தாய்ப்பால் கொடுப்பதால் இம்புட்டு நன்மையா? – யுனிசெப் புது தகவல்! – AanthaiReporter.Com

தாய்ப்பால் கொடுப்பதால் இம்புட்டு நன்மையா? – யுனிசெப் புது தகவல்!

என்னதான் விழிப்புணர்வு ஊட்டினாலும் பல்வேறு வெளிநாடுகளில் பெண்கள் தங்கள் மார்பக அழகு போய் விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக நம் இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டு பிடித்து எச்சரிக்கையே வெளியிட்டிருந்த நிலையில் ‘முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 8.20 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்படும்’ என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஒரு குழந்தை போதுமான அளவுக்கு தாய்ப்பால் பெற்றால், அது அந்த குழந்தையை மட்டுமல்ல, அவர்கள் குலத்தையே தழைக்க செய்யும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அக்குழந்தையை காக்க இறைவன் தாய்க்கு அளித்த வரம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலேயே மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துவர். அதுவும் இயற்கையில் பெறும் உந்துதலால் குழந்தை தன் தாயிடம் வெகு எளிதில் பால் குடிக்கக் கற்றுக் கொண்டு விடும்.

தாய்க்கு ஏதேனும் குறிப்பிட்ட வகை மருந்து, எடுத்துக் கொள்ளும் தாய்மார்கள் தொற்று நோய் போன்ற பாதிப்புகள் இருந்தால் மட்டுமே குழந்தைக்கு மாற்று உணவினைப் பற்றி மருத்துவர்கள் பரிசீலித்து பரிந்துரைப்பார். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப் பால் மட்டுமே கொடுக்கச் சொல்வர். பிறகு தாய்ப்பாலும் பிற உணவு வகைகளையும் சேர்ப்பர். இந்நிலையில்தான் உலக சுகாதார அமைப்பான யுனிசெப், உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும் மற்றும் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் பத்து முக்கிய வழிமுறைகளை நேற்று வெளியிட்டது. யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா எச் போரே இதை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவது நோய் தொற்றுகள் தாக்காதவகையில் குழந்தையை பாதுகாக்கும்.

பகுதியாக தாய்ப்பால் கொடுப்பது அல்லது தாய்பாலே கொடுக்காமல் இருக்கும்போதுதான் வயிற்று போக்கு மற்றும் பிற நோய் தொற்றுகளால் குழந்தைகள் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதற்கு ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இந்த அடிப்படை வழிமுறைகளின்படி தாய்ப்பால் ஊட்டுவதை ஒழுங்குப்படுத்தினால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதனால், குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுக்க முடியும்.

தாய்ப்பால் மூலமாக குழந்தைகள் நல்ல அறிவுத்திறன் பெறுகின்றனர்.

பள்ளிக்கு ஒழுங்காக செல்வது, நன்றாக படிப்பது, பெரியவர்களான பிறகு அதிகமாக சம்பாதிப்பது ஆகியவற்றுடன் தாய்ப்பால் சம்பந்தப்பட்டுள்ளது.

மேலும், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகிறது.

பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 8.20 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.