நான் காமராஜர் வழியில் நடப்பேன். ஆனால் திருமணம் செஞ்சுக்குவேன்! – விஷால்

நான் காமராஜர் வழியில் நடப்பேன். ஆனால் திருமணம் செஞ்சுக்குவேன்! – விஷால்

தயாரிப்பாளர் சங்கம் தலைவர் மற்றும் நடிகர் சங்கம் செயலாளர் விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, பிரபு தேவாவின் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது. இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் , தயாரிப்பாளர் நந்தகோபால் , இசையமைப்பாளர் அரோல் கொரொலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , இயக்குநர்கள் சுசீந்திரன் , பாண்டிராஜ் , திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் விஷால் பேசிய போது, “நானும் இயக்குநர் மிஷ்கினும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது ‘துப்பறிவாளன்’ என்ற படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். ‘துப்பறிவாளன்’ படத்தில் எனது திரையுலக வாழ்வின் மிகச் சிறந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் எனக்கு ‘துப்பறிவாளன்’, ’பாண்டியநாடு’ படத்தை விட முக்கியமான படமாகும். நானும் , பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது.

நான் திருட்டு விசிடி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூடத் தெரியும். அவர்கள் யார் , அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன். நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன். ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.யார் அவர்களுக்கு 100-வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்”என்று விஷால் பேசினார்.

இவ்விழா முடிந்தவுடன் கமல் அரசியல் சர்ச்சை குறித்து விஷாலிடம் பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பி னார்கள். அதற்கு விஷால் விளக்கமளித்த போது, “தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்தியா சினிமாவுக்கே முன்னு தாரணமாக இருப்பவர் கமல் சார். அவருடைய கருத்துக்கள் சில சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள். சுதந்தரமாக கருத்துக்களை பதிவு செய்வது என்பது நமது நாட்டில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. கமல் சாரின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளைத் தவிர்த்திருக்கலாம். கமல் சாரின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் தங்களுடைய எதிர்கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள். இது ஒரு வார்த்தைப் போர்.

கமல் சாரிடம் பேசிய போது, இந்த விஷயத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிறார். எப்போதுமே கமல் சாருக்கு ஆதரவாக நிற்போம். அமைச்சருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.கமல் சாருக்கு எவ்வித மிரட்டல் விடுத்தாலும், அதை தைரியமாக சந்திக்கக்கூடிய நபர் தான். எந்த ஒரு சூழலிலும் கமல் சார் பின்னால் இருப்போம். ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவருமே அரசியலுக்கு வருகிறோம் என்று அறிவிக்கட்டும். அதற்குப் பிறகு அதைப் பற்றிய எனது கருத்துகளைச் சொல்கிறேன். அதுவரைக்கும் நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்” என்று விஷால் பேசினார்.

நீங்கள் அரசியலில் நுழைவீர்களா என்ற கேள்விக்கு, “நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை” என்று விஷால் பதில் சொன்னார்.

error: Content is protected !!