விஷால் வேட்புமனு தள்ளுபடி.. ஏற்பு… தள்ளுபடி! – திகில் திருப்பங்கள்! – AanthaiReporter.Com

விஷால் வேட்புமனு தள்ளுபடி.. ஏற்பு… தள்ளுபடி! – திகில் திருப்பங்கள்!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் விஷால் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. அப்போது, விஷால் மனுவில் முன்மொழிந்தவர்கள் பெயரில் போலி கையெழுத்து உள்ளது. அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக வக்கீல்கள் கூறினர். அதேபோல, விஷால் வேட்புமனுவில் தவறுகள் உள்ளது. எனவே, அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக வக்கீல்கள் கூறினர். பிரதான கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் வேட்புமனு மீதான பரிசீலனை இரண்டரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, இறுதியில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமி கூறுகையில், ‘‘மனுவை தாக்கல் செய்பவரை அந்த தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பது விதி. அதன்படி விஷாலை, முன்மொழிந்த 10 பேரில் 2 பேர், தங்களை வற்புறுத்தி வேட்புமனுவில் கையெழுத்து பெற்றதாக கூறியுள்ளனர். எனவே, விஷால் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். சம்பந்தபட்ட 2 பேரும் நேரில் ஆஜராகி வேட்புமனுவில் கையெழுத்து போடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விஷால் மனு நிராகரிக்கப்படுகிறது’’ என்றார்.

இதைக் கேள்விப்பட்டு தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்த விஷால், இந்த தகவலறிந்ததும் உடனடியாக மாநகராட்சி மண்டல அலுவலகம் வந்தார். தேர்தல் அதிகாரியை சந்தித்தார். தன்னை முன்மொழிந்த 2 பேரை மிரட்டி பொய் சொல்ல வைத்துள்ளனர். அதற்கான ஆதாரம் உள்ளது என தேர்தல் அதிகாரியிடம் கூறினார். ஆனால், அவரின் கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதையடுத்து கோபமாக வெளியே வந்த விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார்.

அப்போது தனது ஆதரவாளருக்கு அதிமுகவினரிடம் இருந்து மிரட்டல் வந்தது என்று கூறிய விஷால், அதுகுறித்த ஆடியோவை வெளியிட்டார். தேர்தல் அதிகாரியிடமும் ஒப்படைத்தார். அந்த ஆடியோ விவரம் இதோ:

விஷால்: ‘‘வேலு, கடிதம் கொடுத்திருக்கியா, கையெழுத்து உன்னுது இல்லேன்னு’’.

வேலு: 3 மணிக்கு என் மனைவியோட அக்கா எனக்கு போன் செய்து, ஆளுங்க வந்து கூப்பிடறாங்க என்று கூறினார்.

விஷால்: யார் வந்து கூப்பிட்டாங்க?

வேலு: மதுசூதனன் டீம். 10 பேர் கையெழுத்து போடலேன்னு ஒரு கடிதம் கொடுங்க. அதைவச்சு விஷால் மனுவை நிராகரிச்சுடறோம் அப்படின்னு சொன்னாங்க. என்னை அகஸ்தியா தியேட்டர் அருகே இருக்கற மதுசூதனன் ஆபீசில் உட்கார வச்சுட்டு, லேடீசை அழைச்சுட்டு போயிட்டாங்க. அவங்க வர்றவரைக்கும் இங்கேயே இருன்னு சொல்லிட்டாங்க. அவங்ககிட்டே நாங்க சொல்றமாதிரி சொல்லுமான்னு சொல்லி எழுதி கையெழுத்து அதை வீடியோ எடுத்துகிட்டாங்க. ராஜேஷ் தான் இதை செய்தாரு. எனக்கும் பணம் கொடுத்தாங்க. ரூ.2 ஆயிரம் கட்டில் பாதியை பிச்சு கொடுத்தாங்க. ஆனா, நான் வாங்கலே. வீட்டு பெண்களை மண்டல அலுவலகம் கூட்டிட்டு போயி, நாங்க கையெழுத்து போடலேன்னு வாக்குமூலம் வாங்கிட்டாங்க. இதுதான் ஆடியோவில் இருந்தது.

இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் நேற்று இரவு வேகமாக பரவியது. ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மறியலில் ஈடுபட்ட விஷாலிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.
இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி தேர்தல் அதிகாரியிடம் இருந்து விஷாலுக்கு அழைப்பு வந்தது. அதையேற்று விஷால் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் தேர்தல் அதிகாரியிடம் பேச சென்றார்.

