணிபுரிபவர்களில் 70% பேர் பார்ப்பனர்கள். ( J. Radhakrishna- Brahmins of Inda -chugh publications) அங்குள்ள புரோகிதர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள்

தில்லியில் உள்ள 50 பொதுக் கழிப்பிடங்களில் சுத்தம் செய்யும் பணி செய்பவர்கள் பார்ப்பனர்கள்
வாரணாசியில் உள்ள ரிக் ஷா ஓட்டிகளில் பலர் பார்ப்பனர்கள்

தேசிய சர்வே (90) கிராமப்புறத்தில் வாழும் பொதுப் பிரிவினரின் பொருளாதார நிலை மற்ற சமூகத்தினரை விட மோசமாக இருக்கிறது எனக் கூறுகிறது

2004ல் வெளியான தேசிய சர்வே அதே நிலை நீடிப்பதாகத் தெரிவிக்கிறது.

“பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சரிதானா?”

கல்வி வியாபாரமாகிவிட்ட நிலையில், அரசால் உயர்கல்வி/ மருத்துவம் போன்ற தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்க முடியாத நிலையில் எல்லா ஜாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதை இட ஒதுக்கீட்டின் இரண்டாம் நிலையாக (Second Phase) எனக் கொள்ள வேண்டும். பொதுப் பிரிவினருக்கு பொருளாதார இட ஒதுக்கீடோடு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குள்ள இட ஒதுக்கீட்டில் க்ரிமீ லேயரை நீக்குவதும் அவசியம். வருண அடிப்படையில் மட்டும் அளிக்கப்படும் சமூக நீதியை வர்க்க அடிப்படைக்கும் விரிவாக்க வேண்டிய அவசியத்தைச் சந்தைப் பொருளாதாரம் நிர்பந்திக்கிறது.

மாலன் நாராயணன்