‘இந்தியாவில் தண்ணீர் பிரச்னையால் வங்கி வாராக் கடன் உயரும்! – உலக வன விலங்கு நிதியம் எச்சரிக்கை! – AanthaiReporter.Com

‘இந்தியாவில் தண்ணீர் பிரச்னையால் வங்கி வாராக் கடன் உயரும்! – உலக வன விலங்கு நிதியம் எச்சரிக்கை!

உலக மயமாக்கல் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ள நிலையில் ‘இந்தியாவில் இந்த தண்ணீர் பிரச்னையால் கூட  வங்கி களின் வாராக் கடன் உயரும்’ என உலக வன விலங்கு நிதியம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும்  2030-ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும். ஆனால், தற்போதைய நிலை தொடர்ந்தால் இந்தியா மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும். இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும். அந்த காலகட்டத்தில் 40 சதவீதம் பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். 2020-ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப் படுவார்கள் என்றெல்லாம் ஏற்கெனவே நம் இந்திய நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்திருந்தது.

இந்நிலையில் உலக வன விலங்கு நிதியம் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தியா வில், தண்ணீர் பற்றாக்குறையால் அதை சார்ந்த துறைகள் பாதிக்கப்படும். குறிப்பாக, மின்சாரம் மற்றும் வேளாண் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு, தண்ணீர் பிரச்னையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் இத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளின் கடன் நிலுவையில் எதிரொலிக்கும்.

இந்திய வங்கிகளின் மொத்த கடனில், குறிப்பிடத்தக்க அளவிற்கு தண்ணீர் பிரச்னையை எதிர் கொள்ளும் துறைகளின் பங்கு, 40 சதவீதமாக உள்ளது. வங்கிகள் ஏற்கனவே வாராக் கடன் சிக்கலில் உள்ளன. இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் நிறுவனங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் 10 சதவீத கடன் திரும்ப வராமல் போக வாய்ப்புள்ளது.

இத்தனைக்கும் இந்தியா  இதுவரை இல்லாத வகையில் தண்ணீர் பிரச்னையை சந்தித்துள்ளது’ என, ‘நிடி ஆயோக்’ தெரிவித்துள்ளது. அதனால் நீர் வள ஆதாரத்தை பெருக்கவும் தண்ணீர் பிரச்னை களுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.