அரசியலுக்கு எப்போ வருவேன்? சக்க போடு போடு ராஜா சந்தானம் பதில் – AanthaiReporter.Com

அரசியலுக்கு எப்போ வருவேன்? சக்க போடு போடு ராஜா சந்தானம் பதில்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’  படத்தில், முதல் முறையாக சிம்பு இசையமைக்கிறார். இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் ’கலக்கு மச்சான்’ பாடல், சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்பட்டது. சிம்பு மற்றும் ரோகேஷ் எழுத, அனிருத் பாடியிருந்த ’கலக்கு மச்சான்’ பாடல், ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் அண்ட் ஷேர்களைப் பெற்றது. அதன் பிறகு, ’காதல் தேவதை’ பாடலின் டீசரை வெளியிட்டிருந்தது. அந்தப் பாடலை வைரமுத்து எழுத, யுவன்ஷங்கர் ராஜா பாடியிருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில், படக்குழுவினருடனான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம், நடிகரும், தயாரிப்பாளருமான விடிவி கணேஷ், ரேபோ சங்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

அதில் சந்தானம் பேசிய போது, “என்னை சினிமாவில் அறிமுகம்செய்த நடிகர் சிம்புவை என்னுடைய படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் செய்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சொன்ன புகாருக்கு சிம்பு பதில் அளிப்பார். சினிமாவைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்னைகள் இருக்கிறது. அதை அவங்க சாதாராண மனுஷன் லெவலில் இருந்துதான் சரி பண்ண பார்ப்பாங்க. சினிமா ஸ்டைலில் ஸ்பைடர்மேன் டைப்பில் அதிரடி எல்லாம் செய்ய மாட்டாங்க. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னை என வரும்போது, பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் இரண்டு பக்கமும் நியாயம் இருக்கும். என்னுடைய பிரச்னை பெரிதானது, நான் நடிகன் என்பதால்தான்.

அதே சமயம் ஒரு படத்தை தயாரிக்கும் புரொடீயூசர் திட்டம் போடுவது மிகச் சரியாக இருக்க வேண்டும். அதிலும் கடன் வாங்கினால் திருப்பிக் கேட்கும்போது கொடுக்க வேண்டும். கடுமையாக உழைத்தால், நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். இயற்கையாக நம் திட்டமிடலுக்கு மாறாக ஏதாவது நடந்தால் விதி, செயற்கையாக நடந்தால் அதற்கு நாம்தான் பொறுப்பு. ஆனாலும் தயாரிப்பாளர்கள் நஷ்டத்திற்காக நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்குமாறு சொல்வது நியாயம் இல்லை. உழைத்ததற்கான பணத்தைத்தான் பெற்றுக் கொள்கிறோம். அதனால், எங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை

இதுக்கிடையில் என் இந்த திரைப்படம் ரிலீஸாகும் அதே டிசம்பர் 22-ம் தேதிதான் சிவகார்த்திகேயன்- நயன்தாரா நடிப்பில் உருவான ‘வேலைக்காரன்’ திரைப்படமும் வெளியாகிறது . அதனால் சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படத்திற்கு தான் `சக்க போடு போடு ராஜா’ படம் போட்டியாக இருக்கும்”என்றார். அத்துடன் ‘அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை’ என்றும் சந்தானம் குறிப்பிட்டார்