அடேங்கப்பா.. இந்த அரிசி ரகசியமெல்லாம் விஷாலுக்குத் தெரியுமா?

அடேங்கப்பா.. இந்த அரிசி ரகசியமெல்லாம் விஷாலுக்குத் தெரியுமா?

ஆயிரமாயிரம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக் கூறலாம். பெரும்பாலான ஒட்டு ரக நெல் வகைகள் நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக விளைச்சல்” என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவைதான் இந்த குட்டை ரக நெல்கள். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள், மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் ஆகிவற்றை உள்ளடக்கியதாக இருந்தன. மேலும், மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கும் வலிமையுடையது. சுமார் 160 பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் பசுமைப் புரட்சியால் மறக்கடிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டன.

vishal jun 8

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் கிரியேட், நமது நெல்லை காப்போம் அமைப்புகள் சார்பில் 2 நாள் நடந்த தேசிய அளவிலான நெல் திருவிழா நேற்று நிறைவடைந்தது. மண் வளமும், மேம்பாடும் என்ற தலைப்பில் கோவில்பட்டி வேளாண் அலுவலர் பூச்சி செல்வம் பேசுகையில், ‘இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் ரசாயன உரங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால் மண்ணில் ரசாயனத்தை பயன்படுத்த துவங்கினோம். அதனால், பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த நெல்லை இழந்து விட்டோம். ஒரு பிடி மண்ணில் வண்டல், களி, மணல் இருக்க வேண்டும். இவை மூன்றும் சரி விகிதத்தில் இருந்தால் நல்ல மண். இதில் ஏதாவது குறைந்தால் அதற்கு ஏற்றவாறு நாம் பக்குவப்படுத்திட வேண்டும்’ என்றார்.

காரைக்கால் இயற்கை வேளாண் கல்வி நிறுவனத்தை சார்ந்த டாக்டர் உமாமகேஸ்வரி பேசுகையில், ‘இன்றைக்கு உணவால் தான் நோய்கள் அதிகம் வருகிறது. நோயின் தாக்கத்தால் உலகமே அழிவின் விழிம்புக்கு சென்று கொண்டிருக்கிறது. உலகத்தை நல் வழியில் கொண்டு செல்ல எல்லோருக்கும் பொறுப்புண்டு. நோய் இல்லாமல் வாழ வேண்டுமானால் உணவு பழக்க வழக்கம் அவசியம்’ என்றார்.சென்னை எத்திராஜ் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் சத்துணவியல் துறை பேராசிரியை மேனகா பேசுகையில், ‘பாரம்பரிய நெல்லில் மாப்பிள்ளை சம்பா என்பது திருமணத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டியது. மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி. இதன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலும்கூட இந்தச் சுவை கிடைக்காது என்று சொல்லலாம். கஞ்சியே இவ்வளவு ருசி என்றால், சோறு எவ்வளவு சுவையாக இருக்கும்?

ருசி என்றில்லை, உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு. இதற்கெல்லாம் மேலாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய, பல மருத்துவக் குணங்கள் இந்த அரிசியில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது உணவு மருந்து. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம் இது.

கவுனி அரிசியை திருமணத்திற்கு பிறகும், பூங்காரு என்ற அரிசியை மகப்பேறு காலத்திலும், பால்குடவாரை என்ற அரிசியை குழந்தை பிறந்த பின் பெண்கள் உட்கொள்ள வேண்டும். வாரன்சம்பா என்ற அரிசியை குழந்தை பிறந்த ஆறு மாதம் கழித்து ஊட்ட வேண்டும். காட்டுயானம் கஞ்சி குடித்தால் மூட்டு வழி போகும். இப்படி பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை’ என்றார்.

அது போல் பச்சரிசி

நெல்லை அவிக்காமல் அதில் இருந்து அரிசியை எடுப்பதே பச்சரிசியாகும். இது அவிக்கப்படாத அரிசி என்பதால், ஜீரணம் ஆக கடினமாகவும், அதிக நேரம் எடுக்கும் உணவாகவும் கருதப்படுகிறது. பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

பச்சரிசியின் நன்மைகள்

பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். இதனால் உடலும் பருமனாகும். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

சிகப்பரிசி

சிகப்பரிசி உடல் நலனுக்கு மிகவும் ஏற்ற உணவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் சிகப்பரிசியை பயன்படுத்தி உணவு தயாரிப்பது மிகவும் அரிது. புழுங்கல் அரிசியை விட இது விலை அதிகம் என்பதாலும், இதன் சுவை மற்ற சுவையோடு நன்றாக சேர்வதில்லை என்பதாலும், இதனை உணவில் பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. ஒரு சில மாநிலங்களில் மட்டும் சிகப்பரிசியை உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

சிகப்பரிசியின் நன்மைகள்

சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து போதிய அளவுக்குக் கிடைக்கிறது. மேலும், சிகப்பரிசி சாதத்தை சாப்பிட்டால், உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாக நடைபெறும்.  சிகப்பரிசியில் மேலும் ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் உள்ளன. இது இயற்கையிலேயே உடலுக்கு ஏற்ற உணவாகும்.

பாஸ்மதி அரிசி

இந்தியாவில் உற்பத்தியாகும் அரிசியில் பாஸ்மதி அரிசியும் ஒன்று. எவ்வாறு புழுங்கல் அரிசியில் பல்வேறு ரகங்களும், பல்வேறு விலைகளிலும் விற்கப்படுகிறதோ அதுபோலவே, பாஸ்மதி அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன.  பாஸ்மதி அரிசி வெள்ளை மற்றும் பிரவுன் நிறங்களில் உள்ளன.

மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம். இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் சில வேதி குணங்களும் அடங்கியிருப்பதால், மற்ற ஏனைய அரிசிகளை விட, பாஸ்மதி அரிசி உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன” என்றனர்/

அப்படின்னா இந்த விழாவில்தான் ஆக்டர் விஷால் இந்த அரிசி ரகசியங்களை தெரிஞ்சிக்கிட்டு,  “நான் தஞ்சாவூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன். பத்திரிகைகளில் மட்டும் விவசாயத்தை பற்றி படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. நேரடியாக நிலத்தில் இறங்கிப் பார்த்தால் தான் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.” என்று சொன்னாரோ?

error: Content is protected !!