போவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம்! – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி! – AanthaiReporter.Com

போவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம்! – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி!

பயணம் எல்லைகளை கடந்தது. ஒருவனுக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைப்பது அவன் மேற் கொள்ளும் பயணத்தின் மூலமாகத்தான் என்று கூறுவார்கள். கொலம்பஸ் முதல் காந்தி வரை பயணத்தின் மூலமே மேன்மை அடைந்துள்ளார்கள். முன்பெல்லாம் கோடை விடுமுறை என்றால் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது உறவினர்களையும் அழைத்துக் கொண்டு சுற்றுலாவுக்கு புறப்பட்டு விடுகிறார்கள். பல்வேறு பகுதிகள் அதன் தட்பவெப்ப நிலை, கலாச்சாரம், அப்பகுதியில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் என சுற்றுலாவில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இன்று இருக்கக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் இதுபோன்ற சுற்றுலா மட்டுமே நம்மை மனிதத்தோடும் உயிர்ப்போடும் வைத்திருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு சுற்றுலா செல்ல அருவிகள், மலைப்பிரதேசங்கள் என பல இடங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஏற்பாடுகளையும் மிக கவனமாக செய்வோம். ஆனால், தற்போது விண்வெளியையே சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில், விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொதுமக்களை சுற்றுலாவிற்காக கூட்டிச் செல்ல Bigelow Space Operations என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, பொது மக்களில் 16 பேரை தேர்ந்தெடுத்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டு, அதற்கான கட்டணத் தொகை குறித்த விவரத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, ஒன்றில் இருந்து இரண்டு மாதம் வரை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருப்பதற்கு 52 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், 360 கோடி) செலவாகும் என Bigelow நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் Space X ராக்கெட்டில் மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத்தவிர வேறு எந்த தகவல்களையும் வெளியிடாத Bigelow, Space X நிறுவனத்தின் ராக்கெட்டில் பயணம் செய்ய விண்வெளிக்கு செல்ல ஆர்வம் காட்டும் மனிதர்களை அனுப்புவதாக மட்டும் தகவல் தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு செல்ல பல மனிதர்கள் ஆர்வம் காட்டினாலும், அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஏற்றவாறு மட்டுமே அமைந்திருப்பது சாதாரண மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.