அங்கிருந்து வெளியே வந்தவர், நிருபர்களிடம் கூறியது:

நீதி, நியாயம் வென்றது. என் மனு நிராகரிக்கப்பட்டதுக்கு யார் காரணம் என்பதை பற்றி பேச விரும்பவில்லை. எனக்கு முன்மொழிந்தவர்கள் 2 பேர் கையெழுத்து போடவில்லை என்று கூறியதற்கு தகுந்த ஆதாரங்களை தேர்தல் அதிகாரியிடம் காட்டினேன். என் மீது உள்ள நியாயத்தை அவர்கள் புரிந்து கொண்டு என் மனுவை ஏற்றுக் கொண்டனர். நேர்மையாக நடந்து கொண்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றி. எனக்கு முன்பின் தெரியாத சுயேச்சை வேட்பாளர்கள் எனக்காக தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாளை (இன்று) முதல் நான் பிரசாரத்தை தொடங்குகிறேன். மனு தாக்கல் செய்ததில் இருந்து மனுவை ஏற்பது வரை போராட்டம்தான். நியாயம் ஜெயித்தது.
இவ்வாறு விஷால் கூறினார்.

இதனிடையே, நேற்று இரவு 11 மணிக்கு விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விஷால் கொடுத்த ஆடியோவில் நம்பகத்தன்மை எதுவும் இல்லை. இதனிடையே, விஷாலுக்கு தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத 2 நபர்கள் பெயர் இடம்பெற்றுள்ளன. சுமதி மற்றும் தீபன் நேரடியாக தேர்தல் அலுவலரிடம் ஆஜராகி நாங்கள் கையெழுத்து போடவில்லை. இது எங்கள் கையெழுத்து இல்லை என விளக்கம் அளித்தனர். இதையடுத்து, விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சினிமாவை போல் நிமிடத்திற்கு நிமிடம் திகில்… என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை, மக்களுக்கு சேவை செய்து வந்தால் இந்த கதியா… இத்தனை சிக்கல் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் கூறியது என்னிடம் வீடியோவாக இருக்கிறது. என்னை பார்த்து அரசியல் கட்சிகள் ஏன் பயப்பட வேண்டும்… சுயேட்சை ஒருவருக்கு நான் ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன் என நடிகர் விஷால் கூறினார்.

இதை அடுத்து நடிகர் விஷால் நேற்று இரவு அளித்த பேட்டியின் போது, “என்னை முன் மொழிந்தவர்கள் மிரட்டபட்டனர். எனக்கு எதிராக சதி நடக்கிறது. அதற்கு என்னிடம் வீடியோ இருக்கிறது. ஆடியோ ரிக்கார்ட்டிங் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என்னை முன் மொழிந்தவர்கள் வீட்டில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் வந்து மிரட்டி இருக்கிறார்கள். நான் மக்களுக்கு நல்லது செய்ய போட்டியிடுகிறேன். என்னை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்?. தனிப்பட்ட வேட்பாளராக நான் தாக்கப்படுகிறேன். நான் முறையிடு செய்தபோது, தேர்தல் அதிகாரி, போலீஸ் ஆபிசர் என்னிடம் பேசினார்கள். என் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகப் தேர்தல் அதிகாரி , போலீஸ் ஆபீசர் கை கொடுத்து வாழ்த்தினார்கள். ஆனால் இப்போது நிராகரிப்பு என்கிறார்கள். ஜனநாயகத்தில் என்ன நடக்கிறது என புரியவில்லை. என் மனுவை முதலில் நிராகரித்த ஆபிசரிடம் முன்பு விளக்கம் கேட்டேன். அதற்கு சரியான விளக்கம் இல்லை. இரண்டு கையெழுத்தை ரத்து செய்தார்கள். அந்த நபர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்கவில்லை. சினிமா மாதிரி திருப்பங்கள் ஏற்படுகின்றன. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இந்த கதியா?. தேர்தல் கமிஷ்ன் பின்னே யார் நிக்கிறார்களோ. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பு கடத்தி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. போன தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தது. இந்த தேர்தலில் ஆளை துாக்குகிறார்கள். என்னால் 10 பேரை முன்மொழிய தயார் செய்ய முடியாதா அடுத்து கோர்ட்டுக்கு செல்வேன். தேர்தல் கமிஷன் உயர் அதிகாரியிடம் செல்வேன். தொடர்ந்து இப்படி பிரச்சினை வருவதால் ஒரு சுயேச்சை வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஆதரவு கொடுத்து அவரை ஜெயிக்க வைப்பேன்”என்று விஷால் கூறினார்.